நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார்.
முதலில் துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸில் மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார். அதன் பிறகு நடந்த போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார். இதைதொடர்ந்து ஸ்பெய்னில் சமீபத்தில் நடந்த 24ஹெச் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். இந்த போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை, அவரது கார் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியிருந்தார். இதற்காகவும் போட்டியில் வெற்றி பெற்றதற்காகவும் சமீபத்தில் தமிழ்நாட்டின் துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்திருந்தார். இப்போட்டியை அடுத்து வரும் டிசம்பரில் நடக்கும் ஆசியன் லெ மான்ஸ் தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர தொடர் மற்றும் அடுத்தாண்டு மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் போட்டியின் போது அவரை உற்சாகப்படுத்த, அவரது ரசிகர்கள் கூடுகின்றனர். அப்போது அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுத்து கொள்வதும் அவருடன் கலந்துரையாட முயற்சிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரேஸ் களத்தில் அஜித் பணிகளை மேற்கொண்டிருக்க, அப்போது அவரது அருகில் இருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்து கையசைத்தனர். உடனே அவரும் கையசைத்து மகிழ பின்பு உடனே ஒரு ரசிகர் விசில் அடிக்கத்தொடங்கி விட்டார். இதனால் கடும் கோபமடைந்த அஜித் அந்த ரசிகரை பார்த்து அப்படி செய்யக்கூடாது என்பதை சைகையால் கோவத்துடன் சொன்னார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.