நடிகர் ரோபோ சங்கர் (வயது 46) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று (18.09.2025) இரவு 08:30 மணியளவில் உயிரிழந்தார். முன்னதாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
ரோபோ சங்கரின் உடல் இன்று இரவு அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை (19.09.2025) இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ரோபோ சங்கர் தீபாவளி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், தனுசு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துத் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருந்தார்.
ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ரோபோ சங்கர் ரோபோ புனைபெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” எனத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சின்னதிரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கர் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/18/roba-shankar-2025-09-18-21-53-47.jpg)