அஜித்குமார் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே அஜித் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கிய அவர், துபாய் தொடங்கி மலேசியா வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து துபாயில் நடக்கும் 24 ஹெச் சீரிஸ் கார் போட்டியில் கலந்து கொள்கிறார்.
இதனிடையே அவர் மோட்டஸ் ஸ்போர்ட்ஸ் பயணத்தின் ஆவணப்பட முன்னோட்டங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அண்மையில் அவரது அணியின் எனர்ஜி பார்ட்னரான ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா குளிர்பானம் விளம்பரத்தில் நடித்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனால் அஜித்தை அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர். அதாவது முன்னதாக அவர் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியிருந்ததை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் துபாயில் அவரை திரை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் அனிருத் அஜித்தை சந்தித்திருந்தார். இவரைத் தொடர்ந்து சிபிராஜ் தனது குடும்பத்துடன் சந்தித்திருந்தார். பின்பு தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் சந்தித்துள்ளனர். விக்னேஷ் சிவன் முன்னதாக லைகா தயாரிப்பில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகி பின்பு சில காரணங்களால் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஜிவி பிரகாஷும் சந்தித்துள்ளார்.
இந்த சூழலில் அஜித் அணியின் கார் போட்டியின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. அதாவது போட்டியில் பங்கேற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் காரை ஓட்டிச் சென்ற வீரர் அயர்டன் ரெடான்ட் உடனடியாக காரை நிறுத்தி வெளியே சென்று ஓடினார். பின்பு எந்த விபத்தும் இல்லாமல் தீயணைப்பு உபகரணங்கள் வைத்து கார் அணைக்கப்பட்டது. முன்னதாக இதே போன்று அஜித் அணியின் கார்கள் அவ்வபோது விபத்துகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us