Skip to main content

இப்படி ஒரு கிராஃப் தமிழ் சினிமாவில் ஒரே ஒருத்தருக்கு மட்டும்தான் இருக்கு! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #9

Published on 04/09/2018 | Edited on 19/07/2019

தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான ஹீரோக்களின் வெற்றி படிப்படியாக நடந்திருக்கும், ஆனால் தொடர்ந்து அதை நோக்கிய படங்கள் வந்துகொண்டிருக்கும். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், இப்போ அஜித், விஜய், விஜய் சேதுபதி வரை அப்படித்தான். இவர்களுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைக்கல, அதே நேரம் சினிமா இவர்களை வெளியே அனுப்பிவிடவும் இல்லை. அப்பப்போ ஒரு வெற்றி, ஒரு முன்னேற்றம் என்று இப்போ இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தார்கள், பெரும்பாலும் பின்னே செல்லும் நிலைமை ஏற்படவில்லை. இன்னொரு வகையாக, சிலருக்கு முதல் படத்திலேயே சிறப்பான அறிமுகம் கிடைத்து பெரிய வெற்றியும் அமைந்திருக்கும். சிவாஜி, கார்த்திக், கார்த்தி என இப்படியும் சிலர் இருக்காங்க. முதல் படமே நல்ல அறிமுகமாக அமைந்து அதன் பின் வெற்றி தோல்வி என மாறி மாறி வந்தாலும் நிலைத்துவிடுவார்கள்.

 

ramesh kanna directsஇந்த இரண்டுமே இல்லாமல், நாயகனாக அறிமுகமாகி அதுவும் ஸ்ரீதர் என்ற பெரிய இயக்குனர் படத்தில், பின் படங்கள் தோல்வியடைந்து, தொடங்கப்பட்ட படங்கள் கைவிடப்பட்டு, வாய்ப்பு கிடைக்காம, தொடங்கிய இடத்துக்கே திரும்ப வந்து, மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் பேசி, இப்படி ஆகியும் விடாம முயன்று, ஒரு படத்தில் தன் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, தொடர் வெற்றிகள் கொடுத்து, கமர்ஷியலாகவும் நம்பர் 1 ஹீரோவாகி, நடிப்புக்காக தேசிய விருது பெற்று, இன்னைக்கும் கதாபாத்திரத்துக்காக தன் உடலை வருத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள தயாராக என... இப்படி ஒரு கிராஃப் தமிழ் சினிமாவில் ஒரே ஒருத்தருக்கு மட்டும்தான் இருக்கு. அவர் சீயான் விக்ரம். நான், வாழ்க்கையில ஒரு கட்டம் வரைக்கும் தோல்விகளை மட்டுமே பார்த்தவன். பாகுபலி 1ல ஷிவு அந்த மலை மேல ஏற முயற்சி பண்ணிப் பண்ணி கீழ விழுவது போல விழுந்தவன். எனக்கே ஒருவரின் தன்னம்பிக்கையைப் பார்த்து ஆச்சரியம் வருதுன்னா அது விக்ரமைப் பார்த்துதான். தமிழ் சினிமாவில், ஹீரோவா அறிமுகமாகி, பின்னாடி தோல்விகளால் வெளியே போய்ட்டு திரும்ப வந்து ஹீரோவாகவே இவ்வளவு பெருசா ஜெயிச்சவங்க யாருமில்லை.

 

ramesh kanna r.b.choudry

 

with k.s.ravikumarபுதுக்காவியம்... இது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த படம். ஆர்.பி.சௌத்ரி சாரின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. புதுவசந்தம், புரியாத புதிர்னு வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தது சூப்பர் குட் ஃபிலிம்ஸ். இன்னொரு பக்கம் கே.எஸ்.ரவிக்குமார் புரியாத புதிர் வெற்றிக்குப் பிறகு இயக்கவிருந்தார். இப்படி எதிர்பார்ப்போட, நம்பிக்கையோட தொடங்க இருந்த இந்தப் படம், என் ராசியா இல்லை விக்ரம் ராசியானு தெரியல கைவிடப்பட்டது. அந்தப் படத்தில் நான் அஸோசியேட்டா வேலை பார்த்திருந்தா அப்போவே விக்ரம் கூட பணியாற்றி இருப்பேன். அந்த வாய்ப்பு பல வருடங்கள் கழிச்சு 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தில் அமைந்தது. ராஜகுமாரன் இயக்கத்தில் 'நீ வருவாய் என' வெற்றிக்குப் பிறகு வந்த படம். அதன் பிறகு இயக்குனர் சரண் காதல் மன்னன், அமர்க்களம் போலவே ஜெமினி படத்திலும் என்னை நடிக்க அழைத்தார். அதற்குப் பிறகு சாமி, இப்போ சாமி ஸ்கொயர் வரைக்கும் விக்ரம் கூட பணியாற்றுகிறேன், பழகுகிறேன்.

>
'விண்ணுக்கும் மண்ணுக்கும்' ஷூட்டிங் சமயத்திலெல்லாம் நாங்க ஒன்னாவேதான் இருந்தோம். எங்க கூடவேதான் தங்கினார், ஒன்னாவேதான் சில மாதங்கள் வாழ்ந்தோம். அந்தப் படத்தில் தேவயானிதான் ஹீரோயின். கதைப்படி தேவயானி நடிகை தேவயானியாகவே இருப்பாங்க, அவுங்கள ஒரு கிராமத்து இளைஞரான விக்ரம் லவ் பண்றார். படம் முடிஞ்சு தேவயானி-ராஜகுமாரன் காதல் விஷயம் வெளியே வந்து அவங்க திருமணம் செஞ்சப்போ விக்ரம் என்கிட்டே சிரிச்சுக்கிட்டே சொன்னார், "என்னங்க... 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' டைம்ல  நான் மட்டும்தான் தேவயானியை லவ் பண்றேன்னு நெனச்சேன். நான் லவ் பண்ணுன தேவயானியை ராஜகுமாரனும் லவ் பண்ணியிருக்காரு" என்று.

 

vikram ramesh kanna'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படம் வெற்றி பெறவில்லை, ஆனால் தேவயானி-ராஜகுமாரன் காதல் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் டைட்டிலே தங்கள் காதலை மனதில் வைத்துதான் ராஜகுமாரன் வைத்தார்னுலாம் பேசிக்கிட்டாங்க. அது உண்மையானு தெரியல, ஆனால் அவுங்க காதல் செய்தி வந்தபொழுது தமிழ்நாடே ஆச்சரியப்பட்டது உண்மை. யாருமே எதிர்பார்க்கல. அப்போ தேவயானி பெரிய ஹீரோயின், ராஜகுமாரன் ஒரு படம் மட்டுமே எடுத்த இயக்குனர். காதலே அப்படித்தானே? அதற்கு காரணம், தர்க்கம்லாம் இருக்கா என்ன? ஆனால், இன்று வரை அவுங்க ஒருவருக்கொருவர் பெரிய சப்போர்ட்டா சந்தோஷமா வாழுறாங்க, எனக்கும் அது ரொம்ப சந்தோஷம்.


விக்ரம், 'புதுக்காவியம்' டைம்ல இருந்த அதே மனநிலையில்தான் இப்பவும் இருக்கார். தன் தோல்விகளை எப்படி அமைதியாக, உறுதியாக தாங்கினாரோ வெற்றியையும் அப்படித்தான் பார்த்தார். "எப்போ நரைச்ச முடியை சிசர்ல கட் பண்ணுனாலும் எனக்கு உங்க ஞாபகம்தாங்க வருது"னு சொல்வார். நான் அதை ரெகுலரா செய்வேன். சின்ன விஷயத்தையும் கவனிச்சு, அதைத் தாண்டி அதை என்னிடம் சொல்லி, இதெல்லாம் விக்ரமின் அன்புக்கு அடையாளம். வெற்றியின் போதும் அதிக படங்கள் பண்ணி சம்பாரிக்கணும்னு அவசரமெல்லாம் படாம நல்ல படங்கள் செய்தார்.

 

saamyசாமி ஸ்கொயர் படம் ஷூட்டிங்குக்குப் போனப்போ எனக்கு நரை முடி வைத்து வயசான கெட்-அப். விக்ரம் என்னடான்னா இளமையாவே வந்தார். "என்னங்க இது அநியாயம், எனக்கு வயசாயிடுச்சு சாமிக்கு மட்டும் வயசாகாதா?"ன்னு கேட்டேன். "இல்லை சார், இது சாமி இல்லை, சாமியோட பையன். நீங்க சாமி ஃப்ரெண்ட் என்பதால அவருக்கு ஹெல்ப் பண்றீங்க"ன்னு டைரக்டர் சொன்னார். "அப்போ எனக்கும் பையன் கேரக்டர் வைங்க, நானும் இளமையா நடிக்கிறேன்"னு சொன்னேன். "சும்மா இருங்க நீங்க" என்று விக்ரம் சிரிச்சுகிட்டே சொன்னார். இப்படி, கொடுக்கல் வாங்கல் என்பது எங்க நட்பில் அன்பை மட்டும்தான். அதுனால ரொம்ப அக்கறையான, நல்ல நட்பா இருக்கு எங்களோடது. காதல் அப்படின்னா, நட்பு இப்படித்தானே...      
 

அடுத்த பகுதி:

இளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10

முந்தைய பகுதி:                 

"அய்யய்யோ... ஆளை விடுப்பா" - செல்வராகவனிடம் கெஞ்சினேன்! ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #8  
 

 

Next Story

"இவருக்கு எந்த குறையுமே இல்ல" - மாரிமுத்து குறித்து பகிர்ந்த ரமேஷ் கண்ணா

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

ramesh kann about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் நக்கீரன் சார்பாக நடிகர் ரமேஷ் கண்ணாவிடம் தொலைபேசி வாயிலாக மாரிமுத்துவின் இரங்கல் குறித்து கேட்டறிந்தோம். அபோது மாரிமுத்துவுடன் நட்பு பற்றி பேசிய அவர், "ஐஸ்வர்யா ராஜேஷ்,  நான், மாரிமுத்து சார் எல்லேரும் லட்சுமி நாராயணன் டைரக்ட் செய்யும் படத்தில் நடித்தோம். இரவு பகலாக ஷூட்டிங் நடத்தினோம். அதுவும் அடர்ந்த காட்டுக்குள்ள. உற்சாகமாக இருப்பார். நானெல்லாம் டயர்ட் ஆகிட்டாலும் கூட உற்சாகப்படுத்துவார். ஆரோக்கியமான உடல். ஸ்ட்ராங்கான வாய்ஸ். 3 மணி, 4 மணி வரையும் அதே உற்சாகத்துடன் நடிப்பார். அப்படி ஒரு நடிகர். 

 

அவர் திடீர்னு மறைந்திருப்பது பெரிய ஷாக். ஏன்னா... சாதாரணமா ஒருவர் உடம்பு சரியில்லாமல் இறந்திட்டா சரி ஓகே-னு சொல்லலாம். ஆனால் இவருக்கு எந்த குறையும் இல்ல. உடம்பில் எந்த பிரச்சனையும் கிடையாது. அற்புதமான ஒரு நடிகர். அற்புதமான மனிதர். அவரை இழந்தது கலையுலகத்திற்கு இறப்போ இல்லையோ, என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் எனக்குமான ஒரு இழப்பாக இருக்கு. 

 

நிஜ வாழ்க்கையில் ரொம்ப தமாஷா பேசுவாரு. கருத்துக்களை ஸ்ட்ராங்காக பேசுபவர். அவருக்கு இது போல் நடப்பதற்கு வாய்ப்புகளே கிடையாது. அனால் அவர் மறைந்திருப்பது, என்ன சொல்றது. வார்த்தைகளே இல்லை. எப்போதாவது சந்திக்கிற மனிதர்கள் இறக்கிறார்கள் என்றால் அது பெரிய ஷாக் இருக்காது. சமீபத்தில் சந்தித்த மனிதர்கள் இறக்கும் பொழுது தான் ரொம்ப பெரிய சங்கடமா இருக்கு. 

 

மயில்சாமி இறப்பதற்கு 2 நாள் முன்னாடி அவரிடம் பேசினேன். தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடமும் அப்படி தான். 1 வாரம் முன்னாடி பேசியிருப்பேன். இவர்களெல்லாம் நான் அடிக்கடி தொடர்புகொள்கிற மனிதர்கள். இவர்கள் திடீர்னு இறப்பது ஷாக்காக இருக்கு. மனசுக்குள் ஒரு திகில் வருகிறது" என்றார். 

 

 

Next Story

எம்.ஜி.ஆர் மேல் எங்க அப்பா போட்ட கேஸ்! - ரமேஷ் கண்ணா

Published on 24/12/2020 | Edited on 24/12/2020
ramesh kanna

 

90களில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகரும் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என அத்தனை முன்னனி நடிகர்களுடனும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவருமான ரமேஷ் கண்ணா எம்.ஜி.ஆரின் குடும்பத்துக்கும் தனது குடும்பத்துக்குமான உறவை, தொடர்பை தனது 'ப்ரண்ட்ஸ்' புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பகுதி இங்கே...

 

”எங்க அப்பா நாராயணன், பாம்பே ஜெனரல் மோட்டார்ஸ்ல ஜெனரல் மேனேஜரா இருந்தாரு. வி.என்.ஜானகியுடைய அம்மாவான நாராயணி அம்மா, எங்க அப்பாவுக்கு சகோதரி. அவுங்க, என் அப்பாவைக் கூப்பிட்டு, "டேய் நாராயணா, இவ சினிமாவுல நடிக்க ரொம்ப ஆசைப்படுறா. நீ இவளுக்கு ஏதாவது பண்ணு, இவளைக் கூட்டிட்டுப் போ"னு சொல்லவும் எங்க அப்பா, பாம்பேயில தன் வேலையை விட்டுட்டு சென்னையில் வி.என். ஜானகி கூட இருந்து, சினிமா வாய்ப்புக்காக பல பேரைப் பார்த்து, ஒவ்வொரு படத்தின் போதும் கூட இருந்து உதவியா இருந்தாரு. ஜானகிக்கு முதல் திருமணமாகி, அது இருவருக்கும் ஒத்து வராம பிரிஞ்சது இன்னொரு கதை. அப்போ புகழ் பெற்ற இசையமைப்பாளரா இருந்த பாபநாசம் சிவன், எங்க அப்பாவுக்கு உறவு. வி.என். ஜானகிக்கும் அவர் பெரியப்பா முறை வேணும்.

 

mgr family

எங்க வீட்டில் இருக்கும் எம்.ஜி.ஆர் குடும்பப் படம் - எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகியுடன் அவரது மகன் சுரேந்திரன்

 

எங்க அப்பா அவுங்க கூட இருந்தப்போ 'ராஜமுக்தி' பட வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பு பிரச்சனையையும் கூட்டிகிட்டு வருதுன்னு இவங்களுக்குத் தெரியாது. தியாகராஜ பாகவதர் நடிச்ச அந்தப் படத்துல வி.என். ஜானகிதான் ஹீரோயின். எம்.ஜி.ஆர் அதுல ஒரு வேடத்துல நடிச்சாரு. அப்போ அவரு சிறிய கதாபாத்திரங்கள்தான் பண்ணிக்கிட்டு இருந்தார். இந்தப் பட ஷூட்டிங்கின் போது, எம்.ஜி.ஆர்க்கும்  வி.என். ஜானகிக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு, காதலானது. ஆனால், எம்.ஜி.ஆரோ ஏற்கனவே திருமணமானவர். இவங்களோட காதல் விஷயம் தெரிஞ்சு எங்க அப்பா கோபமாகிட்டாரு. ஜானகி வீட்டிலும் இது பிரச்சனை ஆச்சு. எம்.ஜி.ஆர் அப்போ சின்ன நடிகர், ஏற்கனவே திருமணம் ஆனவர். ஜானகி,  பிரபலமாகியிருந்தாங்க. அவரின் புகழுக்கும் பணத்துக்கும்தான் எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டாரென்று எங்க அப்பா அப்போ நினைத்தார்.

 

அவர்களிருவரும் திருமணமும் செஞ்சுக்கிட்டாங்க. ஆனா, அது சட்டப்பூர்வமாக செல்லாது. எங்க அப்பா அவங்க திருமணத்தை எதிர்த்து  கோர்ட்ல கேஸ் போட்டாரு, கேசும் ஜெயிச்சது. ஆனாலும் அவர்கள் பிரியல. அவர்கள் திருமணமும் ரொம்ப நாள் கழிச்சுத்தான் சட்டபூர்வமாச்சு. அப்புறம்தான் எங்க அப்பாக்கு அவுங்க காதல் புரிஞ்சது. ஆனா, அப்பாவுக்கும் ஜானகிக்குமான உறவு தூரமாகிடுச்சு. பின்னாடி ரொம்ப நாள் கழிச்சு, எம்.ஜி.ஆர் அரசியலில் தீவிரமாக இறங்கி, முதல்வரான பின், அப்போ அந்த கேஸ்ல எங்கப்பாவே கோர்ட்ல வாதாடியதை நினைவு வைத்து சொல்லியிருக்கார், "நாராயணனை சட்ட அமைச்சர் ஆகிடலாமா? அவருக்கு எல்லா விவரமும் தெரியுது" என்று. ஆனால், வி.என்.ஜானகி அதுக்கு ஒத்துக்கலை. இப்படி, உறவு விலகியிருந்தாலும் பின்னாடி, என் சித்தி பொண்ணு, அதாவது என் தங்கையை வி.என்.ஜானகி மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். 'திருமலை'ல விஜய் சொன்ன மாதிரி வாழ்க்கை ஒரு வட்டம்தான், இல்ல?

 

ஆனால், நான் இந்த உறவு விஷயங்களை சினிமாவுல யார்கிட்டயும் சொல்லிக்கிட்டது இல்லை. இப்போதான் பகிர்கிறேன். அதுவும் சத்யராஜ்க்கு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான். வி.என்.ஜானகியின் சகோதரர் பையன் தீபன் வீட்டு திருமணத்திற்கு போயிருந்தப்போ சத்யராஜும் வந்திருந்தார். அப்போ தீபன் சத்யராஜ்கிட்ட, "இவரு யார் தெரியுமா?"னு என்னைக் காட்டி கேக்குறாரு. சத்யராஜ் சிரிச்சுக்கிட்டே, "இவரைத் தெரியாதா, ரமேஷ் கண்ணா. நாங்க மகாநடிகன் படத்துல ஒண்ணா நடிச்சிருக்கோமே"னு சொல்றாரு. "உங்களுக்குத் தெரிஞ்ச ரமேஷ் கண்ணா வேற... எங்க குடும்பத்துக்கு ஒரே தாய்மாமன் இவருதான்"னு தீபன் சொல்ல, சத்யராஜ்க்கு ஒரே ஆச்சரியம். அவரு நடிகர் ராஜேஷ்கிட்ட சொல்ல, அப்புறம் அப்படியே சினிமால பலருக்கும் தெரிஞ்சுது.” 

 

இது போல ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ் என பலருடனான தனது இனிய, சுவாரசியமான அனுபவங்களை, தமிழ் சினிமா குறித்த பல கதைகளை அந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். புத்தகத்தை அமேசான் கிண்டிலில் படிக்கலாம்...  க்ளிக் செய்யுங்கள்...

ramesh kanna book

புத்தகத்தை ஆர்டர் செய்து வீட்டில் பெற... க்ளிக் செய்யுங்கள்...

ramesh kanna books