பாலிவுட்டில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மூத்த நடிகர் கோவிந்தா. நகைச்சுவை கலந்து கதாபாத்திரத்திலும் தனது நடனம் மூலமும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். தமிழில் ரம்பா, ஜோதிகா, லைலா நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘த்ரீ ரோஸஸ்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்ட அவர், 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின்பு இந்தாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பாக அவரது நண்பரும் அவரது சட்ட ஆலோசகருமான லலித் திண்டால் கூறுகையில் “நேற்று இரவு 8.30 மணியளவில் அவர் திடீரென சுய நினைவை இழந்து மயக்கம் அடைந்தார். பின்பு மருத்துவரை அவரது குடும்பத்தினர் தொலைபேசி மூலம் அணுகினர். அவர் பரிந்துரைத்த மருந்துகளை கோவிந்தாவுக்கு கொடுத்துள்ளனர். ஆனால் அதன் பின்பும் சரியாகவில்லை. அதனால் மருத்துவமனைக்கு நள்ளிரவில் கொண்டு சென்றுள்ளனர். அவர் இப்போது நிலையாக இருக்கிறார். மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கோவிந்தா கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தல் செய்த போது கீழே விழுந்து வெடித்ததில் அவரது முழங்காலுக்கு கீழே குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இது தொடர்பாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த குண்டு எடுக்கப்பட்டு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us