கேரளாவில் 2017ஆம் ஆண்டு ஒரு மலையாள நடிகை 6 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடைமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. 8 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி எனவும் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் நிரபராதி எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் முதல் குற்றவாளி பல்சர் சுனிலுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7.5 லட்சம் அபராதமும் மற்ற ஐந்து குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 

Advertisment

இந்த தீர்ப்பில் திலீப்பின் விடுதலை கடும் விவாதத்துக்கு உள்ளானது. மலையாள நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன் மற்றும் ரீமா கலிங்கல் உள்ளிட்ட பலரும் திலீப் விதலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களோடு பெண்கள் நல அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே கேரளா அரசு சார்பில் திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். 

Advertisment

இதனிடையே பாதிக்கப்பட்ட அந்த நடிகை, இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை என்றும் ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை என்றும் உருக்கமுடன் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் வேதனையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நான் செய்த தவறு எனக்கு எதிராக வன்கொடுமை நடந்த போது போலீசில் புகார் கொடுத்ததும் சட்டத்தை நோக்கி முன்னேறியதும் தான். 

அன்றைக்கே நடந்ததெல்லாம் விதி என்று யாரிடமும் எதுவும் சொல்லாமல் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்திருக்க வேண்டும். பின்பு எப்போதாவது அந்த வீடியோ வெளியே வரும் போது இதை ஏன் அன்றைக்கே போலீசில் சொல்லவில்லை என்று என்னை குற்றம் சாட்டியவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தற்கொலை செய்திருக்க வேண்டும். 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாம் குற்றவாளி, சிறைக்கு செல்வதற்கு முன் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அதில், ‘உன் ஆபாச வீடியோவை எடுத்தது நான்தான்’ என சொல்கிறார். உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ, இதுபோன்ற வக்கிரங்களைச் சொல்லி பரப்புபவர்களுக்கோ இந்த நிலைமை ஏற்படக்கூடாது. நான் பாதிக்கப்பட்டவளும் இல்லை, அதில் இருந்து உயிர் பிழைத்தவரும் இல்லை, சாதாரண மனிதர். என்னை வாழ விடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment