Advertisment

'ஒரு காடு... அதுல ஒரு சிட்டுக்குருவி' எனக் கதை சொல்லியே 5 கோடி மரங்களை நடவைத்த பெண்!!! வாங்காரி மாத்தாய் | வென்றோர் சொல் #19

Wangari Maathai

Advertisment

2004 -ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருந்த தருணம். அந்த ஆண்டுக்கான விருதினைப் பெறப் போவது யார் என வழக்கம் போல எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது, மேலைநாட்டினர் பலரும் எதிர்பார்த்திடாத, கென்யா நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி வாங்காரி மாத்தாய் பெயர் அறிவிக்கப்பட்டதும் சிறிய சலசலப்பும், பெரிய விவாதமும் ஏற்பட்டது. உலக அமைதிக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும் விஞ்ஞான வளர்ச்சியே உலக வளர்ச்சி என்றும் கருதும் ஒரு சாரார் கேள்வியெழுப்பினர். அதுவரை, அணுஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு 'உன் நாட்டின் மீது போட்டுவிடுவேன்' என்று மிரட்டுபவர்களுக்கும், மிரட்டப்படுபவர்களுக்கும் இடையில் சமாதானத் தூதுவராகச் செயல்படும் தலைவர்களுக்கோ அல்லது எல்லைப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் தலைவர்களுக்கோ இந்த விருது கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பழகியவர்களுக்கு அந்தக் கேள்வி எழுந்ததில் ஆச்சரியமில்லை.

"உலகில் நடக்கும் பாதி பிரச்சனைகள் நீருக்காகவோ, கனிமம் பொதிந்து கிடக்கும் நிலத்திற்காகவோ அல்லது இது போன்ற ஏதோ ஒரு வகையிலான இயற்கை வளங்களைக் குறிவைத்தே நடைபெறுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதே நம் கடமை. அதுதான் உலக அமைதிக்கு வழிவகுக்கும்" என்று மற்றொரு கோணத்தில் பதிலளித்தார் வாங்காரி மாத்தாய். பிரிட்டிஷின் வெள்ளைக்கார ஆதிக்கத்தில் இருந்த கென்யா நாட்டில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் வாங்காரி மாத்தாய். அவரைப் படிக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பது அவர் பெற்றோரின் நீண்ட நாள் ஆசை. அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் ஆப்பிரிக்க இனப் பெண்களுக்கு பள்ளிப்படிப்பு என்பது எட்டாக்கனியே. அத்தகைய சூழலில் பள்ளிப்படிப்பை முடித்து, ஸ்காலர்ஷிப் உதவியுடன் அமெரிக்கா சென்று கல்லூரிப்படிப்பை முடிக்கிறார். கென்யா விடுதலையான பின் தாய் நாடு திரும்பி முனைவர் பட்டம் பெறுகிறார். ஆப்பிரிக்க கண்டத்திலேயே முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் என்ற பெருமையும், பெயரும் வாங்காரி மாத்தாயை வந்தடைந்தன.

சுதந்திரக் கென்யாவில் நடைபெறும் காடுகள் அழிப்பு, இயற்கை வளச்சுரண்டல், அதனால் ஏற்படுகிற வறுமை, உணவுப்பற்றாக்குறை என அனைத்தும் அவரை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இதற்கு ஆளும் அரசே துணை போவது அவரை கொதிநிலைக்கு கொண்டுசெல்கிறது. கையைப் பிசைந்தவாறே செய்வதறியாது யோசிக்கிறார். இயற்கை அன்னையின் கைகள் நசுக்கப்பட்டுள்ளன, கென்ய நாட்டுப் பெண்களின் கரங்கள் பொருளாதார ரீதியாக ஒடிக்கப்படுள்ளன. இரண்டையும் மீட்டெடுப்பதே அனைத்திற்குமான தீர்வு என முடிவெடுக்கிறார் மாத்தாய். 'க்ரீன் பெல்ட்' இயக்கம் தொடங்கப்படுகிறது. பெண்கள் மரம் நட்டு வளர்த்தால் சம்பளமாகப் பணம் கொடுக்கப்படும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்.

Advertisment

Ad

தொடக்க காலங்களில் பெரிய அளவில் வரவேற்பில்லை என்றாலும் நாட்கள் செல்லசெல்ல பெரிய அளவில் மக்கள் வரவேற்பும், பல சமூக இயக்கங்களின் ஆதரவும் கிடைக்கிறது. வாங்காரி மாத்தாயால் வெறும் 7 மரங்கள் நட்டுத் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று கென்யாவில் மட்டும் 5 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுப் பாதுகாத்து வருகிறது. இதன் மூலம் அழிவின் விளிம்பில் இருந்து அவர் மீட்டெடுத்த மலைகள், ஆறுகள், நீரோடைகள் ஏராளம். ஆனால் தொடக்க காலங்களில் அவரது முயற்சியைக் கேளிக்குள்ளாக்காத ஆட்களே இல்லை எனலாம். இதில் அப்போதைய கென்ய அரசும் அடக்கம். காடுகள் அழிப்பிற்கு எதிராக அவர் கொடுத்த குரல் அன்றைய அதிகார வர்க்கத்தை நிலைகுலையச் செய்தது.

"எனக்குச் சிறுவயதாக இருக்கும் போது என் வீட்டிற்கு அருகே நீரோடை இருந்தது. சிறுவயதில் அங்கு சென்று பானையில் நீரெடுத்திருக்கிறேன். வெறும் கையால் அந்த ஓடை நீரை அள்ளிக் குடித்திருக்கிறேன். அங்கே விளையாடும் போது நிறைய தவளை முட்டைகள் இருக்கும். அதைக் கைகளால் தொடும்போது உடைந்து போயிருக்கின்றன. நிறைய தலைப்பிரட்டைகளை அங்கே காண முடியும். இவைதான் என்னுடைய இளமைக்காலம். இன்று ஐம்பது வருடங்கள் கழிந்து விட்டன. அந்த நீரோடை வறண்டு விட்டது. பெண்கள் நீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடக்கின்றனர். இன்றைய தலைமுறையினர் இழந்தது எதுவெல்லாம் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிரம்பிய அந்தப் பழைய உலகத்தை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கிக் கொடுப்பதே நமக்கு இருக்கும் பெருங்கடமை. தனிமனிதர்கள் செய்யும் ஒரு சிறு விஷயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் கையால் ஒரு குழி தோண்டி, செடி நட்டு, நீருற்றி அதை வளர்க்காதவரை இவ்வுலகத்திற்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று தான் அர்த்தம்...." .

இயற்கை வளச்சுரண்டலுக்கு எதிராகவும், கட்டற்று சீரழிக்கப்படும் இயற்கைக்கு எதிராகவும் உலகின் பல மூலைகளில் இருந்து பல குரல்கள் எழுந்துள்ளன. உதாரணமாக இந்தியாவில் நம்மாழ்வார், ஜப்பானில் மசானபு புகாகோ, ஆஸ்திரேலியாவில் பில் மாலிசன் எனக் கூறலாம். இந்தக் குரல்களை விட வாங்காரி மாத்தாயின் குரல்எழுப்பிய ஓசை அதிகம். அவர் முன்னெடுத்த 'Humming bird' பிரச்சாரம் கென்யா வரலாற்றில் காலத்துக்கும் அழியாப் புகழ்பெற்றது.

"பல ஆயிரம் உயிரினங்கள் வாழும் ஒரு காட்டில் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அனைத்து மிருகங்களும், பறவைகளும் காட்டை விட்டு வெளியேறி விட்டன. ஒரேயொரு சிட்டுக்குருவி மட்டும் அருகில் இருந்த ஓடையில், தன் அலகால் நீரெடுத்து வந்து காட்டுத்தீயின் மீது ஊற்றியது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்ற உயிரினங்கள், அந்தக் காட்டுத்தீயின் முன் நீ சிறியவள். உன்னால் ஏதும் செய்ய முடியாது என்றன. அந்தச் சிட்டுக்குருவி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து நீரெடுத்து வந்து ஊற்றியது. பின் அனைத்து விலங்குகளும், பறவைகளும் அந்தச் சிட்டை முட்டாள் என்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டன. அதற்கு அந்தச் சிட்டு, 'நம் வாழ்விடத்தைச்சரி செய்ய அதிகபட்சமாக என்னால் முடிந்த ஒன்றை நான் செய்கிறேன்' என்று கூறிவிட்டு தன் பணியைத் தொடர்ந்தது. நாமும் அது போன்ற ஒரு சிட்டுக்குருவி தான்" என்று அவர் எழுப்பிய கூக்குரல் இன்று பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பாலையாவதில் இருந்து காப்பாற்றியுள்ளது.

Nakkheeran

கிட்டத்தட்ட முற்றும் முழுவதுமாகச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஆப்பிரிக்க பகுதியில் இருந்து தனி நபராகக் குரலெழுப்பி வறண்டு கிடந்த பூமித்தாயின் மீது இன்று பசுமைப்போர்வை போர்த்தி விட்டுள்ள அவரது கரங்களுக்கு எவ்வளவு வலிமை என்று பாருங்கள்....!

motivational story
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe