Advertisment

சினிமாவில் காட்டப்படும் காதல் நிஜத்திலும் நடக்குமா? - ‘ஆரோமலே’ விமர்சனம்

19 (13)

தமிழ் சினிமாவில் பல்வேறு காதல் திரைப்படங்கள் வெளியாகி சக்கை போடு போட்ட காலம் மலை ஏறி போய் வெகு நாளாகிவிட்டது. இப்பொழுது வரும் காதல் திரைப்படங்கள் இந்த கால ஜென்-சி கிட்ஸ்களை மையப்படுத்தி வெளியாகி வருகின்றன. அவை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த படமாக இருக்கிறதா என்றால் சந்தேகமே. அந்த வகையில் பழைய காதல் புதிய காதல் என பள்ளி பருவம் முதல் வேலைக்கு செல்லும் காதல் வரை சொல்லும் படமாக வெளியாகி இருக்கும் இந்த ஆரோமலே திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா, இல்லையா?

Advertisment

பள்ளி பருவத்தில் ஆரம்பித்து கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பருவம் வரை பல்வேறு காதல்களில் மூழ்கி முத்து எடுத்து அடி வாங்கி மிகவும் சோர்ந்து போகிறார் நாயகன் கிஷன் தாஸ். சினிமா பாணியில் தனது வாழ்வில் காதல் அமைய வேண்டும் என என்னும் கிஷன் தாஸுக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. பிறகு அப்பாவின் வலியுறுத்தலின் பேரில் ஒரு மேட்ரிமோனி கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார். சென்ற இடத்தில் நாயகி சிவாத்மிகாவை சந்திக்கிறார். காதல் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் பிராக்டிகல் வாழ்வில் ஈடுபாடாக இருக்கிறார் சிவாத்மிகா. அங்கு ஹெச் ஆர் ஆக இருக்கும் அவர் கிஷன் தாஸை போட்டு புரட்டி எடுக்கிறார். இவர்கள் இருவருக்கும் வேலை போட்டி நடக்கிறது.

Advertisment

ஒரு கட்டத்தில் ஆண்மைத் தன்மை இழந்த விடிவி கணேஷுக்கு எப்படியாவது திருமணம் நடத்தி வைக்கிறேன் என நாயகனும் நாயகியும் சவால் விட்டுக் கொள்கின்றனர். அந்த சவாலில் யார் வெற்றி பெறுகிறார்களோ தோற்றவர் வேலையை விட்டு செல்ல வேண்டும் என முடிவெடுக்கின்றனர். இதைத்தொடர்ந்து கிஷன் தாஸும், சிவாத்மிகாவும் மாறி மாறி அவரவர் பாணியில் விடிவி கணேசுக்கு பெண் பார்க்கின்றனர். இதற்கிடையே கிஷன் தாஸுக்கு சிவாத்மிகா மீது காதல் மலர்கிறது. சிவாத்மிகாவோ காதல் மேல் மிகவும் வெறுப்பாக இருக்கிறார். இதைத்தொடர்ந்து இறுதியில் விடிவி கணேசுக்கு திருமணம் நடந்ததா, இல்லையா? கிஷன் தாஸ் காதல் கைகூடியதா? சவாலில் யார் ஜெயித்தார்கள்? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

ஒரு வழக்கமான காதல் கதையை எடுத்துக்கொண்டு அதனுள் மேட்ரிமோனி சம்பந்தப்பட்ட விஷயத்தை இதுவரை சினிமாவில் காட்டிராத ஒரு கோணத்தில் காண்பித்து ஒரு ரசிக்க வைக்கும் கலகலப்பான காதல் திரைப்படமாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார் மூத்த நடிகர் தியாகுவின் மகனும் புதுமுக இயக்குநருமான சாரங் தியாகு. சினிமாவை பார்த்து அதே போல் ஒரு கனவுலக காதல் வாழ்க்கை நமக்கும் அமைய வேண்டும் என்னும் ஒரு இளைஞனின் வாழ்வில் உண்மையான காதல் என்ன என்பதை அவர் வாழ்வில் சந்திக்கும் நபர்களை வைத்து அதனால் ஏற்படும் அனுபவம் மூலம் அவர் அறியும் படியான திரைக்கதை அமைத்து அதை சுவாரஸ்யமான முறையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படியான காதல் திரைப்படமாக கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார். 

படம் ஆரம்பித்து முதல் பாதி வரை மிக மிக விறுவிறுப்பாக கலகலப்பான படமாக நகரும் திரைப்படம் இரண்டாம் பாதியில் இருந்து காதல், நெகிழ்ச்சி, குடும்பம் என நகர்ந்து இறுதி கட்டத்தில் குழப்பமான தெளிவில்லாத முடிவோடு படம் முடிந்திருக்கிறது. இறுதிக்கட்டம் வரை சிறப்பான படமாக சென்று கிளைமாக்ஸில் மட்டும் சற்றே தடுமாறி இருக்கிறது. இயக்குநர், சொல்ல வந்த விஷயத்தை இறுதி கட்ட காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். கடைசியில் காதல் சொன்ன இடத்தில் நாயகன் நாயகி மேல் எந்த ஒரு தவறும் இல்லாத பட்சத்தில் அதை குற்ற உணர்ச்சியாக காண்பித்து பின் ஏதேதோ திசையில் படம் பயணித்து இறுதி கட்டத்தில் நாயகன் நாயகி ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை அழுத்தம் இல்லாத காட்சிகள் மூலம் காண்பித்து இருப்பது மட்டும் சற்று மைனசாக அமைந்திருக்கிறது. இருந்தும் 90 சதவீத படம் சிறப்பான படமாக அமைந்திருப்பது இந்த படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்து வெற்றி பெற செய்திருக்கிறது. 

நாயகன் கிஷன் தாஸ் அழகாக இருக்கிறார், கலகலப்பான இளைஞர் வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி சிவாத்மிகா முதல் முறையாக தனக்கு சரியான ஒரு வேடத்தை தேர்ந்தெடுத்து அதனை மிக சிறப்பாக செய்திருக்கிறார். மிகவும் ரூடான பெண்ணாக வரும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. இவரின் எதார்த்த நடிப்பு கவனம் பெற்று இருக்கிறது. காமெடிக்கு பொறுப்பு ஏற்று ஹீரோவின் நண்பராக வரும் ஹர்ஷத் கான் தான் வரும் காட்சிகளில் எல்லாம் குணச்சித்திர பாத்திரம் மற்றும் காமெடி கதாபாத்திரம் இரண்டையும் சிறப்பான முறையில் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். தனது ஆன்லைன் பஞ்ச் வசனங்கள் மற்றும் காமெடி வசனங்கள் மூலம் சிறப்பான முறையில் ரசிக்க வைத்து கவனம் பெற்று பல்வேறு இயக்குநர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

விடிவி கணேஷ் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். நாயகனின் தந்தையாக வரும் ராஜா ராணி பாண்டியன் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகனின் அம்மா துளசி வழக்கம்போல் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தோன்றி அனுபவ நடிப்பின் மூலம் கவனம் பெற்று இருக்கிறார் காத்தாடி ராமமூர்த்தி. படத்திற்கு தன் குரலை மட்டும் கொடுத்து படத்திற்கு உதவி இருக்கிறார் நடிகர் சிம்பு. இவர் ஆரம்பகட்ட காட்சிகளில் தன் குரல் மூலம் படத்தை வசிகரிக்க செய்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். 

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். காதல் திரைப்படத்திற்கு உண்டான காட்சி அமைப்புகள் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். சித்து குமார் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. கதைக்கு ஏற்றார் போல் கதை ஓட்ட சம்பந்தப்பட்ட பாடல்களாக இப்படத்திற்கு பாடல்களை கொடுத்திருக்கும் சித்து குமார் தனது ட்ரேட் மார்க் சிக்னேச்சர் இசையில் ஒரு நல்ல மெலடி பாடல் கொடுத்திருக்கலாம். மற்றபடி தனக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்து படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று இருக்கிறார். இவரது பின்னணி இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. 

சினிமாவைப் பார்த்து அதேபோல் நமக்கும் காதல் வாழ்க்கை ஏற்பட வேண்டும் என கனவுலகில் வாழும் இளைஞர்களுக்கு நிதர்சன காதல் வாழ்க்கை என்பது வேறு என்ற  ஒற்றை வரி உண்மை கதையை எடுத்துக் கொண்டு அதை அனைத்து தரப்பு ரசிகர்கள் ரசிக்கும்படி ஒரு காதல் கலந்த கலகலப்பான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி அதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறது இந்த ஆரோமலே குழு. இருந்தும் இறுதிக்கட்ட கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் கூட சிறப்பாக செய்திருக்கலாம்.

ஆரோமலே - நிதர்சன காதல்!

Movie review
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe