Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Vietnam-travel-series-part-11

வியட்நாம் தேசத்தின் தன்ஹோ (ச்சியௌசோ) மாகாணத்தின் யென்பின் மாவட்டத்தில் கி.பி 226ஆம் ஆண்டு பிறந்தவர் லேடி ட்ரியூ. நாங் காங் மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த லேடி ட்ரியூ, தனது சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அவர் பிறந்த அதே ஆண்டில் வியட்நாமின் பெரும்பாலான பகுதிகள் சீனாவின் வூ வம்ச ஆளுகையின் கீழ் இருந்தது. வியட்நாமின் ஒவ்வொரு பகுதியையும் ஆக்கிரமித்து தமது ராஜ்ஜியத்தை வூ வம்சம் விரிவுப்படுத்திவந்தது. 

ச்சியெளசோவை ஆக்கிரமிக்க தமது படையினர் சுமார் 2,000 பேரை வூ அரசர் அனுப்பினார். அப்போது அந்த பகுதி ஹான் வம்சத்தைச் சேர்ந்த பேரரசின்கீழ் இருந்தது. ஷீ ஸீ ஆளுகையில், அங்கு வாழ்ந்த மக்களில் பலர் பெளத்த மதத்தவராக இருந்தனர். ஷீ ஸீயின் குடும்பத்தை அழித்து அப்பகுதியை தனது ராஜ்ஜியத்துடன் இணைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படியே அந்த நகருக்குள் நுழைந்த வூ படையினர், ஷீ ஸீ வம்சத்தினரை சிறைப்பிடித்து முக்கியமானவர்களின் தலையைத் துண்டித்தனர். எதிர்த்த ஆயிரக்கணக்கான போர்வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

நகரங்களின் ஆக்கிரமிப்பு முடிந்தவுடன் ச்சியெளஸீ மாகாணத்தை ச்சியெளசோ மற்றும் குவாங்செள என இரண்டாக பிரித்தது வூ வம்சம். அதன் நிர்வாகியான சன் குவான் தலைமையின் கீழ் நிர்வாகம் நடந்துவந்தது. லேடி ட்ரியூ, தனது இருபதாவது வயதில் தன்னைக் கொடுமைப்படுத்தி வந்த தனது அண்ணியை கொலை செய்து விட்டு மலையில் போய் வசிக்கத் தொடங்கினார். துணிச்சல் மிக்க அந்த பெண்ணின் பின்னால் சிலர் திரண்டனர். தவறுகளை தட்டிக்கேட்கும் தலைவியாக அப்பகுதியில் வளர்ந்தார். அவரின் போக்கைப் பார்த்து பயந்த அவரது சகோதரர், அவரை தடுக்க முயன்றபோது, நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன், யாருக்கும் அடிமையாகவும் இருக்கமாட்டேன் என்றார். அவரை ஒடுக்க வூ வம்சம் முடிவு செய்து அவரை பிடிக்க படைவீரர்களை அனுப்பியது. அவர்களை விரட்டியடித்தார் ட்ரியூ. இதனால் அவரின் வீரம் மக்களிடம் பரவியது. அப்பகுதி இளைஞர், இளைஞிகள் அவரது தலைமையில் அணி திரண்டனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களானது. 

கி.பி 248 ஆம் ஆண்டு  ச்சியெளஸீ மற்றும் ச்சியூஸென் பகுதி மக்கள் சீனாவின் வூ படையினருக்கு எதிராகத் கொதித்தெழுந்தனர். அப்போது ச்சியூஸென் பகுதி கிளர்ச்சிக்குழுவை வழிநடத்தியவர் லேடி ட்ரியூ. அவரது தலைமையில் சுமார் ஐம்பதாயிரம் குடும்பங்கள் ஒரே அணியாக திரண்டன. இந்த ஆள் பலம் பெரும் படைக்கு நிகரான தோற்றமாக இருந்ததால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடவடிக்கையை தொடங்கியது வூ பேரரசு. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வூ வம்ச படையினரை லேடி ட்ரியூவின் படையினர் தாக்கத் தொடங்கினார்கள். லேடி ட்ரியூ தனது தலைமையிலான கிளர்ச்சிக்குழுவை குஃபோங் மாவட்டத்திலிருந்து, வூ வம்ச படைகள் மீது தாக்குதல் நடத்தச்சொன்னார். முப்பதுக்கும் மேற்பட்ட முறை வூ வம்ச படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்கள்வரை இந்த மோதல் விட்டு, விட்டுத் தொடர்ந்தது. ஆனால், ஒவ்வொரு முறை பின்வாங்கியபோதும், வூ வம்ச நிர்வாகம், படை வீரர்களை கூடுதலாக அனுப்பியது. கடைசியில் ராணுவத்தை அனுப்பி வைத்தது வூ வம்சம். இதனால் போதிய பரிவாரங்களில்லாமல் ட்ரியூ வீழ்ச்சியடைந்தார். 

இதைத்தொடர்ந்து போயியென் என்ற பகுதிக்கு தப்பிச் சென்ற அவர், அங்கு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக வியட்நாமிய வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர் இறந்து போனாலும், தங்களின் காவல் தெய்வமாக ட்ரியூவை உள்ளூர் மக்கள் போற்றி வழிபட்டனர். வியட்நாமின் ஹனோயி, ஹோ ச்சி மின் உள்ளிட்ட நகரங்களில் ட்ரியூவின் வீரத்தை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயர், சில வீதிகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. தனோவா மாகாணத்தில் அவருக்காக ஒரு கோயிலும் எழுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல் கிரியேட்டிவ் அசெம்பிளி என்ற வீடியோகேம் தயாரிப்பு நிறுவனம், த்ரீ கிங்டம் என்ற விளையாட்டில் லேடி ட்ரியூவின் பெயரில் கதாபாத்திரம் வைத்துள்ளது. மற்றொரு நிறுவனமான ஃபிராக்ஸிஸ் கேம்ஸ், வியட்நாமிய நாகரிகத்தின் தலைவி என்று ட்ரியூவை அழைத்து பெருமைப்படுத்தி உள்ளது. வியட்நாமில் சுதந்திரத்துக்கான கிளர்ச்சிக்குழுவை உருவாக்கிய முதல் பெண்ணாக லேடி ட்ரியூ அறியப்படுகிறார்.

வியட்நாம் பெண்களின் வீரத்துக்கு முன்னோடி இவர்கள் மட்டுமல்ல என்கிறது ஹோவா லோ சிறைச்சாலையின் வரலாற்று பக்கங்கள். இந்த சிறையில் ஆண் கைதிகள் மட்டும் அடைக்கப்படவில்லை, பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பல பெண் அரசியல் கைதிகள் தங்களது குழந்தைகளோடு அடைக்கப்பட்டிருந்தனர், கர்ப்பிணியாக இருந்தவர்கள் சிறைக்குள் வந்தபின் குழந்தை பெற்றனர். இந்த சிறையில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான அரசியல் பெண் கைதிகள் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்படும் பெண்களை நிர்வாணமாக இருக்கவைத்தனர் பிரெஞ்ச் அதிகாரிகள். அந்த அறைகளில் குளிக்க, கழிவறை செல்ல தடுப்புகளோ, தனி அறைகளோ கிடையாது. தினமும் ஒரு தேங்காய் கொட்டாங்குச்சியில் தான் குடிக்க தண்ணீர் தருவார்கள். அன்றைய நாள் முழுவதும் அந்த தண்ணீர் தான் குடிக்கவேண்டும். 1944 ஆம் ஆண்டில் பெண் கைதிகளை சித்தரவதை செய்து 14 பேரை கொன்றது பிரெஞ்ச் அரசாங்கம். 

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கிவந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு 1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹே சி மின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 10

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி – 12

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vietnam-travel-series-part-12

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கி வந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட 1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்துகொண்டனர். துப்பாக்கிப் பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹேசிமின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவரான நுகுய்ன் தை டிங் என்பவரால் அது தொடங்கப்பட்டது. இவர் இரண்டாம் இந்தோசீனா போரின்போது தேசிய விடுதலை முன்னணியில் முக்கிய பெண் தலைவராக இருந்தார். அவரின் வேண்டுகோளின்படியே பெண்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஹனாய் நகரத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு 1987 ஜனவரி 10ஆம் தேதி வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1995 அக்டோபர் 20 ஆம் தேதி நான்கு மாடி கட்டிடமாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்திற்குள் குடும்பத்தில் பெண்கள், வரலாற்றில் பெண்கள், பெண்கள் ஃபேஷன் என மூன்று தலைப்பில் பிரித்து வைக்கப்பட்டு, நாட்டில் உள்ள 54 இனங்களின் பெண்களின் கலாச்சாரம், உணவு, உடை, கலாச்சாரம், விடுதலை போராட்டம், இந்தோசீனா போர், இரண்டாம் இந்தோசீனா போரில் பெண்களின் பங்கை பறைச்சாற்றும் ஆவணங்களாக 40 ஆயிரம் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வியட்நாமில் உள்ள 64 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாலினம் மற்றும் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக உள்ளது. கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வே இல்லை. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாக அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. பெண்களுக்கு ஓய்வு மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு குறைந்த நேரமே உள்ளது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வீட்டு வேலைகள் செய்யவும், வயல்களில் வேலை செய்யவும், கால்நடைகளை வளர்த்து பொருளீட்டவே நேரம் சரியாக இருக்கின்றன என்றுள்ளார்கள். இதனால் எல்லா மட்டத்திலும் பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தை நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகளவு தடை செய்துள்ளன.

தற்போது நாடு முழுவதும் 10,472 உள்ளூர் பெண்கள் சங்கங்களைச் சேர்ந்த 13 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் வியட்நாம் பெண்கள் சங்கத்தில் உள்ளனர் என்கின்றனர். அருங்காட்சியக நிர்வாகிகள் நாடு முழுவதும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் நாடு விடுதலை பெற்றது, ஆனால் இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்திடம் இருந்து பெண்கள் விடுதலை பெறவில்லை என்கிறது.  

சுதந்திரத்துக்காக, உரிமைக்காக ஒருக்காலத்தில் பெரும் பேரரசுகளை எதிர்த்து, துப்பாக்கி குண்டுகளுக்கே பயப்படாத வியட்நாம் பெண்கள் இப்போது மக்களுக்காக குரல் கொடுத்துவிட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்து வரும் சக பெண்களுக்கு குரல் கொடுக்ககூட தைரியமுற்று இருப்பதை காண முடிந்தது. 

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 10

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vietnam-travel-series-part-10

இன்று, நேற்றல்ல பல நூற்றாண்டுகாலமாக வியட்நாம் பெண்கள் சுதந்திரத்திற்காகவும், தங்களின் உரிமைக்கான போராட்ட போர்க்களத்திலும் முன் நின்றவர்கள். வியட்நாம் வரலாற்றில் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக முதல் கலகம் செய்தது பெண்கள் தான்.

ட்ரங் ட்ரக் - ட்ரங் நஹி

வியட்நாம் பகுதிகள் சீன ஹான் வம்சத்தின் பேரரசரான, ‘குவாங் வூ’ ஆட்சியின் கீழ் இருந்தபோது, வியட்நாமின் ஜியோஜி மாகாணத்தின் ஆளுநராக, ‘சு டிங்’ என்பவர் அதிகாரத்தில் இருந்தார். அதேசமயம் ஜியோஜி மாகாணத்தின் மி லிங்க் மாவட்டத்தின் ‘லாக்’ இன மக்களின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவருக்கு,  ட்ரங் ட்ரக், ட்ரங் நஹி என இரு மகள்கள் இருந்தனர். இதில், ட்ரங் ட்ரக் எனும் மகளுக்கு மற்றொரு மாவட்டத்தின் தலைவராக இருந்த ஷி சுவே என்பவருடன் திருமணம் நடக்கிறது. 

vietnam-travel-series-part-10

இந்த சமயத்தில், ஷி சுவே, ஆளுநர், ‘சு டிங்’-வால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். தனது கணவரை படுகொலை செய்த ஆளுநர் சு டிங்குவை பழிவாங்க உறுதி எடுத்த ட்ரங் ட்ரக், தனது சகோதரி ட்ரங் நஹியுடன் இணைந்து ஜியோஜி மாகாணத்தில், ஆளுநர் சு டிங்குவுகு எதிராக இருந்த பிரபுக்களை ஒன்று திரட்டி, சீன படைகள் மீது போர் தொடுத்தார். ட்ரங் ட்ரக் தொடுத்த போரை தாக்குப்பிடிக்க முடியாமல், சீனர் சு டிங் ஜியோஜி மாகாணத்தைவிட்டு தப்பி ஓடினார். சீன ஆளுநருக்கு எதிராக வியட்நாம் பெண்களான ட்ரங் ட்ரக், ட்ரங் நஹி போர் தொடுத்து வெற்றி பெற, அந்த மாகாணத்தில் இருந்த 60 நகரங்கள் மற்றும் நூற்றுக் கணக்கான கிராமங்கள் மற்றும் மலைகளுக்கு மன்னராக பதவியேற்றார் ட்ரங் ட்ரக். இவர் தான் வியட்நாமின் முதல் பெண் மன்னர். ட்ரங் ட்ரக் மன்னரானதும், அவரது சகோதரி நஹிவுக்கு துணை மன்னர் பதவியை தந்தார். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகள் அப்பதவியில் இருந்தனர். 

தம் ஆளுகைக்குள் இருக்கும் வியட்நாமின் இரு பெண்கள் தன் ஆளுநரை மாகாணத்தில் இருந்து ஓடவிட்டதால் சினம் அடைந்த சீன பேரரசர் குவாங் வூ, ட்ரங் ட்ரக், ட்ரங் நஹி எதிராக போரிட்டு அவர்களை வீழ்த்த கி.பி. 46ம் ஆண்டு வாக்கில் தனது தளபதியான, ‘ம யுவான்’ தலைமையில் 20 ஆயிரம் படை வீரர்களை அனுப்பினார். இந்த பெரும் படையினருடன் போரிட்டு ட்ரங் ட்ரக் மற்றும் ட்ரங் நஹி வீரமரணம் அடைகின்றனர். அவர்களின் தலையும் வெட்டி எடுக்கப்பட்டது. 

vietnam-travel-series-part-10

சீனர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, மக்களின் சுதந்திரத்துக்காக, தங்களின் உரிமைக்காக உயிரை தந்த சகோதரிகளின் வீரத்தை நினைவுகூறும் விதமாகவும், அவர்களை போற்றும் விதமாகவும், இன்றளவும் அவர்கள் இறந்ததாக கருதப்படும் பிப்ரவரி மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு சகோதரிகள் தினமும் வியட்நாமில் அனுசரிக்கப்படுகிறது. 

சீனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி கி.பி. 46ல் உயிரை விட்ட ட்ரங் ட்ரக் - ட்ரங் நஹி சகோதிரிகளுடன் வியட்நாம் பெண்களின் வீரம் முடிந்துவிடவில்லை. இவர்கள் மறைவடைந்து 200 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய லேடி ட்ரியூவின் பின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வியட்நாம் சுதந்திரத்திற்காக போராடினர். சீன வூ வம்சத்தின் படை, லேடி ட்ரியூ மீது 30க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் யார் வென்றது? லேடி ட்ரியூ என்ன செய்தார்?

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 9