/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1730.jpg)
முதல் வெளிநாட்டுப் பயணம் முதல் விமானப் பயணம் குறித்து அண்ணன் மகள், ‘இது உங்களுக்கு எப்படிப்பா இருக்கு? ரொம்ப மகிழ்ச்சியா, எதிர்பார்ப்பா இருக்கா’ எனக்கேட்டார். முதல் விமானப் பயணம், முதல் வெளிநாட்டுப் பயணம் குறித்தெல்லாம் எனக்கு உண்மையில் பெரிய மகிழ்ச்சியெல்லாம் கிடையாது. சுற்றுலா போகலாமே என அண்ணன் கேட்டபோது, மனதில் தோன்றியதெல்லாம் எவ்வளவு செலவாகும் என பொருளாதாரம் சார்ந்து மட்டுமே இருந்தது.
அடுத்ததாகத்தான் முதல்முறை வெளிநாட்டுக்கு சுற்றுலா போகிறோம் எனும் எண்ணம் தோன்றியது. சில சமயங்களில் எந்த நாட்டுக்கு போகிறேன் என நெருங்கிய நண்பர்கள் கேட்டபோது குழப்பத்தில் வியட்நாம் என்பதற்கு பிலிப்பைன்ஸ் என சொல்லியதுண்டு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_646.jpg)
முதல் விமானப் பயணம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு இல்லாததுக்கு காரணம்,நடுத்தர மக்களுக்கு ஒருக்காலத்தில் விமானப் பயணம் என்பது கனவு. இன்றைய கால கட்டத்தில் விமானப் பயணத்தை ஏழை மக்களும் செல்லும் வகையில் மாற்றியது பா.ஜ.க. நரேந்திரமோடி அரசாங்கம். சென்னையில் இருந்து கோவாவுக்கு ரயிலில் ஏசி கோச்சில் டிக்கட் புக் செய்து செல்லும் கட்டணத்தில், சென்னையில் இருந்து கோவாவுக்கு விமானத்தில் எக்கனாமிக் கட்டணத்தில் போய்விடலாம். அந்த அளவுக்கு ஏழை மக்கள் பயன்படுத்தும் ரயில் பயணக் கட்டணம்,விமான கட்டணம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
வியட்நாம் நாட்டுக்கு விசா கிடைத்தபின் நவம்பர் மாத மழைக்காலத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து பறக்கும் இயந்திர தட்டில் ஏறி அமர்ந்தபோது, வெளியே வேடிக்கை பார்க்கும் வகையில் செலவு செய்து சீட் வாங்கி தந்திருந்தார் அண்ணன். சேப்டி பெல்ட் அணியச்சொல்லி விமான பணிப் பெண்கள் சொன்னதை செய்தபடி வெளியே தென்றலாக வீசிய மழைச் சாரலை கண்ணாடி வழியே ரசித்துக்கொண்டு இருந்தபோது, பறக்கும் தட்டு எங்களை சுமந்து கொண்டு ரன்வேயில் ஓடத்துவங்கியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4472.jpg)
முதல் விமானப் பயணம் செய்பவர்களின் மனதுக்குள் விமானம் மேலெழும்போது, மனதுக்குள் பயமும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு உணர்வு அடிவயிற்றிலிருந்து எழும் எனச் சொல்லி கேள்விப்பட்டதுண்டு. எனக்கு அப்படியெல்லாம் நடக்கவில்லை. அது ஒரு சாதாரண நிகழ்வாகவே மனதில் பதிந்தது. எனக்கு விமான பயணம் மீதான பெரிய ஈர்ப்பு இல்லாததும் இதற்கு காரணமாக சொல்லலாம்.
நான் ஒரு பைக் காதலன். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பைக்கில் போகலாம் என்றால் கிளம்பிவிடுவேன். பைக் சவாரிக்கு நல்ல மனம் ஒத்த துணை இருந்தால் மட்டும் போதும், அப்படியொரு துணை ஒரு காலத்தில் இருந்தது. சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பதி, பெங்களூரு என பைக்கில் பயணம் செய்ததுண்டு. பத்திரிகையாளர்களுக்கான இலவச அரசு பேருந்து அட்டை இருந்தும் இப்போதும் பைக் சவாரி தான். அதற்கடுத்து நீண்ட தூர பயணத்துக்கு ரயிலை விரும்புகிறேன்.
ரன்வேயில் ஓடத்துவங்கிய விமானம் மேலேழந்து ஆயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரம் அடி என படிப்படியாக உயர்ந்ததை விமான பைலட் அறிவித்தபோது, வானத்துக்கு கீழே சிங்கார சென்னை மின்னிக்கொண்டு இருந்தது. வங்காளவிரிகுடா மீது இயந்திர தட்டு பறக்க துவங்கிய நேரத்தில் சுற்றுலா செல்வது குறித்து மகன்களுடன் ஒருநாள் இரவு பேசிக்கொண்டு இருந்தபோது ஏழு வயதாகும் பெரிய மகன் தமிழ்குமரன் சொன்னது நினைவுக்கு வந்தது.
Follow Us