Advertisment

“ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில் எனக்கான இடம்” - நடிகை ராதிகா ஓபன் டாக்!

radhika

Actress Radhika's open talk about her Thaai Kizhavi movie

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி விருதுநகர் ராஜலட்சுமி திரையரங்கில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராதிகா, ரசிகர்கள் மத்தியில் மேடையேறி பேசினார். அப்போது அவர், “படத்தை ரசித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்த்திருந்தால், அதை கேட்கவே எனக்கு மிகுந்த சந்தோஷம். ஏனெனில் இக்காலத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே, அதே நேரத்தில் ஒரு கருத்தையும் சொல்லும் தரமான படங்கள் அரிதாகவே வருகின்றன. அப்படி ஒரு நேரத்தில் இந்த படம் வந்திருக்கிறது என்பதில் உண்மையாகவே மகிழ்ச்சி இருக்கிறது. அதற்குக் காரணம் முக்கியமாக எங்கள் இயக்குநர் சிவகுமார் முருகேசன். மதுரையைச் சேர்ந்தவர். இந்த மொழியில் பேச என்னைத் தயார் செய்யவே எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால் அவர் மிகவும் பொறுமையுடன் உழைத்தார். 

Advertisment

நாங்களும் இந்தப் படத்தில் உண்மையிலேயே பாடுபட்டு நடித்திருக்கிறோம். இதில் நடித்திருப்பவர்கள் பலரும் திறமையானவர்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே. கதை இப்போது எங்கு வந்திருக்கிறது பாருங்கள். ‘கிழவி’ அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்குள் இருக்கிறது. இப்படிப்பட்ட கதையை எடுக்கத் துணிச்சல் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நான் நன்றியைத் தெரிவிக்கிறேன். ஸ்டூடியோவிற்கும், இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தில் என் மகள் சுருளியாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் என்னை அழகாக ஒரு கிழவியாகக் காட்டியிருக்கிறார். அவருக்கும் என் நன்றி. தமிழ்நாடு முழுவதும் இந்தப் படம் வெற்றிப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் குடும்பத்துடன் வந்து பார்க்கிறார்கள் என்று கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் திரையரங்குக்கு வந்து ரசிகர்களைச் சந்தித்தது பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசியாக ‘மூன்று முகம்’ படத்தின் போது ரஜினிகாந்துடன் மதுரைக்கு வந்தது நினைவுக்கு வருகிறது.

Advertisment

இன்று இங்கே வந்து உங்கள் சந்தோஷமான முகங்களைப் பார்க்கும்போது எனக்கு பெருமை. இந்தப் படம் நல்ல படம் என்று உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் சொல்லுங்கள். வந்து பார்க்கச் சொல்லுங்கள். ‘கிழவி’ அழகாக இருக்கிறார் என்பதையும் சொல்ல மறக்காதீர்கள். இப்படிப் பட்ட நல்ல, கருத்துள்ள படங்களுக்கு நீங்கள் தரும் வரவேற்பே  சினிமாவை வளரச் செய்யும். இயக்குநர் சார்பாகவும் நான் பேசுகிறேன். அவர் அதிகமாக பேச மாட்டார். என்னிடம் மட்டும் அதிகம் பேசுவார். இந்த மொழி சரியாக வரும்வரை என்னை விடமாட்டார். ‘அப்படித்தான் சொல்ல வேண்டும்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லுவார். நான் அவரிடம் ‘கொஞ்சம் நல்ல தமிழில் பேச முடியாதா?’ என்று கூட கேட்டிருக்கிறேன். இந்தப் படம் முடியும் போது நான் ஏன் இதில் நடித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு பெண்ணாக, இவ்வளவு ஆண்டுகள் இந்த ஆண் ஆதிக்கம் நிறைந்த சினிமா துறையில் நான் நிலைத்து நிற்கிறேன். அது எளிதல்ல. ஆனால் என் மீது உள்ள நம்பிக்கையால், எனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டேன். அதில் எனக்கு பெருமை உண்டு. இன்று உங்களை நேரில் சந்திப்பதில் அதைவிட பெரிய பெருமை இருக்கிறது. படத்தைப் பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். நாம் அனைவரும் சமூக ஊடகங்களில் இருக்கிறோம். உங்கள் கருத்துகளை பகிருங்கள். பலரும் சொல்வார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த், ‘உங்கள் அப்பா போலவே பேசுகிறீர்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். அது எனக்கு மிகப் பெரிய பெருமை.” என்றார்.  

ஆணாதிக்கம் ஒரு தடையல்ல; தாண்ட வேண்டிய சவால்!

Movie radhika
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe