சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50’ என்ற பாராட்டு விழா இன்று (13.9.2025) நடைபெற்றது.  இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இளையராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. பேசுகையில், “உயிரே உறவே தமிழே வணக்கம். மொத்தமாகச் சுருக்கமாக எல்லாரையும் வரவேற்க வேண்டும் என்றால் அரங்கத்திலும் மேடையிலும் வீற்றிருக்கும் இளையராஜா ரசிகர்களே அனைவருக்கும் வணக்கம். உங்களில் ஒருவனான நான். இது வரவேற்புரை அல்ல.

Advertisment

இருந்தாலும் இந்த மாதிரி இசை கேட்பதற்கு எல்லாரையும் மறுபடியும் மறுபடியும் வரவேற்க வேண்டும் போல் இருக்கிறது. நம் கண் நனைந்த போது வெளியே மண்ணும் நனைய ஆரம்பித்திருக்கிறது என்ற செய்தி கேட்டேன். அதிகப் பிரசங்கம் செய்வது நன்றாக இருக்காது. நாங்கள் கடந்து வந்த இளையராஜாவுடன் நான் கடந்து வந்த 50 வருடங்களை ஒவ்வொரு வாக்கியமாகச் சொன்னால் இந்த விழா நேரம் போதாது. ஆனால் அவருக்காக நான் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். நல்ல வேளை இசைக் கலைஞர்கள் எல்லாம் போய்விட்டார்கள். அதனால் சுதி சேரவில்லை என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள். 

ரசிகனாக இந்த விழாவுக்கு முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். முதலமைச்சருக்குப் பெயர் வைத்த அதே மாமனிதர்தான் என் அண்ணன் இளையராஜாவுக்கும் எனக்கும் பெயரைச் சூட்டினார். இந்த விழாவில் நான் பேசுவது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பது என் அண்ணனுக்குத் தெரியும். இந்த இசைஞானி என் அண்ணனும் தான்” எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து கமல் பாடுகையில், “இனைந்த உலகுக்கு ஒரு நன்றி. நம்மைச் சேர்த்த இயலுக்கும் நன்றி. மாறாத ரசிகன் சொல்லும் நன்றி....நன்றி. மனம் கொண்ட உறவு சொல்லும் நன்றி.... நன்றி... உயிரே வாழ இசையே வாழத் தமிழே வாழ்” என உருக்கமாகப் பாடினார். 

இவ்விழாவில் நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,மு.பெ. சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், முக்கிய பிரமுகர்கள், திரைப்படத் துறையை சார்ந்த கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.