அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த படம் அவரது 50வது படமான ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவரது இசையில் வெளியான பாடல்களும் குறிப்பாக தீம் மியூசிக்கும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
2011ஆம் ஆண்டு வெளியான இப்படம் 14 ஆண்டுகள் கழித்து உலகமெங்கும் இன்று ரீ ரிலீஸாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை உற்சாகத்துடனும் கொண்டாட்டத்துடனும் வரவேற்றுள்ளனர். அவர்களோடு படக்குழுவினர் வெங்கட் பிரபு, வைபவ், மகத் உள்ளிட்டோரும் திரையரங்கம் சென்று படத்தை கண்டு களித்தனர். இவர்களை தவிர்த்து அஜித்தின் மனைவி மற்றும் நடிகை ஷாலினியும், திரையரங்கில் படத்தை கண்டு களித்தனர்.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் திரையரங்கில் படத்தை கொண்டாத்துடன் பார்த்து ரசித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிப்ரவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்காக எடுத்தது. ஆனால் இந்த படம் குடும்ப ரசிகர்களுக்காகவும் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்காகவும் எடுக்கவுள்ளோம். அவர்கள் அனைவரும் என்ஜாய் பண்ணி பார்க்கிற ஒரு என்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும்” என்றார்.
Follow Us