பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவுக்கு எல்லாம் சிறப்பானதாக மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா தனித்துவம் வாய்ந்தது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று இரவு துவங்கியது.

Advertisment

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித் திருநாள் இன்று தொடங்கியது. இன்று ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தனுர் லக்னத்தில் காலை 7 மணிக்கு புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சி தந்து 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று காலை முதல் மாலை வரை அர்ஜுன மண்டபத்தில் ஸ்ரீநம்பெருமாள் கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி, சிறிய நெற்றி சுட்டி பதக்கம் அதில் சாற்றி, திருமார்பில் - பங்குனி உத்திர பதக்கம், அதன் மேலே அழகிய மணவாள பதக்கம் - ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம், வைரக்கல் ரங்கூன் அட்டிகை, சந்திர ஹாரம்,சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை; அரைச் சலங்கை,8 வட முத்து மாலை, வைரக்கல் அபய ஹஸ்தம் - அதில் தொங்கல் பதக்கம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி தரும் ஸ்ரீநம்பெருமாள் இரவு 7:30 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி மீண்டும் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

Advertisment

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் வழிபாடு நடத்தி வருகின்றனர். வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான  சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபத வாசல் திறப்பு வருகிற (30.12.2025) அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது.

அதற்கு முன்னதாக 29.12.2025 அன்று நம்பெருமான் நாச்சியார் திருக்கோலத்தில் புறப்பாடு நடைபெறும். வருகிற ஜனவரி 09.01.2026ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இனிதே நிறைவடைகிறது.ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பெருவிழாவிற்கு நாடு முழுவதும் மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மற்றும் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

Advertisment