திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே உள்ள திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான பிரபல மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன்படி இந்த பள்ளியில் அருகில் உள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வருவதற்காக 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் வேன்களை பள்ளி நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. 

Advertisment

இந்நிலையில் இன்று (02.12.2025) காலை வழக்கம் போல் சுமார் 20 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று, பள்ளிக்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பள்ளிக்குத் திரும்பியுள்ளது. அப்போது வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி நுழைவுவாயில் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் இருந்த 8 மாணவர்கள் காயமடைந்தனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காயமடைந்த மாணவர்களை விரைந்து மீட்டனர். இதனையடுத்து, மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியுடனும், பள்ளிக்குச் சொந்தமான வாகனத்திலும் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

Advertisment

அங்கு அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.