Advertisment

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11

Vietnam-travel-series-part-11

வியட்நாம் தேசத்தின் தன்ஹோ (ச்சியௌசோ) மாகாணத்தின் யென்பின் மாவட்டத்தில் கி.பி 226ஆம் ஆண்டு பிறந்தவர் லேடி ட்ரியூ. நாங் காங் மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த லேடி ட்ரியூ, தனது சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அவர் பிறந்த அதே ஆண்டில் வியட்நாமின் பெரும்பாலான பகுதிகள் சீனாவின் வூ வம்ச ஆளுகையின் கீழ் இருந்தது. வியட்நாமின் ஒவ்வொரு பகுதியையும் ஆக்கிரமித்து தமது ராஜ்ஜியத்தை வூ வம்சம் விரிவுப்படுத்திவந்தது.

Advertisment

ச்சியெளசோவை ஆக்கிரமிக்க தமது படையினர் சுமார் 2,000 பேரை வூ அரசர் அனுப்பினார். அப்போது அந்த பகுதி ஹான் வம்சத்தைச் சேர்ந்த பேரரசின்கீழ் இருந்தது. ஷீ ஸீ ஆளுகையில், அங்கு வாழ்ந்த மக்களில் பலர் பெளத்த மதத்தவராக இருந்தனர். ஷீ ஸீயின் குடும்பத்தை அழித்து அப்பகுதியை தனது ராஜ்ஜியத்துடன் இணைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படியே அந்த நகருக்குள் நுழைந்த வூ படையினர், ஷீ ஸீ வம்சத்தினரை சிறைப்பிடித்து முக்கியமானவர்களின் தலையைத் துண்டித்தனர். எதிர்த்த ஆயிரக்கணக்கான போர்வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

Advertisment

நகரங்களின் ஆக்கிரமிப்பு முடிந்தவுடன் ச்சியெளஸீ மாகாணத்தை ச்சியெளசோ மற்றும் குவாங்செள என இரண்டாக பிரித்தது வூ வம்சம். அதன் நிர்வாகியான சன் குவான் தலைமையின் கீழ் நிர்வாகம் நடந்துவந்தது. லேடி ட்ரியூ, தனது இருபதாவது வயதில் தன்னைக் கொடுமைப்படுத்தி வந்த தனது அண்ணியை கொலை செய்து விட்டு மலையில் போய் வசிக்கத் தொடங்கினார். துணிச்சல் மிக்க அந்த பெண்ணின் பின்னால் சிலர் திரண்டனர். தவறுகளை தட்டிக்கேட்கும் தலைவியாக அப்பகுதியில் வளர்ந்தார். அவரின் போக்கைப் பார்த்து பயந்த அவரது சகோதரர், அவரை தடுக்க முயன்றபோது, நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன், யாருக்கும் அடிமையாகவும் இருக்கமாட்டேன் என்றார். அவரை ஒடுக்க வூ வம்சம் முடிவு செய்து அவரை பிடிக்க படைவீரர்களை அனுப்பியது. அவர்களை விரட்டியடித்தார் ட்ரியூ. இதனால் அவரின் வீரம் மக்களிடம் பரவியது. அப்பகுதி இளைஞர், இளைஞிகள் அவரது தலைமையில் அணி திரண்டனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களானது.

கி.பி 248 ஆம் ஆண்டு ச்சியெளஸீ மற்றும் ச்சியூஸென் பகுதி மக்கள் சீனாவின் வூ படையினருக்கு எதிராகத் கொதித்தெழுந்தனர். அப்போது ச்சியூஸென் பகுதி கிளர்ச்சிக்குழுவை வழிநடத்தியவர் லேடி ட்ரியூ. அவரது தலைமையில் சுமார் ஐம்பதாயிரம் குடும்பங்கள் ஒரே அணியாக திரண்டன. இந்த ஆள் பலம் பெரும் படைக்கு நிகரான தோற்றமாக இருந்ததால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடவடிக்கையை தொடங்கியது வூ பேரரசு. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வூ வம்ச படையினரை லேடி ட்ரியூவின் படையினர் தாக்கத் தொடங்கினார்கள். லேடி ட்ரியூ தனது தலைமையிலான கிளர்ச்சிக்குழுவை குஃபோங் மாவட்டத்திலிருந்து, வூ வம்ச படைகள் மீது தாக்குதல் நடத்தச்சொன்னார். முப்பதுக்கும் மேற்பட்ட முறை வூ வம்ச படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்கள்வரை இந்த மோதல் விட்டு, விட்டுத் தொடர்ந்தது. ஆனால், ஒவ்வொரு முறை பின்வாங்கியபோதும், வூ வம்ச நிர்வாகம், படை வீரர்களை கூடுதலாக அனுப்பியது. கடைசியில் ராணுவத்தை அனுப்பி வைத்தது வூ வம்சம். இதனால் போதிய பரிவாரங்களில்லாமல் ட்ரியூ வீழ்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து போயியென் என்ற பகுதிக்கு தப்பிச் சென்ற அவர், அங்கு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக வியட்நாமிய வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர் இறந்து போனாலும், தங்களின் காவல் தெய்வமாக ட்ரியூவை உள்ளூர் மக்கள் போற்றி வழிபட்டனர். வியட்நாமின் ஹனோயி, ஹோ ச்சி மின் உள்ளிட்ட நகரங்களில் ட்ரியூவின் வீரத்தை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயர், சில வீதிகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. தனோவா மாகாணத்தில் அவருக்காக ஒரு கோயிலும் எழுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல் கிரியேட்டிவ் அசெம்பிளி என்ற வீடியோகேம் தயாரிப்பு நிறுவனம், த்ரீ கிங்டம் என்ற விளையாட்டில் லேடி ட்ரியூவின் பெயரில் கதாபாத்திரம் வைத்துள்ளது. மற்றொரு நிறுவனமான ஃபிராக்ஸிஸ் கேம்ஸ், வியட்நாமிய நாகரிகத்தின் தலைவி என்று ட்ரியூவை அழைத்து பெருமைப்படுத்தி உள்ளது. வியட்நாமில் சுதந்திரத்துக்கான கிளர்ச்சிக்குழுவை உருவாக்கிய முதல் பெண்ணாக லேடி ட்ரியூ அறியப்படுகிறார்.

வியட்நாம் பெண்களின் வீரத்துக்கு முன்னோடி இவர்கள் மட்டுமல்ல என்கிறது ஹோவா லோ சிறைச்சாலையின் வரலாற்று பக்கங்கள். இந்த சிறையில் ஆண் கைதிகள் மட்டும் அடைக்கப்படவில்லை, பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பல பெண் அரசியல் கைதிகள் தங்களது குழந்தைகளோடு அடைக்கப்பட்டிருந்தனர், கர்ப்பிணியாக இருந்தவர்கள் சிறைக்குள் வந்தபின் குழந்தை பெற்றனர். இந்த சிறையில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான அரசியல் பெண் கைதிகள் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்படும் பெண்களை நிர்வாணமாக இருக்கவைத்தனர் பிரெஞ்ச் அதிகாரிகள். அந்த அறைகளில் குளிக்க, கழிவறை செல்ல தடுப்புகளோ, தனி அறைகளோ கிடையாது. தினமும் ஒரு தேங்காய் கொட்டாங்குச்சியில் தான் குடிக்க தண்ணீர் தருவார்கள். அன்றைய நாள் முழுவதும் அந்த தண்ணீர் தான் குடிக்கவேண்டும். 1944 ஆம் ஆண்டில் பெண் கைதிகளை சித்தரவதை செய்து 14 பேரை கொன்றது பிரெஞ்ச் அரசாங்கம்.

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கிவந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹே சி மின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 10

vietnam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe