சமீப காலமாக அம்மா வேடத்தில் பலரையும் கவர்ந்தவர் நடிகை துளசி. ஆனால் இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே தொடர்ந்து நடித்து வருகிறார். அதாவது இவர் பிறந்த மூன்று மாதத்திலேயே ‘பர்யா’என்ற தெலுங்கு படத்தில் தோன்றியுள்ளார். அப்படத்தில் ஒரு பாடலுக்கு குழந்தை தேவைப்பட்டதால் இவரை நடிகை சாவித்ரி துளசியின் தாயாரிடம் அனுமதி கேட்டு நடிக்கவைத்துள்ளார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து கமலின் சகலகலா வல்லவன், மகாநதி, ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் ஆகிய படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்தார். அடுத்து அம்மா கதாபாத்திரத்தில் மங்காத்தா, சுந்தரபாண்டியன், ஆதலால் காதல் செய்வீர், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சமீபத்தில் வெளியான ஆரோமலே படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/19/20-18-2025-11-19-11-44-21.jpg)
இந்த நிலையில் இவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த டிசம்பர் 31ஆம் தேதி எனது ஷீரடி தரிசனத்தின் தொடர்ச்சியாக நான் மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுகிறேன். சாய்நாதாவுடன் நிம்மதியாக எனது பயணத்தை தொடருவேன். வாழ்க்கையை கற்றுக்கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், “என்னுடைய புதிய சுதந்திரத்தில், சாகசங்கள் நிறைந்த ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கப் போகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தீவிர சாய் பாபா பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அவர் கன்னட இயக்குநர் சிவமணியை தனது 28வது வயதில் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்பு நடிப்பில் இருந்து விலகியிருந்தார். ஆனால் பின்பு அவரது மகன் ஆறு வயது கடந்த பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
Follow Us