Skip to main content

சிசேரியன் எப்போது செய்யவேண்டும்!!! வழியெல்லாம் வாழ்வோம் #22

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

 

vazhiyellam vaazhvom

 

 

சிசேரியன் பேறுகாலம்:


சுகப்பேறுகாலம் கடினமானது என்றும் சிசேரியன் அறுவை சிகிச்சை வலியில்லாதது- எளிதானது என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் இக்காலத்தில் சிசேரியன் பற்றிய சில உண்மைகள் மற்றும் சில போலித்தகவல்கள் பற்றி அறிவது அவசியம். சுகப்பேறுகாலம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் சிசேரியன் முறை இன்று அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது எனவும் தெரிகிறது.

 

 


ஏன் அதிகரிக்கிறது சிசேரியன்?


பெண்களின் புரிதலின்மை:


சுகப்பேறுகாலம் பற்றிய புரிதலின்மை பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் பேறுகால வலியை தாங்கிக்கொள்ள இயலாத மனதிடமற்ற பெண்களின் குணாதிசயங்களும் இதற்கு இன்னொரு காரணம்.


மருத்துவர்களின் இக்கட்டான சூழ்நிலை:


மேலும் சுகபேறுகாலத்துக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களும், கொஞ்சம் மெனக்கெட்டு ஆபத்தென்றாலும் எதிர்கொள்ளத் தயங்கும் மருத்துவர்களின் எச்சரிக்கை உணர்வும் இதற்கு காரணங்கள். மருத்துவர்களை குற்றம் சொல்வதிலும் பலனில்லை. ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் ௫ என்று நிர்ணயித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் மருத்துவர்களுக்கு உள்ளது. இந்த மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகித இலக்கினை கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது. இதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள மருத்துவர்கள் முனைகின்றனர். சுகபேறுகாலத்துக்கு பெண்கள் ஒத்துழைக்காத நிலையில் சிசேரியன் தாய்-சேய் நலத்தை பேணுவதற்கு அவசியமாகிறது. Maternal Death Review எனப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கெடுக்கும் தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு பயந்தும் மருத்துவர்கள் சிசேரியனுக்கு தள்ளப்படுவதும் சில நேரங்களில் நடக்கிறது.


நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஆகிப்போன இந்த காலங்களில் அந்தக் குடும்பத்தின் சேயை நலமாக குடும்பத்திடம் ஒப்படைக்கும் கடமை தங்களை சார்ந்தது என்று மருத்துவர்கள் முழுமையாய் நம்புகின்றனர். அந்த சமூக அக்கறையை அழுத்தத்துடன் அவர்களே சுமக்கின்றனர்.

 

 


தனிக்குடித்தனங்கள்:

 

 


Nuclear Family எனப்படும் தனிக்குடித்தனங்கள் வாடிக்கையாகிப்போன காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்மையுற்ற காலம் முதலே பேறுகாலத்துக்கு தயாராக்கும் மூத்த பெண் உறவுகள் உடன் இருப்பதில்லை. அதனால் உடல், மனதளவில் பெண்கள் பேறுகாலத்து சரியாய் தயாராவதில் சிக்கல் நிலவுகிறது. 

 


சிசேரியன் அறுவை சிகிச்சை வகைகள்:


1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery).

2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).


முன்னரே தேர்தெடுக்கப்படும் சிசேரியனுக்கான காரணங்கள்:


செயற்கை முறை கருத்தரிப்பு:

வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகப் பெருகிவரும் குழந்தையின்மையும், அதனால் மேற்கொள்ளப்படும் செயற்கை முறை கருத்தரிப்பும் தான் சிசேரியனுக்கு முதல் காரணம். 'டெஸ்ட் டியூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன உளைச்சல் மற்றும் பணவிரயம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் உலக மகப்பேறு சங்கம் சிசேரியன் சிகிச்சையை இது போன்ற சமயங்களில் பரிந்துரைக்கிறது.


ஒன்றுக்கு மேற்பட்ட கரு:


ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருத்தல். அதிலும் இரட்டை அல்லது அதற்கு மேம்பட்ட கர்ப்பங்களில் ஏற்படும் தாய் சேய் சிக்கல்களால், சிசேரியன் பலமுறை சிபாரிசு செய்யப்படுகிறது.


தாய்மையுற்ற பெண்ணின் உடல் சார்ந்த காரணிகள்:


இருதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காமாலை, தாமதிக்க கர்ப்பம், சில தொற்று நோய்கள் ஆகிய காரணங்களாலும் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது.


குழந்தையின் நிலை:


Malpresentation எனப்படும் 'குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலை' (பிழைப்பிரசவம்) நிலையில் சுகப்பிரசவமானது முற்றிலும் தாய்- சேய் உயிருக்கு ஆபத்தானது என்ற காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.


வளர்ச்சி குன்றிய (IUGR) அல்லது குறைப்பிரசவம் (Preterm). குறைந்த எடையுடன் பிறக்க நேரிடும் பிரசவங்களிலும், சிசேரியனின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தாயின் இடை குறுகி இருந்தாலோ, குழந்தையின் தலை அல்லது உடல் பருத்து இருந்தாலோ, சுகப் பிரசவத்திற்கு ஒரு தடையாகவே இருக்கும் என்பதால் சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

 

 


ஒரு தாய்க்கு செய்யப்படும் இரண்டாவது சிசேரியன்:


Repeat Caesarean என்கின்ற, திரும்பச் செய்யப்படும் சிசேரியன் நிலை. இதில் முதல் சிசேரியன் மூலமாக வந்த தழும்பு வெடித்து, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

இவை அனைத்தும் High Risk Pregnancy என்ற அசாதாரண பிரசவங்களிலும், Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகின்றன.


அவசரநிலை சிசேரியன்:


Emergency Caesarean என்ற அவசரநிலை சிசேரியன் முறை; குழந்தைக்கு மூச்சுத் திணறுதல், பிரசவம் தொடர்ந்து முன்னேறாமல் இருத்தல், கர்ப்பகால இரத்தக் கொதிப்பினால் தாய்க்கு ஏற்படும் வலிப்பு,  நஞ்சுக் கொடி விலகுதல் போன்ற சூழ்நிலைகளில் மேற்கொள்ளப் படுகிறது.


வலுக்கட்டாய சிசேரியன்  (On demand Caesarean) 


இது இப்போது மிக அதிகமாகத்தென்படும் ஒரு மூட நம்பிக்கை சார் பேறுகாலம். சோதிடத்தை நம்பி, குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட லக்கினத்தில் தங்கள் குழந்தை பிறந்தால் அது பெரும் புகழும் வாங்கும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அறுவைசிகிச்சை செய்ய விழைவோர் பலர். இதற்கு அரசு மருத்துவமனைகளில் சத்தியம் இல்லாததால், தனியார் மருத்துமனைகளுக்கு செல்லும் கூட்டம் அதிகமாயிருக்கிறதும் நடக்கிறதாம்.


FOGSI போன்ற தேசிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும், சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமும் பெண்களுக்கு உண்டு.


முடிவுரை:


பெண்களின் பிற பருவங்கள் சார்ந்த பொது விடயங்கள் பலவற்றையும் முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதிகளில் விரிவாகப்பேசியாகிவிட்டது. எனவே உடலினை கோவிலாகப் பாவித்து உள்ளத்தை இறைமையாகப் பாவித்து நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் வாழ்வோம்- வாழ்வாங்கு வாழட்டும் தலைமுறை. 

 

 

முந்தைய பகுதி:

சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டியவை.. வழியெல்லாம் வாழ்வோம் #21
 

 

 

Next Story

ஆபத்தான நிலையில் கர்ப்பிணிப் பெண்; சாதுரியமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சந்தோஷம்மாள் (29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு இந்த வாரம் பிரசவம் நடக்கும் என தோராய தேதி ஒன்றை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென  பிரசவ வலி அதிகமாக வந்துள்ளது. இது பிரசவ வலி என்பதை உணர்ந்த கணவர் சாம்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காட்டில் இருந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது ஆம்புலன்ஸ். அப்போது பனிக் குடம் உடைந்து வலி அதிகமானது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

நிலைமையை உணர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்  மருத்துவ உதவியாளர் கவிப்பிரியா உடனே வேறு வழி இன்றி பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இதில் அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இதனையடுத்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்‌. பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்து இரட்டை குழந்தை பெற்றெடுத்த அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.

Next Story

முதல்வரின் பிறந்தநாளில் கர்ப்பிணி உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு பாராட்டு

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Appreciation to those who rescued pregnant woman and saved her life

கடலூரில் தமிழக முதல்வர்  பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட  திமுக மருத்துவரணி, இளைஞர் அணி சார்பில் இரத்ததான முகாம் மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு  மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். முகாமில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர திமுக செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் விஜய சுந்தரம், தனஞ்ஜெயன், மருத்துவ அணி அமைப்பாளர்கள் மருத்துவர் செல்வம் , மருத்துவர் சிவசெந்தில், மருத்துவர் அருண் , துணை அமைப்பாளர்கள் மருத்துவர் அக்‌ஷயா, டேவிட், இளங்குமரன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி கார்த்திக், இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், முதல்வரின் பிறந்த நாளன்று ரயிலில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த திருவாரூர் கர்ப்பிணியை நள்ளிரவில் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகள், இரத்த தானம் வழங்கிய இளைஞர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேயர், பாராட்டி சிறப்பு செய்தார்கள். மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் பால. கலைக்கோவன் ஏற்பாட்டில் நடந்த இரத்த தான முகாமில் “நாடும் நமதே, நாற்பதும் நமதே” என முதல்வர் குறிப்பிட்டதைக் குறிக்கும் வகையில் 40 கிலோ கேக் வெட்டிக்  கொண்டாடினர்.