பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிப்பில் ஆர்வமிக்க 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான கோச்சிங், தங்கும் இடம், உணவு எல்லாவற்றையும் வழங்கி, இந்தியாவின் உயரிய கல்வி அமைப்பான ஐ.ஐ.டியின் தகுதித் தேர்வுகளுக்கு தயார்படுத்தி அனுப்பும் ஆனந்த் குமாரின் கதை ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் விகாஷ் பாஹ்ல் இயக்கத்தில் சூப்பர் 30 என்ற பெயரிலேயே படமாகியிருக்கிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
திரைப்படத்தின் பெரிய பலம், அதில் இருக்கும் உண்மைத்தன்மை. ஒரு ஆச்சர்யமான மனிதரின் ஆச்சர்யமான கதை இது. படத்தைப் பெரிதும் இழுத்துப் பிடிப்பதும் இந்த உண்மைக் கதைதான். கணிதத்தின் மீது அளவுகடந்த காதல் கொண்டிருக்கும் ஆனந்த் குமார் அதையே உலகமாக்கிக் கொண்டு வாழ்கிறான். ஒரு கட்டத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தும் போதுமான பணம் இல்லாத காரணத்தாலும் தந்தையின் திடீர் மரணத்தாலும் அந்த வாய்ப்பு பறிபோகிறது. குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டு சைக்கிளில் சென்று அப்பளம் விற்க ஆரம்பிக்கிறான் ஆனந்த் குமார். யதேச்சையாக அவனை தெருவில் பார்க்கும் ஒரு கோச்சிங் சென்டரின் நிறுவனர், அவன் நிலையை பார்த்து, அதன் மூலம் அவனது அபாரமான ஞானத்தை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். கல்விதான் இந்தியாவின் அடுத்த பெரிய வியாபாரம் என்பதை உணரத் தொடங்கி, ஐ.ஐ.டி போன்ற கல்வி அமைப்புகளுக்கான தகுதித் தேர்வுகளுக்கு தயார்ப்படுத்தும் கோச்சிங் சென்டர்கள் இந்தியாவில் தெருவுக்கு ஐந்து தோன்றிக் கொண்டிருந்த காலகட்டம் அது.
ஆனந்த் குமாரும் தனக்குப் பிடித்த கணிதத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் ஆர்வத்தில் அந்த கோச்சிங் சென்டரில் சேர்கிறார். அவரின் வருகைக்குப் பிறகு கோச்சிங் சென்டரின் மவுசு கூடுகிறது. ஆனந்த் குமாரின் சைக்கிள் பைக்காகிறது. வீட்டிற்கு டிவி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக சொகுசு வாழ்க்கையின் சவுகரியங்களுக்கு பழக்கப்பட ஆரம்பிக்கும் ஆனந்த் குமாருக்கு ஒரு இரவில் ஞானோதயம் பிறக்கிறது.
தனக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பை தானும் தன்னைப் போன்ற மாணவர்களுக்கு மறுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வும் பிறக்கிறது. அடுத்தநாளே கோச்சிங் சென்டர் வேலையை உதறும் ஆனந்த் குமார், தனியாக ஒரு கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கிறார். அதே ஐ.ஐ.டி தகுதித் தேர்வுகளுக்கு. ஆனால் இது முழுக்க முழுக்க இலவசமான பயிற்சி. அதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் அளிக்கப்படும் பயிற்சி. அதுபோன்ற 30 மாணவர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கான பயிற்சியை ஆரம்பிக்கிறார். ஆனந்த் குமாரின் இந்த திடீர் முடிவினால் பணம், பெயர் எல்லாவற்றையும் இழக்கும் பழைய கோச்சிங் சென்டரின் தலைவர், அதன் மறைமுக நிறுவனராகிய அமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஆனந்த் குமாருக்கு தரும் தொடர் இடையூறுகளில் இருந்து தப்பித்து, தன்னையும் தன் வகுப்பையும் காத்துக்கொண்டு, எப்படி அந்த 30 மாணவர்களையும் தகுதித் தேர்வுகளுக்கு தயார்ப்படுத்துகிறார், அவர்கள் அந்தத் தேர்வில் வெல்கிறார்களா என்பதே சூப்பர் 30.
புத்தகமாகவும், ஆவணப்படமாகவும் வந்துவிட்ட ஆனந்த்குமாரின் இந்தக் கதை இப்போது திரைப்படமாகியிருக்கிறது. இந்தக் கதையின் உண்மைத்தன்மை எப்படி படத்தை தாங்கிப் பிடிக்கிறதோ அதேபோல இதில் சுவாரசியத்திற்காக சேர்க்கப்பட்டுள்ள செயற்கைத்தனமான காட்சிகள் படத்தை பின்னுக்குள் இழுக்கின்றன. படத்தின் இயல்புத்தன்மை குறையக் குறைய படத்தின் மீதான சுவாரசியமும் குறைந்து கொண்டே போகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
ஆரம்பத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு புத்திசாலி மாணவனின் கதையாக ஆரம்பிக்கும் சூப்பர் 30, ஆனந்த் குமாரின் முயற்சிகள், அவமானங்கள், போராட்டங்கள், தோல்விகள் என ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக விரிகிறது. தனியார் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பொருள் ஈட்டி சொகுசு வாழ்க்கை வாழத் துவங்கும் ஆனந்த் குமாருக்கு உண்மை புரியும் காட்சியும் அதற்கடுத்து அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் ஒரு பெரும் பயணம் இரண்டாம் பாதியில் காத்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனந்த் குமார் 30 பேரை தேடிக் கண்டுபிடித்து வகுப்பை ஆரம்பிக்கும் போது, தனியார் கோச்சிங் சென்டர் உரிமையாளர் அந்த இடத்திற்கே வந்து சவால் விடும் இடைவேளை காட்சி நாடகத்தனமாய் இருந்தாலும் அது ஏற்படுத்தும் உணர்வெழுச்சியின் கனம், அதை மறக்க வைத்து, கண்ணீருடன் இரண்டாம் பாதிக்கு காத்திருக்க வைக்கிறது.
ஆனால் படத்தின் பெரும் பலவீனம் இரண்டாம் பாதிதான். ஆனந்த் குமாரின் பிரம்மிப்பூட்டும் முயற்சியின் வெற்றியை காணக் காத்திருக்கும் நம்முன் திரையில் விரிவது, நாடகத்தனம் மிகுந்த, செயற்கையான காட்சியமைப்புகள்தான். முதல் பாதியிலும் அதுபோன்ற காட்சிகள் அங்கிங்கு இருந்தாலும், அதில் இருந்த ஆழழும் உணர்வுகளும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். இதனாலேயே கொஞ்சம் கொஞ்சமாக சுவாரசியம் இழக்கிறது சூப்பர் 30.
தன் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்குவதற்காக வீதி நாடகம் போடச் சொல்லி அங்கு ஒரு பாட்டு பாடுவது, ஆன்ந்த்குமாரை கொலை செய்ய முயற்சிக்கும் ரவுடிகளை மாணவர்கள் தாங்கள் கற்ற விஞ்ஞானத்தை வைத்தே விரட்டியடிப்பது போன்ற காட்சிகள், கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் பார்க்கும்போது ஏற்படுத்த வேண்டிய சுவாரசியத்தையும் உணர்வுகளையும் தரத் தவறிவிடுகின்றன.
இரண்டாம் பாதியிலும் பல கனமான காட்சிகள் உள்ளன. ஆனந்த் குமாரின் சூப்பர் 30 வகுப்பால் கைவிட்டுப் போன காதலியை அவர் மீண்டும் பார்க்கும் தருணம், அங்கே ஆனந்த்குமாருக்கு அவர் செய்யும் உதவி போன்ற காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டை மையமாக வைத்த திரைப்படங்களின் இரண்டாம் பாதியில் வரும், பின்தங்கிய மாணவர்கள் கொண்ட அணியும், பலம் பொருந்திய அணியும் போட்டி போடுவது போன்ற திரைக்கதை முறையே இந்த படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டுப் படங்களுக்கு அது பொருந்தும். ஆனால் இதுபோன்ற உணர்வாழம் மிக்க நிஜக் கதைகளுக்கு பொருந்துமா?
ஆனால் படத்தின் இறுதிக்கட்டம் பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. அந்த 30 மாணவர்களின் யாராவது ஒருவராவது ஐஐடி க்கு தேர்வானார்களா என்று நாம் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் போது, 30 பேருமே தேர்வாகியிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் போது, ஆனந்த் குமாருக்கு எழும் அதே உணர்வும் கண்ணீரும் நமக்கும் எழுகிறது. நிஜத்தில் இது நிகழ்ந்திருக்கிறது என்பதும், அந்த 30 மாணவர்கள் மீது நமக்கும் ஏற்படும் பிடிப்பும் இதற்கு ஒரு காரணம்.
இதுபோன்ற ஒரு கதையில் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். ஆனால் படத்தில் ஆரம்ப காட்சிகளில் அவரிடம் தெரியும் ஆனந்த் குமாருக்கான உடல் மொழி, படம் நகர நகர மறைந்து, ஹ்ரித்திக் ரோஷனே தெரியத் துவங்குகிறார். அமைச்சர், தனியார் கோச்சிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோரின் பாத்திரங்களும் செயற்கையான வில்லத்தனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் சமூக ஏற்றத்தாழ்வுகளை விளக்கிக் காட்டக் கூடிய தருணங்கள் படம் முழுக்க நிறைய இருந்தாலும், அவர்கள் சாப்பிடவில்லை, பசியோடு படிக்கிறார்கள் என்கிற அளவில் மட்டுமே அது சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு தன்னம்பிக்கை மனிதர்... அவரின் உத்வேகமான கதை... இயல்பிலேயே நிறைய உணர்வெழுச்சி தரும் தருணங்களை கொண்டிருக்கும் இந்தக் கதை, திரையில் அதே போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால் இல்லைதான். ஆனாலும் கல்வி என்பதே ஒரு சாராருக்கானதாய் மறுபடியும் மாற்றப்பட சட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், கல்வி மீண்டும் ஒரு சாராருக்கு எட்டாக்கனியாய் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், கல்வியின் அவசியம் என்ன, சமூகத்தின் சமத்துவத்திற்கு கல்வியின் சமத்துவம் எத்தனை அவசியம் என்பதை பேசும் சூப்பர் 30 நிச்சயம் ஒரு ஆரோக்கியமான முயற்சிதான்.