ஜோ படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் கவனிக்கத்தக்க படங்களாக கொடுத்து வரும் நடிகர் ரியோ ராஜ் இந்த முறை ஆண்பாவம் பொல்லாதது படம் மூலம் கோதாவில் குதித்து இருக்கிறார். இன்றைய கால 2கே இளம் தலைமுறையினரின் திருமண வாழ்வில் அரங்கேறும் விஷயங்களை கையில் எடுத்திருக்கும் இந்த ஆண்பாவம் அண் டீம் எந்த அளவு அதை பார்ப்பவர்களுக்கு கனெக்ட் செய்யும்படி கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்....

Advertisment

ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருக்கும் ரியோவுக்கும் கோயம்புத்தூரில் வசிக்கும் மாளவிகா மனோஜுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. இருவரும் ஆரம்ப கட்டத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் போகப் போக இருவர்களுக்குள் ஈகோ சண்டை பெரிதாகி கடைசியில் விவாகரத்து வரை செல்கிறது. இந்த விவாகரத்து வழக்கை ரியோ சார்பாக ஆர் ஜே விக்னேஷும், மாளவிகா சார்பாக ஷீலாவும் கையில் எடுக்கின்றனர். அந்த இரண்டு வக்கீல்களுமே முன்னாள் கணவன் மனைவி ஆவர். இதனால் விவாகரத்து கேஸ் சூடு பிடிக்கிறது. இதைத் தொடர்ந்து ரியோவுக்கும் மாளவிகாவுக்கும் விவாகரத்து ஆனதா, இல்லையா? என்பதே இந்தப் படத்தின் மீதி கதை. 

Advertisment

ஒரு கதையாக கேட்கும் பொழுது இது ஒரு சுமாரான கதையாக தோன்றினாலும் திரைக்கதை இன்றைய கால இளைய தலைமுறை வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருப்பது கதையோடும் படத்தோடும் நம்மை ஒன்ற வைத்து இருக்கிறது. அதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி படத்தையும் வெற்றி பெற செய்து கரை சேர்த்திருக்கிறது. மிகவும் கசப்பான ஒரு ஈகோ சண்டையை படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கலகலப்பான முறையில் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து கொடுத்து அனைத்து தரப்பட்ட ரசிகர்களையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கலையரசன் தங்கவேல். சாதாரண கணவன் மனைவி படமாக ஆரம்பிக்கும் திரைப்படம் போகப்போக ஜனரஞ்சகமான முறையில் ரசிக்கும்படி அமைந்து இரண்டாம் பாதியில் இருந்து கோர்ட்டு டிராமாவாக அடுத்தடுத்து திருப்புமுனைகளோடு கூடிய படமாக நகர்ந்து இறுதி கட்டத்தில் பார்ப்பவர்களின் நெகிழ வைக்கும் படி முடிந்திருப்பது படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

18 (7)

இந்த கால திருமண வாழ்வில் நடக்கும் ஈகோ சண்டையை ஆண்கள் பாயிண்ட் ஆப் வியூ-வில் மிக மிக சிறப்பாக கூறி இப்படத்தை பார்க்கும் பல ஆண்களுக்கு அப்படியே அவர்களை படத்தில் காண்பது போல் காட்சி அமைப்புகளை அமைத்திருப்பது படத்திற்கு இன்னொரு பிளஸ். அதையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிகவும் கலகலப்பான முறையில் கதை சொல்லி இருப்பது அதே சமயம் அழுத்தமான காட்சிகளாலும் காதல் காட்சிகளாலும் மனதை தொடும்படி காட்சிகள் கொடுத்து இருப்பதும் படத்திற்கு மற்றொரு பிளஸ். இப்படி படம் முழுவதும் பல பிளஸ்கள் நிறைந்து இருப்பது இப்படத்தை வெற்றி பெற செய்திருக்கிறது. 

Advertisment

ஜோ படத்திற்கு பிறகு பிராமிசிங் ஆன கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ரியோ ராஜ். அந்த வரிசையில் இந்த படத்தில் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். எந்தெந்த இடங்களுக்கு எந்த அளவு வசன உச்சரிப்பு தேவையோ அதை சரியான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சிறப்பான முறையில் நடித்து கைதட்டல் பெற்று இருக்கிறார். இவருக்கு சரிசம போட்டியாளராக நடித்திருக்கும் நாயகி மாளவிகா மனோஜ் ஜோ படத்திற்கு பிறகு ரியோ ராஜுடன் ஜோடி சேர்ந்து இந்த படத்திலும் சிறப்பான முறையில் நடித்து அதகளப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் ரியோவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் சிறப்பான முறையில் ஏட்டிக்கு போட்டியாக நடித்து ரசிக்க வைத்து கைத்தட்டல் பெற்று இருக்கிறார். ஆர் ஜே விக்னேஷ் காந்த் இந்த படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். அதையும் சிறப்பான முறையில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இதுவரை பார்க்காத ஆர் ஜே விக்னேஷ் இந்த படத்தில் பார்க்க நேர்கிறது. அந்த அளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

பெண் வக்கிலாக வரும் ஷீலா தனக்கு கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். ஆர் ஜே விக்னேஷின் ஜூனியர் ஆக வரும் லவ்வர் பந்து திவாகர் ஆன்லைன் பஞ்சுகள் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார். அதேசமயம் கதையோடு ஒன்றி நடித்து கவனம் பெற்று கைதட்டலும் பெற்று இருக்கிறார். மாளவிகாவின் அப்பாவாக வரும் ஏ வெங்கடேஷ் சில நிமிடங்களிலே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல் ரியோவின் அப்பாவாக வரும் ராஜா ராணி பாண்டியன் அவரும் சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். 

ஜோ படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் சித்து குமார் கதைக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றார் போல் இசையையும் அளவாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். இப்போதுள்ள அனிருத் மற்றும் சாய் அபயங்கரின் இறைச்சலான இசைகளுக்கு நடுவே பரவசம் ஊட்டும் நேர்த்தியான இசையை கொடுத்து கேட்பவர்களுக்கு பரவசம் ஏற்படுத்தி இருக்கிறார். குறிப்பாக மருமகனே பாடல் குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. அதையும் படத்தில் சேர்த்து இருக்கலாம். அதேபோல் படத்தின் பின்னணி இசையும் மிக சிறப்பாக கொடுத்து தான் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் படம் கலர்ஃபுல். அதேபோல் இரண்டாம் பாதி கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். 

ஒரு சுமாரான கதையை எடுத்துக்கொண்டு அதனுள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் ஒரு நல்ல மெசேஜை வைத்துக்கொண்டு படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரு விதமான கிண்டல் நக்கல் நையாண்டி போன்ற காமெடி எலிமெண்ட்ஸ்களை திரைக்கதையோடு உட்புகுத்தி அதை ஃப்ரெஷ்ஷான காட்சி அமைப்புகளாக கொடுத்து பார்ப்பவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து இருக்கிறது இந்த ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம். அதையும் ஆண்கள் பார்வையில் மிக நகைச்சுவையாக கூறியிருந்தாலும் பெண்களும் ஏற்றுக் கொள்ளும்படி இரண்டு தரப்பிற்கும் ஏற்றார் போல் கதை அமைப்பை உண்டாக்கி அதை சிறப்பான முறையில் ரசிக்கவும் வைத்திருக்கிறது இந்த ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம். 

ஆண்பாவம் பொல்லாதது - ஆண்களின் குமுறல்!