Skip to main content

"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு..." - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2

Published on 24/03/2019 | Edited on 24/03/2019

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு களம்... முன்னணி வீரர்கள் மாறுவர். பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாறாமல் இருப்பவை அதிமுக-திமுக, இரு கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைவது. சென்ற தேர்தலில் கொஞ்சம் வித்தியாசமாக கூட்டணிகள் அமைந்தன. காங்கிரஸ் இல்லாத திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேமுதிக - பாஜக - மதிமுக - பாமக கூட்டணி, காங்கிரஸ் தனியே என நான்கு முக்கிய அணிகள் போட்டியிட்டன. கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி கட்சிகளும் போட்டியிட்டன. தேர்தல் முடிவுப்படி அதிமுக, பாமக, பாஜக மட்டுமே தொகுதிகளில் வென்றிருந்தாலும் வாக்கு சதவிகிதம் பல கட்சிகளுக்கும் பிரிந்திருந்தது. கடந்த தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்கும் கூட்டணிகள் அடிப்படியில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட புதிய கட்சிகள் களத்தில் உள்ளன. பிரச்சாரம் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தல் கலவரத்தில் நாம் மிஸ் பண்ணும் ஒரு முக்கிய குரல், "மக்கழே..." என அழைக்கும் அந்தக் குரல். அதற்கென ஒரு கவர்ச்சி இருந்தது. உடல்நிலை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார களத்தில் இல்லை. இருக்கும் நாட்களில் அவர் மேடையேறுவாரா என்பது தெரியவில்லை. கடந்த முறை அவர் நடத்திய கலகல  பிரச்சாரம் குறித்து கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.

 

vijayakanth on stage"மக்கழே... உங்களுக்காகத்தான் நான் கட்சியை ஆரம்பிச்சேன் மக்கழே... ஆண்ட கட்சியும், ஆளுற கட்சியும் உங்க பிரச்சினைகளைத் தீர்த்திருந்தா நான் ஏன் கட்சியை நடத்தப்போறேன். யாரு நல்லது செய்றாங்களோ அவங்களை இந்த விஜயகாந்த் ஆதரிச்சிருப்பேனே மக்கழே''… -தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இப்படிச் சொல்லும்போது, அவரது பேச்சைக் கேட்க வந்திருக்கும் கட்சிக்காரர்களும், பார்க்க வந்திருக்கும் பொதுமக்களும் கை தட்டுகிறார்கள். உடனே விஜயகாந்த், "இப்படித்தான் கைதட்டுறீங்க மக்கழே... ஆனா ஓட்டுப் போட மாட்டேங்குறீங்க மக்கழே'' என்கிறார் விஜயகாந்த். கூட்டத்தில் இருப்பவர்களும் அவரது பிரச்சாரத்தை டி.வியில் பார்ப்பவர்களும் கலகலவென சிரிக்கிறார்கள்.

'என்னதான்யா சொல்ல வர்றாரு' என்ற ஆவல் விஜயகாந்த்தின் பேச்சைக் கேட்பவர்களுக்கு ஏற்படுத்தியது. 2014 ஆம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் தனது பிரச்சாரத்தை விஜயகாந்த் தொடங்கிய நாளில் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. யாரை ஆதரித்துப் பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. எந்தக் கூட்டணி என்று சொல்லாமல், வேட்பாளர் யார் என்று சொல்லாமல் முரசு சின்னத்திற்கு ஓட்டு போடும்படி பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த். அவருடைய பேச்சில் ஜெ. ஆட்சியின் மீதான அட்டாக்கே அதிகமாக இருந்தது. "கரண்ட்டு பிரச்சினையை  அவங்க தீர்க்கலைன்னுதானே இவங்க தீர்க்குறதா சொல்லி ஓட்டு வாங்குனாங்க. தீர்த்துட்டாங்களா, இல்லையே.. இவங்க மக்கழுக்காக என்னதான் செய்திருக்காங்க சொல்லுங்க மக்கழே'' என்று போட்டுத் தாக்கினார்.

வேட்பாளரே தெரியாம யாருக்குன்னு ஓட்டுப் போடுறது? மக்கள்கிட்டே யாருக்குன்னு ஓட்டு கேட்கிறது? -என தே.மு.தி.கவினரே யோசித்தனர். கூட்டணி உறுதியாகும் முன்பே கூட விஜயகாந்த் சென்ற இடமெல்லாம் ம.தி.மு.க தொண்டர்கள் கொடியோடு வந்து பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர். அப்போது பா.ம.கவினரும் விஜயகாந்த்தின் கூட்டத்திற்கு வரவில்லை. விஜயகாந்த்தும் அவர்களுக்காக பிரச்சாரம் செய்யவில்லை. இதற்கிடையில், நாமக்கல்லுக்கு அறிவிக்கப்பட்ட தே.மு.தி.க வேட்பாளரான மகேஷ்வரன், விஜயகாந்த் அங்கு பிரச்சாரத்திற்கு சென்ற நாளில், "போட்டியிடப் போவதில்லை' என அறிவித்து ஒதுங்கிவிட, யார் பெயரையும் சொல்லாமல் ஓட்டுக் கேட்டார் விஜயகாந்த். அவருடைய பேச்சில் கூட்டணி பற்றிய சிக்னல் வெளிப்படத் தொடங்கியது. தொடர்ந்து பேசிய இடங்களில் மத்தியில் ஊழலற்ற ஆட்சியை நரேந்திர மோடி வழங்குவார் என்றும் தன் பேச்சை நம்பி மோடிக்கு வாக்களிக்கும்படியும் சொன்னார்.

 

vijayakanth reactionsகூட்டணி பேச்சுவார்த்தையில் சேலம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவிருக்கிறது என்ற செய்தி அரசல்புரசலாக வெளிவர அதைக் கேட்டு சேலத்தில் பா.ம.க தொண்டர் ஒருவர் தீக்குளிப்பு முயற்சி போராட்டம் செய்தார். அதே நாளில் சேலம் கோட்டை மைதான பொதுக்கூட்ட மேடையில் மச்சான் எல்.கே.சுதீஷுடன் வந்து மைக் பிடித்தார் விஜயகாந்த். அப்போது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பேனர்களில் நமது வேட்பாளர் சுதீஷ் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. விஜயகாந்த்தின் பேச்சு வழக்கம் போலவே இருந்தது. அடிக்கடி வாட்சை பார்த்துவிட்டு திரும்பி அழகாபுரம் மோகன்ராஜை பார்த்து "டைம் இருக்கா? பேசலாமா?'’ என்ற விஜயகாந்த் "மக்கழே என் வாட்ச் ஓடலை, இப்போதான் பார்த்தேன். என்னடா 8.20-லேயே இருக்குன்னுதான் மோகன்ராஜ்கிட்ட கேட்டேன். ஏன்னா அப்புறம் தேர்தல் விதிமுறை மீறிட்டேன்னு வழக்கு போட்டுட்டா பாவம் மோகன்ராஜ்தான் மாட்டிகிட்டு முழிப்பார்'' என்றவர் அடுத்தடுத்து மீண்டும் டைம் பார்த்துகொண்டே இதே விஷயத்தை பேசினார். பின் "தி.மு.க., அ.தி.மு.க.வை வீழ்த்த மோடியை பிரதமர் ஆக்குங்கள்...'' என்றவர் "திரும்பவும் இந்தத் தொகுதிக்கு வருவேன் இது முக்கியமான தொகுதி'' என சூசகமாக சொல்லிவிட்டு 9.37க்கு மேடையை விட்டுக் கிளம்பினார்.

பின்னர் பா.ஜ.க.வுடனான கூட்டணி உறுதியாகி, ராஜ்நாத்சிங்கே தே.மு.தி.க.வுக்கு 14 சீட் என அறிவித்த நிகழ்வும், விஜயகாந்த்தை அன்புமணி சந்தித்து சால்வை போர்த்தியதும் பிரச்சாரத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியது. "கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என அறிக்கை கொடுத்தார் விஜயகாந்த். "ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்' என வலியுறுத்திப் பேச ஆரம்பித்தார்.

"நான் நடிச்ச 'கள்ளழகர்' பட ஷூட்டிங்கிற்காக குஜராத்துக்குப் போயிருந்தேன். அங்கே தேடிப் பார்த்தும் ஒரு ஒயின்ஷாப்கூட இல்லை.  ஒயின்ஷாப்பே இல்லாத அளவுக்கு மோடி அங்கு திறமையாக ஆட்சி நடத்துகிறார்'' என்று பாராட்டிப் பேசினார் விஜயகாந்த். குஜராத்தின் முதல்வராக மோடி பதவியேற்றது 2001-ஆம் ஆண்டில். விஜயகாந்த்தின் 'கள்ளழகர்' படம் ரிலீசானது 1999-ஆம் ஆண்டில். அதாவது, மோடி முதல்வராவதற்கு முன்பாகவே. மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால் இந்தியாவிலேயே குஜராத்தில் மட்டும் மதுவிலக்கு ரொம்ப காலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை. கேப்டன் பேச்சில் இதெல்லாம் சகஜம்தான். இன்று அவர் மட்டுமல்ல எல்லா கட்சிகளிலும் மாற்றிப் பேசுபவர்கள், குழப்புபவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.

அப்போது விஜயகாந்த் மாற்றி மாற்றிப் பேசுவதும், யாராவது கூட்டத்திலிருந்து பலமாக வாழ்க கோஷம் போட்டால், "நீ வந்து பேசு, நான் கேட்கிறேன்' என்று கூட்டத்தினரைப் பார்த்துச் சொல்வதும், கேப்டன் பிரச்சாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற அளவிற்கு ஆகிவிட்டது. தன் பிரச்சாரத்தில் பெரும்பாலான நேரத்தை ஜெ. அரசை விமர்சிப்பதற்கே எடுத்துக்கொண்டார் விஜயகாந்த். "எல்லாத்துக்கும் அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா திட்டம்னு பேர் வச்சீங்கள்ல. டாஸ்மாக்குக்கு மட்டும் ஏன் அந்தப் பெயரை வைக்கலை? அதற்கும் வைங்களேன்'' என்று விமர்சித்தார். "டாஸ்மாக்கில் வாங்கும் பிராந்திக்கு சைடிஷ்ஷா ஒரு ரூபாய் இட்லி?'' எனக் கேட்க, கூட்டம் ஆர்ப்பரித்தது.

கன்னியாகுமரி தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்தபோது, உடன் வருவதாக சொல்லியிருந்த அப்போதைய தமிழக பா.ஜ.க தலைவரும் தொகுதியின் வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன், திருப் பதிக்கு போய்விட்டதால் விஜயகாந்த் மட்டும்தான் ஓட்டுக் கேட்டார். பா.ஜ.க தொண்டர்கள் கொடியை உயர்த்தியபடி கோஷம் போட, "மைக்கைத் தரட்டுமா... ஒவ்வொருத்தரா வந்து பேசுறீங்களா, தூக்கிப்பிடிச்சிருக்கிற ஒங்க கொடிகளை கீழே வையுங்க'' என்றார். அவரே தொடர்ந்து, "ஹெலிகாப்டரில் பறக்கிற ஜெயலலிதாவுக்கு தரையில வாழுற மக்களோட பிரச்சினை எங்கே தெரியப்போகுது மக்கழே? சிறுபான்மை சமுதாயத்தோட எதிரியும் துரோகியும் ஜெயலலிதாதான். நான் சொல்றதைக் கேட்டு மோடியை பிரதமராக்க ஓட்டுப்போடுங்க. நான் அவர்கிட்டே சண்டை போட்டு உங்க கோரிக்கைகளை நிறைவேற்றித் தர்றேன்'' என்றார். பேச்சின் நிறைவாக, உங்கள் ஓட்டு யாருக்கு என்று விஜயகாந்த் கேட்க, முரசுக்கு என்றது கூட்டத்தின் ஒரு பகுதி. அந்தத் தொகுதியில் நிற்பது பா.ஜ.க. என்பதை உணர்த்தும் வகையில், "இது தாமரை தொகுதி. அதனால தாமரைக்கு ஓட்டுன்னு சொல்லுங்க. மொதல்ல நம்ம கூட்டணி சின்னத்தை நீங்க தெரிஞ்சிக்கணும். சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு மாம்பழம், ம.தி.மு.க.வுக்கு பம்பரம்'' என வகுப்பெடுத்தவர், "கொங்கு கட்சியோட சின்னம்... ஆங்... எனக்கும் தெரியாது. அந்தக் கட்சித் தலைவர்கிட்ட கேட்டு சொல்றேன்'' என்றார்.

இப்படி கலகலப்பான ஒரு பிரச்சாரத்தை இந்தத் தேர்தலில் நாம் மிஸ் பண்ணுகிறோம் என்பது உண்மை. தேமுதிகவின் நிலைப்பாடுகள், முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதம், ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தியது என பல விஷயங்கள் மக்களிடையே பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியிருந்தாலும் தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் நலம் பெற வேண்டும் என்பது மட்டும் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. 

செய்தியாளர்கள்: ஜெ.டி.ஆர்., மணிகண்டன், அரவிந்த்

முந்தைய பகுதி:

அழகிரிக்குத் தூது விட்ட அதிமுக, ஆறுதல் சொன்ன ரஜினி... - கடந்த கால தேர்தல் கதைகள் #1

 

 

 

Next Story

“தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க முயல்கிறது” - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Thirumavalavan alleges BJP is trying to disrupt law and order in Tamil Nadu

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்திருந்தார். 

இது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதனை திட்டமிட்டவர்கள் இதனை நடைமுறைப்படுத்திய கூலிக்கும்பல் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, பா.ஜ.கவுக்கு இந்த செயல் திட்டம் இருப்பதை அறிய முடிகிறது. ஆகவே, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூட ஒரு அரசியல் செயல் திட்டம் வாய்ப்பு இருப்பதாக வி.சி.க கருதுகிறது. ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில், பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே, பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைப்பதற்கு முன்னதாகவே, எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு விசாரிக்கக் கூடாது, ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் இருக்கக்கூடிய சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் குரலாக இருந்தது. ஆருத்ரா நிறுவனத்திற்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் உள்ள உறவு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் பா.ஜ.க கட்சியில் பொறுப்பில் இருக்கிறார்கள். 

ஆம்ஸ்ட்ராங் கொலையில், ஆருத்ரா விவகாரமும் பேசப்படுகிறது. பா.ஜ.க இதில் வலிந்து சி.பி.ஐ விசாரணை கோருகிறது. இது போன்ற விவகாரங்கள் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தக்கூடியவையாக உள்ளன. அவர்களின் செயல் திட்டம் என்பது திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்பதாக தான் இருக்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் மீது கருத்தியல் விமர்சனங்களை வைக்கலாம். அரசியல் விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்களின் நோக்கங்களை உணர முடிகிறது. ஆகவே, சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். 

நீட் தேர்வு குறித்தும், திருமண சட்டங்கள் சீராய்வு தொடர்பாக மனு ஒன்றை அளித்திருக்கிறோம். நீட் விவகாரத்தில் தற்போது நாடு முழுவதும் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. நீட் தேர்வில் ஊழல் முறைகேடு நடந்துள்ளன. அதை மூடி மறைக்க பா.ஜ.க முயல்கிறது. நீட் எதிர்ப்பு நடவடிக்கையாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வரிடம் வலியுறுத்தினேன்” என்று கூறினார். 

Next Story

நீதிபதி மகாதேவனுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Anbumani Ramadoss wishes to Justice Mahadevan!

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று ஜம்மு - காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முதல் நீதிபதி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி மகாதேவனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் அரங்க. மகாதேவன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Anbumani Ramadoss wishes to Justice Mahadevan!

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மகாதேவன் அவர்கள் கடந்த 11 ஆண்டுகளில் சிறப்பான பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். தமிழ் மொழி மீது மிகுந்த பற்றும், தமிழ் மொழியில் புலமையும் கொண்ட மகாதேவன், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் 4 ஆண்டுகள் பணியில் இருக்கப் போகும் நீதிபதி மகாதேவன், சமூகநீதி, மொழி சார்ந்த சிறப்பான தீர்ப்புகளை வழங்கி நீதித்துறை வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

The website encountered an unexpected error. Please try again later.