தென்னிந்தியளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் கடைசியாக ‘தீயவர் குலை நடுங்க’ எனும் படம் இவரது நடிப்பில் வெளியானது. கைவசம் கருப்பர் நகர் மற்றும் மோகன்தாஸ் படங்களை வைத்துள்ளார். இப்படங்கள் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வருகிறது.
தெலுங்கில் இவர் கடைசியாக நடித்த ‘சங்கராந்திகி வஸ்துனம்’ படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் தெலுங்கில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் தனது வாழ்வில் நடந்த மோசமான சம்பவங்களையும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்திருந்ததாவது, “நான் சிறு வயதாக இருக்கும் போது என்னுடைய அண்ணனுடன் ஒரு இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த போட்டோகிராபர் என் அண்ணனை வெளியே உட்கார சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.
பின்பு ஒரு உள்ளாடைகளை மட்டும் கொடுத்து விட்டு, உன் உடலை பார்க்க வேண்டும் என சொன்னார். அந்த வயதில் இந்தத் துறையை பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என நினைத்துவிட்டேன். அதனால் கிட்டத்தட்ட நான் சம்மதித்து விட்டேன். ஆனால் அதற்கு முன் என் அண்ணனிடம் அனுமதி கேட்க வேண்டும் என வெளியே வந்து விட்டேன். அப்படி வராமல் இன்னும் இரண்டு நிமிடம் உள்ளே இருந்திருந்தால் நான் பிரச்சினையில் சிக்கியிருபேன்.
அந்த போட்டோகிராபர் இது போல் எத்தனை பெண்ணிடம் நடந்து கொண்டாரோ தெரியவில்லை. இதை நான் என் அண்ணனிடம் ஒருபோதும் சொல்லவில்லை. காரணம் அப்போது தைரியம் இல்லை... பயமும் கூச்சமும் தான் இருந்தது” என்றார்.
Follow Us