Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்! வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 2

Published on 03/01/2024 | Edited on 04/01/2024
vietnam travel series part 2

“அப்பா டூர்க்கு எங்கபோற? “வியட்நாம்னு ஒரு நாட்டுக்குப்பா” “அது எங்க இருக்கு? “ரொம்ப தொலைவுல இருக்கு. “எப்படிப்போற? “ஃபிளைட்ல “என்னது பிளைட்லயா? “ஆமாம்டா “அப்போ நானும் வர்றன்ப்பா “ஒருநாட்லயிருந்து இன்னொரு நாட்டுக்கு போக பாஸ்போர்ட் எடுக்கனும், விசா வாங்கனும். உனக்கு இன்னும் பாஸ்போர்ட் எடுக்கல, எடுத்ததும் கூப்பிட்டுக்கிட்டு போறன். “பிளைட் பறக்கும்போது கீழே கடல் பார்க்க முடியுமாப்பா “பார்க்கலாம்டா. “அப்போ, நீ போகும்போது பிளைட் வெடிச்சிடும் கடல்ல விழுந்து திமிங்கலம் உன்ன சாப்பிட்டுடும் பார்த்துக்க.. “அடேய் என அருகில் இருந்த மனைவி அலறினார். நான் சிரித்தபடி அதெல்லாம் வெடிக்காது, வெடிச்சதுன்னா எங்களை காப்பாத்திக்க ஃலைப்ஜாக்கெட் தருவாங்க. “அது கீழத்தானே வரும் ஆமாம்.  “நீ கடல்ல விழும்போது சுறா மீன் உன்னை கடிச்சி தின்னுடனும் எனச்சொன்னதெல்லாம் விமானத்தில் பறக்கும்போதுதான் நினைவுக்கு வந்தது.

இதனை அருகில் அமர்ந்திருந்த நண்பரான பள்ளி தலைமைஆசிரியர் பகிர்ந்துகொண்டபோது, அடேய் ஏன்டா இம்சையை தர்ற, எதை எப்போ சொல்றதுன்னு இல்லையா என்பதுபோல் பார்த்தார். “இரண்டு மணி நேரத்திற்குள் மேற்குவங்கம் கொல்கத்தா நேதாஜி இன்டர்நேஷனல் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது நாங்கள் பயணித்த விமானம். கனெக்டிங் விமானம் என்பதால் விமானத்திலிருந்து இறங்கி வியட்நாம் தேசத்தின் தலைநகரம் ஹனாய் நகரத்துக்கான விமானத்துக்கு ஃபோர்டிங் செய்யவேண்டியிருந்தது. டிக்கெட் எடுத்துக்கொண்டு இமிகிரேஷன் பகுதிக்கு சென்றோம். இமிகிரேஷன் பகுதியில் வெளிநாட்டுக்கு செல்வதற்கான சீல் முதல்முறையாக கடவுச்சீட்டில் விழுந்தது.

vietnam travel series part 2

“அடுத்ததாக செக்யூரிட்டி செக்கிங்குக்காக வரிசையில் நின்றபோது சில மணி நேரங்களுக்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் இதேபோல் செக்கிங்குக்காக நின்றது நினைவுக்கு வந்தது. “விமானத்தில் பயணிப்பவர்கள் செக்யூரிட்டி செக்கிங் செய்யும் இடத்தில் பெல்ட், பர்ஸ், செல்போன், வாட்ச், பேனா உட்பட எல்லாவற்றையும் ஒரு ட்ரேவில் வைத்து கன்வேயர் ஃபெல்டில் வைக்கவேண்டும். அதை செக் செய்வார்கள் என முன்பே சொல்லியிருந்தார்கள். ஓ இதுவேறயா என நினைத்துக்கொண்டேன். அதேபோல் ட்ராவல் ஃபேக்கில், சட்டை, பேன்ட் பாக்கெட்டில் பிளேடு, கத்தி, பேனா, சாவி கூட இருக்ககூடாது என கிலி ஏற்படுத்தியிருந்தார்கள். அதனால் உடைகளை பேக் செய்யும்போதே பார்த்து பார்த்து பேக்கிங் செய்துயிருந்தேன். “சென்னை விமான நிலையத்தில் நாங்கள் செல்லவேண்டிய விமான நிறுவனத்துக்கான ஊழியர், எங்களுக்கான டிக்கட் தரும்போது எங்கள் மூவரிடம் சம்மந்தம்மில்லாமல் எதுக்கு போறீங்க?, எங்கே தங்கப்போறீங்க என கேள்வியாக கேட்டுக் கொண்டுயிருந்தார். 

இதுயெல்லாம் இமிகிரேஷன் ஆபிஸர் கேட்கவேண்டிய கேள்வியாச்சே, இதையேன் இவுங்க கேட்கறாங்க என நினைத்துக்கொண்டு இருந்தபோது, என்ன நினைத்தாரோ பயணத்துக்கான டிக்கட் தந்துவிட்டார். செக்யூரிட்டி செக்கிங் சென்று ட்ராவல் ஃபேக்கை ட்ரேவில் வைத்து அனுப்பிவிட்டு கையில் பாஸ்போர்ட், டிக்கெட்டோடு போய் நின்றேன். மெட்டல் டிடெக்டர் வைத்து செக் செய்தார்கள் மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் இரண்டு காவலர்கள். “மெட்டல் டிடெக்டர் என் இடுப்புக்கு அருகில் வந்ததும் பீப், பீப் என சத்தம் போட்டது. பாக்கெட்டில் இருந்த பேனா, கையில் வைத்திருந்த பாஸ்போர்ட், விமான டிக்கட்டை கீழே வைக்கச்சொன்னார் வைத்ததும் மீண்டும் செக்கிங். இடுப்புக்கு கீழே வந்தபோது  மீண்டும் பீப், பீப் சத்தம். அவர்கள் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தபோது, நான் என்ன இடுப்புல வெடிகுண்டாடா வச்சியிருக்கன் என வடிவேல் போல் மைன்ட் வாய்ஸ் உள்ளுக்குள்ளேயே கேட்டது.

“இடுப்புல என்ன என கேட்டவரிடம், “பதில் ஏதும் சொல்லாமல் சடாரென சட்டையை தூக்கி பார்த்துக்க எனக்காட்டியதும்  அவர்களின் முகத்தில் அதிர்ச்சியை கண்டேன். அவர்கள் அதிர்ச்சியானதை பார்த்து நான் கண்டுகொள்ளவில்லை. இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி அர்ணாக்கயிறை ஃபேன்ட் மேல் போட்டுயிருந்ததை பார்த்துவிட்டு அர்ணாக்கொடியா என்றார் பாதுகாப்பு படை காவலர். செக்யூரிட்டி செக்கிங் குறித்து ஏற்கனவே நண்பர்கள் சொல்லியிருந்ததால், நாமயென்ன ஆபிஸ் மீட்டிங்கா போறோம் பக்காவா ட்ரெஸ் செய்துக்கிட்டு, டக்இன் பண்றதுக்கு. போறது ஊர் சுத்த. அங்கப்போய் பட்டாபட்டி டவுசர் போட்டுக்கிட்டு ஊர் தான் சுத்தப்போறோம், அதுக்கு எதுக்கு ஃபெல்ட். பிளைட் ஏறும்போதுயெல்லாம் அதைவேற கழட்டி வைக்கனும் என யோசித்தே அதனை அணிந்துவரில்லை. பர்ஸ் கூட எடுத்துக்கொள்ளவில்லை. ஃபேன்ட் இடுப்பில் நிற்க அர்ணாகயிறு பயன்படுத்திக்கொண்டேன். அந்த வெள்ளி அர்ணாக்கொடிக்கு தான் அது பீப், பீப் என சத்தம் போட்டுள்ளது.

vietnam travel series part 2

“அர்ணாக்கொடி வெளியே இல்லாம இருந்துயிருந்து உள்ள என்னயிருக்குன்னு  திரும்ப கேட்டுயிருந்தா இவன் ஃபேன்ட் கழட்டி காட்டியிருப்பானோ என மனதுக்குள் கண்டிப்பாக நினைத்துயிருப்பார் அந்த காவலர். “அர்ணாக்கொடியா என அவர் கேட்ட கேள்விக்கு, ம் என தலையாட்டியதும் ஓ.கே, போ என தலையாட்டி விமானத்துக்கு வழிவிட்டதை நினைத்துபார்த்தேன்.  “கொல்கத்தா விமானநிலையத்தில், செக்யூரிட்டி செக்கிங்கின் போது பீப், பீப்னு கத்தும்மே இங்க என்ன கேட்கப்போறாங்கன்னு தெரியலயே என நினைத்துக்கொண்டு நின்றிருந்தேன். நம்ம சென்னை விமான நிலையம் போல் இல்லாமல் கொஞ்சம் சொதப்பலாகவே செக்யூரிட்டி செக்கிங் இருந்தது. வேகவேகமாக முடித்து விமான நிலைய டெர்மினருக்கு சென்று அமர்ந்தபோது அப்பாடா என்றிருந்தது.   

“ஸ்மோக்கிங் பகுதியில் ஆண், பெண் என பேதம்மில்லாமல் கூட்டம் கூட்டமாக என்னைப்போன்ற இளையோர் நின்று கொண்டு ஊதிக்கொண்டு இருந்தார்கள். புகை உடலுக்கு பகை எனச்சொல்லத்தான் ஆசை. நம்மவூர்ல நாம சொன்னாலே கேட்கமாட்டாங்க, வெளி மாநிலத்தில் வந்து சொன்னால் நாம ஒன்னு சொல்ல மொழி புரியாம கன்னத்தில் குடுத்துட்டா அதனால் செல்போனுக்குள் தஞ்சமடைந்தேன். “வியட்நாம் செல்வதற்கான விமானத்துக்குள் ஏறினால் சென்னையில் இருந்துவந்த அதே விமானம். 9.30 மணிக்கு கிளம்பிய விமானம், வியட்நாம் தலைநகர் ஹனாய் நகரில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் இரவு 1.30 மணிக்கு தரையிறங்கியது. எங்கள் விமானம்  தரையிறங்கிய 5 நிமிட இடைவெளியில் சீனாவில் இருந்து வந்த ஒரு விமானமும் தரையிறங்கியது.

“சர்வதேச விமான நிலையம் ஆள் ஆரவரமற்ற பகுதிபோல் இருந்தது. இமிகிரேஷன் பகுதி க்யூவை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டோம். இரண்டு அலுவலர்கள் மட்டும் சுமார் 400, 500 பயணிகளுக்கான இமிகிரேஷனை செக் செய்து கொண்டு இருந்தார்கள். ஒருஆள் நகர 3 முதல் 5 நிமிடம்மானது. இமிகிரேஷன் அலுவலரிடம் பாஸ்போர்ட், விசா தரவேண்டும் என்பதால் அதனை எடுத்து கையில் வைத்துக்கொண்டு க்யூவில் நின்றுகொண்டு இருந்தோம். அப்போது  உடன் வந்த நண்பர் தனது ஷோல்டர் பேக்கை தலைகீழாக கொட்டி துயாவிக்கொண்டு இருந்தார். என்ன சார் தேடறீங்க? “பாஸ்போர்ட் காணலைங்க.“  பயணம் தொடரும்…… 

 

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 13

Published on 05/03/2024 | Edited on 06/03/2024
vietnam travel series part 13

கடிகாரத்தில் நேரம் 5 மணியை காட்டியது. 5 மணிக்கெல்லாம் இருட்டிவிட்டதே என நினைத்தால் காலநிலை அப்படி. 4 மணிக்கெல்லாம் சூரியன் மறைந்து இருள் கவ்வத் தொடங்கிவிடுகிறது. வியட்நாமில் 5 மணி என்றால் இந்தியாவில் மாலை 3.30 மணி.

நம்மை முதல் நாள் ஹோட்டலில் இறக்கிவிட்டபின் இரவு உணவுக்காக தலைநகர் ஹனாய் வீதிகளில் வலம் வந்தோம். அங்கு நாம் கண்டது, நகரத்தின் பல பகுதிகளில் பல்வேறு விதமான கடைகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் 7 மணிக்கெல்லாம் மூடப்பட்டு இருந்தது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் புழங்கும் பகுதிகளில் மட்டும் கடைகள், தங்கும் விடுதிகள், சாலையோர உணவகங்கள் இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணி வரை இயங்குகின்றன. இதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய உணவு கடைகள் மட்டுமே இரவு 11 மணி வரை இயங்குகின்றன.  

இந்தியாவில் விதவிதமாக சாப்பிட்டு நாக்கு நளபாகத்துக்கு அடிமையானவர்கள் வியட்நாம் உணவை சாப்பிட்டால் முகம் சுருங்கிவிடும். வியட்நாமின் பிரதான உணவு ’போ’ என சொல்லப்படும் சூப். சுடச்சுட தருகிறார்கள். அதில் சைவம் என்றால் நூடூல்ஸ், நறுக்கப்பட்ட வெங்காயதண்டு, வேகவெக்கப்பட்ட முட்டைக்கோஸ் இலை, ஏதாவது ஒரு கீரையை போட்டு தருகிறார்கள். அசைவம் என்றால் நூடூல்ஸ்சுடன், எலும்பு இல்லாத வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை பஞ்சுபோல் பிச்சிப்போட்டு தருகிறார்கள். பீப், பன்றிக்கறி வேண்டும் என்றாலும் கலந்து தருகிறார்கள். அவர்களின் உணவு எதிலும் உப்பு கிடையாது, காரம்  கிடையாது, பெப்பர் கூட கிடையாது. சில ஹோட்டல்களில் மட்டும் பெப்பர், உப்பு தந்தார்கள். வியட்நாமிய மக்கள் பெரும்பாலும் உணவில் உப்பு, காரம் சேர்த்துக்கொள்வதில்லை. உணவில் மஞ்சள் தூள் மட்டும் போட்டு வேகவைத்த உணவை தருகிறார்கள். உணவில் காரம் வேண்டும் என்றால் பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய் 4 அல்லது 5 துண்டு தருகிறார்கள் அல்லது மிளகாய்சாஸ்  தருகிறார்கள்.

காலை, மதியம், இரவு மூன்று வேளையும் கட்டாயம் வியட்நாமியர்கள் போ உணவை சாப்பிடுகிறார்கள். அதற்கு தொட்டுக்கொள்ள பொரித்த நத்தை, வேகவைக்கப்பட்ட மஸ்ரூம், மீன் துண்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் தரும் உணவை அந்த இரண்டு குச்சிகளில் எடுத்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு சிரமமானதாக இருந்தது. அவர்களும், மேற்கத்திய சுற்றுலாப்பயணிகள் அசால்டாக அதனை பயன்படுத்துகிறார்கள். கைக்கும் வாய்க்கும் ஒரு தொடர்பு  இருக்கணும்ங்க, உணவை கைகளால் பிசைந்து அதை எடுத்து நாம் வாயில் வைத்து  சாப்பிடும்போதுதான் உணவு மேல் மரியாதை வரும், அது உடம்பில் ஒட்டும் என வாட்ஸ்அப் வாத்தியார்களின் மெசேஜ் எப்போதே படித்தது நினைவுக்கு வந்ததால் அவுங்க சொல்றது நியாயம்தானே என சமாதானம் செய்துக்கொண்டு நம்மவூர் ஸ்டைல்க்கே மாறிவிட்டேன்.  

அசைவத்தில் சிக்கன், கடல் உணவுகள், பீப், பன்றிக்கறி பிரதானமாக உள்ளது. மட்டன் எனச்சொல்கிறார்கள் அது ஆட்டுக்கறி இல்லை. பன்றிக்கறி. சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் தினமும் சிக்கன், கடல் உணவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அதிலும் எண்ணெய்யில் பொறித்த குட்டி ஆக்டோபஸ் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

ஹோட்டல்களில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என்கிற பெயரில் மரவள்ளி கிழங்கில் செய்யப்பட்ட வடை, வேகவைத்து வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், வெங்காய போண்டா அற்புதமாக செய்து தந்தனர். உப்பு இல்லாத பண்டம் குப்பைக்கு என்பது நம்மவூர் பழமொழி. அங்கே உப்புயில்லாத பண்டம் வயிற்றுக்கு என்கிறார்கள். உப்புதான் இல்லை. ஆனால் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

வியட்நாம் உணவு பழிவாங்கிவிடுமோ என நினைத்திருந்தோம். முதல் இரண்டு நாள் வியட்நாம் உணவுகளை ஏற்றுக்கொள்ள நாக்கு அடம்பிடித்தது. அதன்பின் அதன் சுவைக்கு பழக்கமாகி அங்கிருந்த 14 நாட்களும் உடம்பை எதுவும் செய்யவில்லை.

வெள்ளை சோறு வியட்நாமில் எல்லா ஹோட்டல்களிலும் தருகிறார்கள். நம்மவூரில் சாப்பாடு என்றால் அதனோடு சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், மோர், பொறியல், கூட்டு என வகைவகையாக தருவார்கள். அங்கே அதெல்லாம் கிடையாது, அரைவேக்காட்டில் வேகவைக்கப்பட்ட கத்தரிக்காய், வெங்காயம், புதினா வைத்து அதன்மேல் எண்ணெய்யில் பொறிக்கப்ட்ட சிறியதாக கட் செய்யப்பட்ட வெங்காய தாள்களை தூவி சாஸ் ஊத்தி தனியாக ஒரு பிளேட்டில் தந்தார்கள். சாதத்தோடு இதனைத்தான் கலந்து சாப்பிடவேண்டும். தொட்டுக்க மரவள்ளிக்கிழங்கு வடை தருகிறார்கள்.

வெள்ளை சாதமே சர்க்கரை பொங்கல் போல் லேசாக தித்திப்பாக இருந்தது.  காலை, இரவு நேரத்தில் ப்ரைட்ரைஸ் கண்டிப்பாக இருக்கிறது. சிக்கன் ரைஸ், பீப் ரைஸ், வெஜிடபிள் ப்ரைட்ரைஸ் தருகிறார்கள். முட்டை அங்கே வெஜ் கேட்டகரியில் வைத்துள்ளார்கள். ஒரு ஆம்லேட் என்றால் இரண்டு முட்டை ஊத்தி செய்கிறார்கள்.

உலகளவில் சாலையோர உணவகங்களில் புகழ்பெற்றது வியட்நாம். வியட்நாம் நாட்டில் தலைநகரம் ஹனாய், ஹோசிமின், அலாங் பே போன்ற எந்த நகரமாக இருந்தாலும், சிற்றூராக இருந்தாலும் நடந்துபோகும்போது தடுக்கி விழுந்தால் சாலையோர உணவகங்கள் மேல்தான் விழவேண்டும். அந்தளவுக்கு சாலையோரங்களில் உணவகங்கள் உள்ளன. 80 சதவித சாலையோர உணவகங்கள் அசைவம். 20 சதவிதம் அளவுக்கே சைவ உணவகங்கள். 

வியட்நாம் மக்கள் பெரும்பாலும் இந்த சாலையோர உணவகங்களிலேயே உணவு சாப்பிடுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்வமாக இங்கே சாப்பிடுகின்றனர். அந்தளவுக்கு  சாலையோர உணவகங்கள் தூய்மையாக இருந்தன. சாலையோர ஹோட்டல்களில் குறைந்த விலை, தரமான உணவாக இருக்கிறது. பெரிய ஹோட்டல்களில்  அதிகவிலை, அதே தரத்திலான உணவு கிடைக்கிறது.

ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய உணவகங்கள் இருந்தாலும் உணவு பொருட்களின் விலை நம்மவூரைவிட அதிகமாகவே இருக்கிறது. சாலையோர உணவு விடுதியாக இருந்தாலும், ஓரளவு பெரிய உணவு விடுதியாக இருந்தாலும் விலை கிட்டதட்ட  ஒரே விலையாகத்தான் இருந்தது. கொஞ்சம் தான் வித்தியாசப்படுகிறது.

நம்மவூர் சாப்பாட்டத்தை தான் சாப்பிடனும் என விரும்பி இந்திய ரெஸ்டாரெண்ட்டுக்குள் சென்றால் அங்கே கிடைப்பது நார்த் இந்தியா உணவுகள் தான். தென்னிந்திய உணவுகள் 99 சதவிதம் நாட்டின் எந்த பகுதியிலும் கிடைப்பதில்லை. 

இங்குள்ள ஹோட்டல்களில் உள்ள ஒரே ஒற்றுமை குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. 300 மில்லி லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலின் விலை நம்மவூர் மதிப்புக்கு 80 ரூபாய் வருகிறது. கம்பெனிக்கு தகுந்தார்போல் விலையும் மாறுகிறது. சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் என்ன செய்வது? அதற்கு இதை குடிங்க என நம் கையில் திணிப்பதை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.

பயணங்கள் தொடரும்…………..  

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி – 12

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vietnam-travel-series-part-12

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கி வந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட 1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்துகொண்டனர். துப்பாக்கிப் பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹேசிமின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவரான நுகுய்ன் தை டிங் என்பவரால் அது தொடங்கப்பட்டது. இவர் இரண்டாம் இந்தோசீனா போரின்போது தேசிய விடுதலை முன்னணியில் முக்கிய பெண் தலைவராக இருந்தார். அவரின் வேண்டுகோளின்படியே பெண்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஹனாய் நகரத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு 1987 ஜனவரி 10ஆம் தேதி வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1995 அக்டோபர் 20 ஆம் தேதி நான்கு மாடி கட்டிடமாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்திற்குள் குடும்பத்தில் பெண்கள், வரலாற்றில் பெண்கள், பெண்கள் ஃபேஷன் என மூன்று தலைப்பில் பிரித்து வைக்கப்பட்டு, நாட்டில் உள்ள 54 இனங்களின் பெண்களின் கலாச்சாரம், உணவு, உடை, கலாச்சாரம், விடுதலை போராட்டம், இந்தோசீனா போர், இரண்டாம் இந்தோசீனா போரில் பெண்களின் பங்கை பறைச்சாற்றும் ஆவணங்களாக 40 ஆயிரம் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வியட்நாமில் உள்ள 64 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாலினம் மற்றும் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக உள்ளது. கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வே இல்லை. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாக அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. பெண்களுக்கு ஓய்வு மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு குறைந்த நேரமே உள்ளது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வீட்டு வேலைகள் செய்யவும், வயல்களில் வேலை செய்யவும், கால்நடைகளை வளர்த்து பொருளீட்டவே நேரம் சரியாக இருக்கின்றன என்றுள்ளார்கள். இதனால் எல்லா மட்டத்திலும் பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தை நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகளவு தடை செய்துள்ளன.

தற்போது நாடு முழுவதும் 10,472 உள்ளூர் பெண்கள் சங்கங்களைச் சேர்ந்த 13 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் வியட்நாம் பெண்கள் சங்கத்தில் உள்ளனர் என்கின்றனர். அருங்காட்சியக நிர்வாகிகள் நாடு முழுவதும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் நாடு விடுதலை பெற்றது, ஆனால் இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்திடம் இருந்து பெண்கள் விடுதலை பெறவில்லை என்கிறது.  

சுதந்திரத்துக்காக, உரிமைக்காக ஒருக்காலத்தில் பெரும் பேரரசுகளை எதிர்த்து, துப்பாக்கி குண்டுகளுக்கே பயப்படாத வியட்நாம் பெண்கள் இப்போது மக்களுக்காக குரல் கொடுத்துவிட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்து வரும் சக பெண்களுக்கு குரல் கொடுக்ககூட தைரியமுற்று இருப்பதை காண முடிந்தது. 

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11