அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் தீவிரம் காட்டி வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி துபாய் முதல் போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இதில் துபாய் மற்றும் ஸ்பெய்னில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது மலேசியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்றார். அங்கு அஜித்துடன் இயக்குநர் சிறுத்தை சிவாவும் ஏ.எல்.விஜய்யும் உடன் இருக்கின்றனர். மேலும் சிம்பு சமீபத்தில் அஜித்தை ரேஸ் களத்தில் சந்தித்தார். இதனிடையே அஜித்துடன் புகைப்படம் எடுக்க 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்தும் ரசிகர்கள் ரேஸ் நடக்கும் செபாங் சர்க்யூட்டில் குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில் ரேஸ் முடித்து வந்து கொண்டிருந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். கூட்டம் நடுவே சென்ற அஜித் நடந்து கொண்டே, ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் கூறுகையில், “தயவுசெய்து மற்ற அணிகளைத் தொந்தரவு செய்யாதீர்கள். இது என் நற்பெயரை மட்டுமல்ல, நம் அனைவரது நற்பெயரையும் ஆபத்தில் கொண்டு சென்றுவிடும். அதனால் பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என்றார்.
Follow Us