Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்!  வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 1 

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Vietnam Travel Series Part – 1

முதல் வெளிநாட்டுப் பயணம் முதல் விமானப் பயணம் குறித்து அண்ணன் மகள், ‘இது உங்களுக்கு எப்படிப்பா இருக்கு? ரொம்ப மகிழ்ச்சியா, எதிர்பார்ப்பா இருக்கா’ எனக்கேட்டார். முதல் விமானப் பயணம், முதல் வெளிநாட்டுப் பயணம் குறித்தெல்லாம் எனக்கு உண்மையில் பெரிய மகிழ்ச்சியெல்லாம் கிடையாது. சுற்றுலா போகலாமே என அண்ணன் கேட்டபோது, மனதில் தோன்றியதெல்லாம் எவ்வளவு செலவாகும் என பொருளாதாரம் சார்ந்து மட்டுமே இருந்தது. 

அடுத்ததாகத்தான் முதல்முறை வெளிநாட்டுக்கு சுற்றுலா போகிறோம் எனும் எண்ணம் தோன்றியது. சில சமயங்களில் எந்த நாட்டுக்கு போகிறேன் என நெருங்கிய நண்பர்கள் கேட்டபோது குழப்பத்தில் வியட்நாம் என்பதற்கு பிலிப்பைன்ஸ் என சொல்லியதுண்டு.

Vietnam Travel Series Part – 1

முதல் விமானப் பயணம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு இல்லாததுக்கு காரணம், நடுத்தர மக்களுக்கு ஒருக்காலத்தில் விமானப் பயணம் என்பது கனவு. இன்றைய கால கட்டத்தில் விமானப் பயணத்தை ஏழை மக்களும் செல்லும் வகையில் மாற்றியது பா.ஜ.க. நரேந்திரமோடி அரசாங்கம். சென்னையில் இருந்து கோவாவுக்கு ரயிலில் ஏசி கோச்சில் டிக்கட் புக் செய்து செல்லும் கட்டணத்தில், சென்னையில் இருந்து கோவாவுக்கு விமானத்தில் எக்கனாமிக் கட்டணத்தில் போய்விடலாம். அந்த அளவுக்கு ஏழை மக்கள் பயன்படுத்தும் ரயில் பயணக் கட்டணம், விமான கட்டணம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

வியட்நாம் நாட்டுக்கு விசா கிடைத்தபின் நவம்பர் மாத மழைக்காலத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து பறக்கும் இயந்திர தட்டில் ஏறி அமர்ந்தபோது, வெளியே வேடிக்கை பார்க்கும் வகையில் செலவு செய்து சீட் வாங்கி தந்திருந்தார் அண்ணன். சேப்டி பெல்ட் அணியச்சொல்லி விமான பணிப் பெண்கள் சொன்னதை செய்தபடி வெளியே தென்றலாக வீசிய மழைச் சாரலை கண்ணாடி வழியே ரசித்துக்கொண்டு இருந்தபோது, பறக்கும் தட்டு எங்களை சுமந்து கொண்டு ரன்வேயில் ஓடத்துவங்கியது.

Vietnam Travel Series Part – 1

முதல் விமானப் பயணம் செய்பவர்களின் மனதுக்குள் விமானம் மேலெழும்போது, மனதுக்குள் பயமும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு உணர்வு அடிவயிற்றிலிருந்து எழும் எனச் சொல்லி கேள்விப்பட்டதுண்டு. எனக்கு அப்படியெல்லாம் நடக்கவில்லை. அது ஒரு சாதாரண நிகழ்வாகவே மனதில் பதிந்தது. எனக்கு விமான பயணம் மீதான பெரிய ஈர்ப்பு இல்லாததும் இதற்கு காரணமாக சொல்லலாம்.

நான் ஒரு பைக் காதலன். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பைக்கில் போகலாம் என்றால் கிளம்பிவிடுவேன். பைக் சவாரிக்கு நல்ல மனம் ஒத்த துணை இருந்தால் மட்டும் போதும், அப்படியொரு துணை ஒரு காலத்தில் இருந்தது. சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பதி, பெங்களூரு என பைக்கில் பயணம் செய்ததுண்டு. பத்திரிகையாளர்களுக்கான இலவச அரசு பேருந்து அட்டை இருந்தும் இப்போதும் பைக் சவாரி தான். அதற்கடுத்து நீண்ட தூர பயணத்துக்கு ரயிலை விரும்புகிறேன்.

ரன்வேயில் ஓடத்துவங்கிய விமானம் மேலேழந்து ஆயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரம் அடி என படிப்படியாக உயர்ந்ததை விமான பைலட் அறிவித்தபோது, வானத்துக்கு கீழே சிங்கார சென்னை மின்னிக்கொண்டு இருந்தது. வங்காளவிரிகுடா மீது இயந்திர தட்டு பறக்க துவங்கிய நேரத்தில் சுற்றுலா செல்வது குறித்து மகன்களுடன் ஒருநாள் இரவு பேசிக்கொண்டு இருந்தபோது ஏழு வயதாகும் பெரிய மகன் தமிழ்குமரன் சொன்னது நினைவுக்கு வந்தது.

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 13

Published on 05/03/2024 | Edited on 06/03/2024
vietnam travel series part 13

கடிகாரத்தில் நேரம் 5 மணியை காட்டியது. 5 மணிக்கெல்லாம் இருட்டிவிட்டதே என நினைத்தால் காலநிலை அப்படி. 4 மணிக்கெல்லாம் சூரியன் மறைந்து இருள் கவ்வத் தொடங்கிவிடுகிறது. வியட்நாமில் 5 மணி என்றால் இந்தியாவில் மாலை 3.30 மணி.

நம்மை முதல் நாள் ஹோட்டலில் இறக்கிவிட்டபின் இரவு உணவுக்காக தலைநகர் ஹனாய் வீதிகளில் வலம் வந்தோம். அங்கு நாம் கண்டது, நகரத்தின் பல பகுதிகளில் பல்வேறு விதமான கடைகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் 7 மணிக்கெல்லாம் மூடப்பட்டு இருந்தது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் புழங்கும் பகுதிகளில் மட்டும் கடைகள், தங்கும் விடுதிகள், சாலையோர உணவகங்கள் இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணி வரை இயங்குகின்றன. இதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய உணவு கடைகள் மட்டுமே இரவு 11 மணி வரை இயங்குகின்றன.  

இந்தியாவில் விதவிதமாக சாப்பிட்டு நாக்கு நளபாகத்துக்கு அடிமையானவர்கள் வியட்நாம் உணவை சாப்பிட்டால் முகம் சுருங்கிவிடும். வியட்நாமின் பிரதான உணவு ’போ’ என சொல்லப்படும் சூப். சுடச்சுட தருகிறார்கள். அதில் சைவம் என்றால் நூடூல்ஸ், நறுக்கப்பட்ட வெங்காயதண்டு, வேகவெக்கப்பட்ட முட்டைக்கோஸ் இலை, ஏதாவது ஒரு கீரையை போட்டு தருகிறார்கள். அசைவம் என்றால் நூடூல்ஸ்சுடன், எலும்பு இல்லாத வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை பஞ்சுபோல் பிச்சிப்போட்டு தருகிறார்கள். பீப், பன்றிக்கறி வேண்டும் என்றாலும் கலந்து தருகிறார்கள். அவர்களின் உணவு எதிலும் உப்பு கிடையாது, காரம்  கிடையாது, பெப்பர் கூட கிடையாது. சில ஹோட்டல்களில் மட்டும் பெப்பர், உப்பு தந்தார்கள். வியட்நாமிய மக்கள் பெரும்பாலும் உணவில் உப்பு, காரம் சேர்த்துக்கொள்வதில்லை. உணவில் மஞ்சள் தூள் மட்டும் போட்டு வேகவைத்த உணவை தருகிறார்கள். உணவில் காரம் வேண்டும் என்றால் பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய் 4 அல்லது 5 துண்டு தருகிறார்கள் அல்லது மிளகாய்சாஸ்  தருகிறார்கள்.

காலை, மதியம், இரவு மூன்று வேளையும் கட்டாயம் வியட்நாமியர்கள் போ உணவை சாப்பிடுகிறார்கள். அதற்கு தொட்டுக்கொள்ள பொரித்த நத்தை, வேகவைக்கப்பட்ட மஸ்ரூம், மீன் துண்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் தரும் உணவை அந்த இரண்டு குச்சிகளில் எடுத்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு சிரமமானதாக இருந்தது. அவர்களும், மேற்கத்திய சுற்றுலாப்பயணிகள் அசால்டாக அதனை பயன்படுத்துகிறார்கள். கைக்கும் வாய்க்கும் ஒரு தொடர்பு  இருக்கணும்ங்க, உணவை கைகளால் பிசைந்து அதை எடுத்து நாம் வாயில் வைத்து  சாப்பிடும்போதுதான் உணவு மேல் மரியாதை வரும், அது உடம்பில் ஒட்டும் என வாட்ஸ்அப் வாத்தியார்களின் மெசேஜ் எப்போதே படித்தது நினைவுக்கு வந்ததால் அவுங்க சொல்றது நியாயம்தானே என சமாதானம் செய்துக்கொண்டு நம்மவூர் ஸ்டைல்க்கே மாறிவிட்டேன்.  

அசைவத்தில் சிக்கன், கடல் உணவுகள், பீப், பன்றிக்கறி பிரதானமாக உள்ளது. மட்டன் எனச்சொல்கிறார்கள் அது ஆட்டுக்கறி இல்லை. பன்றிக்கறி. சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் தினமும் சிக்கன், கடல் உணவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அதிலும் எண்ணெய்யில் பொறித்த குட்டி ஆக்டோபஸ் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

ஹோட்டல்களில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என்கிற பெயரில் மரவள்ளி கிழங்கில் செய்யப்பட்ட வடை, வேகவைத்து வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், வெங்காய போண்டா அற்புதமாக செய்து தந்தனர். உப்பு இல்லாத பண்டம் குப்பைக்கு என்பது நம்மவூர் பழமொழி. அங்கே உப்புயில்லாத பண்டம் வயிற்றுக்கு என்கிறார்கள். உப்புதான் இல்லை. ஆனால் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

வியட்நாம் உணவு பழிவாங்கிவிடுமோ என நினைத்திருந்தோம். முதல் இரண்டு நாள் வியட்நாம் உணவுகளை ஏற்றுக்கொள்ள நாக்கு அடம்பிடித்தது. அதன்பின் அதன் சுவைக்கு பழக்கமாகி அங்கிருந்த 14 நாட்களும் உடம்பை எதுவும் செய்யவில்லை.

வெள்ளை சோறு வியட்நாமில் எல்லா ஹோட்டல்களிலும் தருகிறார்கள். நம்மவூரில் சாப்பாடு என்றால் அதனோடு சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், மோர், பொறியல், கூட்டு என வகைவகையாக தருவார்கள். அங்கே அதெல்லாம் கிடையாது, அரைவேக்காட்டில் வேகவைக்கப்பட்ட கத்தரிக்காய், வெங்காயம், புதினா வைத்து அதன்மேல் எண்ணெய்யில் பொறிக்கப்ட்ட சிறியதாக கட் செய்யப்பட்ட வெங்காய தாள்களை தூவி சாஸ் ஊத்தி தனியாக ஒரு பிளேட்டில் தந்தார்கள். சாதத்தோடு இதனைத்தான் கலந்து சாப்பிடவேண்டும். தொட்டுக்க மரவள்ளிக்கிழங்கு வடை தருகிறார்கள்.

வெள்ளை சாதமே சர்க்கரை பொங்கல் போல் லேசாக தித்திப்பாக இருந்தது.  காலை, இரவு நேரத்தில் ப்ரைட்ரைஸ் கண்டிப்பாக இருக்கிறது. சிக்கன் ரைஸ், பீப் ரைஸ், வெஜிடபிள் ப்ரைட்ரைஸ் தருகிறார்கள். முட்டை அங்கே வெஜ் கேட்டகரியில் வைத்துள்ளார்கள். ஒரு ஆம்லேட் என்றால் இரண்டு முட்டை ஊத்தி செய்கிறார்கள்.

உலகளவில் சாலையோர உணவகங்களில் புகழ்பெற்றது வியட்நாம். வியட்நாம் நாட்டில் தலைநகரம் ஹனாய், ஹோசிமின், அலாங் பே போன்ற எந்த நகரமாக இருந்தாலும், சிற்றூராக இருந்தாலும் நடந்துபோகும்போது தடுக்கி விழுந்தால் சாலையோர உணவகங்கள் மேல்தான் விழவேண்டும். அந்தளவுக்கு சாலையோரங்களில் உணவகங்கள் உள்ளன. 80 சதவித சாலையோர உணவகங்கள் அசைவம். 20 சதவிதம் அளவுக்கே சைவ உணவகங்கள். 

வியட்நாம் மக்கள் பெரும்பாலும் இந்த சாலையோர உணவகங்களிலேயே உணவு சாப்பிடுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்வமாக இங்கே சாப்பிடுகின்றனர். அந்தளவுக்கு  சாலையோர உணவகங்கள் தூய்மையாக இருந்தன. சாலையோர ஹோட்டல்களில் குறைந்த விலை, தரமான உணவாக இருக்கிறது. பெரிய ஹோட்டல்களில்  அதிகவிலை, அதே தரத்திலான உணவு கிடைக்கிறது.

ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய உணவகங்கள் இருந்தாலும் உணவு பொருட்களின் விலை நம்மவூரைவிட அதிகமாகவே இருக்கிறது. சாலையோர உணவு விடுதியாக இருந்தாலும், ஓரளவு பெரிய உணவு விடுதியாக இருந்தாலும் விலை கிட்டதட்ட  ஒரே விலையாகத்தான் இருந்தது. கொஞ்சம் தான் வித்தியாசப்படுகிறது.

நம்மவூர் சாப்பாட்டத்தை தான் சாப்பிடனும் என விரும்பி இந்திய ரெஸ்டாரெண்ட்டுக்குள் சென்றால் அங்கே கிடைப்பது நார்த் இந்தியா உணவுகள் தான். தென்னிந்திய உணவுகள் 99 சதவிதம் நாட்டின் எந்த பகுதியிலும் கிடைப்பதில்லை. 

இங்குள்ள ஹோட்டல்களில் உள்ள ஒரே ஒற்றுமை குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. 300 மில்லி லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலின் விலை நம்மவூர் மதிப்புக்கு 80 ரூபாய் வருகிறது. கம்பெனிக்கு தகுந்தார்போல் விலையும் மாறுகிறது. சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் என்ன செய்வது? அதற்கு இதை குடிங்க என நம் கையில் திணிப்பதை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.

பயணங்கள் தொடரும்…………..  

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி – 12

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vietnam-travel-series-part-12

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கி வந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட 1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்துகொண்டனர். துப்பாக்கிப் பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹேசிமின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவரான நுகுய்ன் தை டிங் என்பவரால் அது தொடங்கப்பட்டது. இவர் இரண்டாம் இந்தோசீனா போரின்போது தேசிய விடுதலை முன்னணியில் முக்கிய பெண் தலைவராக இருந்தார். அவரின் வேண்டுகோளின்படியே பெண்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஹனாய் நகரத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு 1987 ஜனவரி 10ஆம் தேதி வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1995 அக்டோபர் 20 ஆம் தேதி நான்கு மாடி கட்டிடமாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்திற்குள் குடும்பத்தில் பெண்கள், வரலாற்றில் பெண்கள், பெண்கள் ஃபேஷன் என மூன்று தலைப்பில் பிரித்து வைக்கப்பட்டு, நாட்டில் உள்ள 54 இனங்களின் பெண்களின் கலாச்சாரம், உணவு, உடை, கலாச்சாரம், விடுதலை போராட்டம், இந்தோசீனா போர், இரண்டாம் இந்தோசீனா போரில் பெண்களின் பங்கை பறைச்சாற்றும் ஆவணங்களாக 40 ஆயிரம் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வியட்நாமில் உள்ள 64 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாலினம் மற்றும் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக உள்ளது. கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வே இல்லை. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாக அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. பெண்களுக்கு ஓய்வு மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு குறைந்த நேரமே உள்ளது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வீட்டு வேலைகள் செய்யவும், வயல்களில் வேலை செய்யவும், கால்நடைகளை வளர்த்து பொருளீட்டவே நேரம் சரியாக இருக்கின்றன என்றுள்ளார்கள். இதனால் எல்லா மட்டத்திலும் பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தை நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகளவு தடை செய்துள்ளன.

தற்போது நாடு முழுவதும் 10,472 உள்ளூர் பெண்கள் சங்கங்களைச் சேர்ந்த 13 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் வியட்நாம் பெண்கள் சங்கத்தில் உள்ளனர் என்கின்றனர். அருங்காட்சியக நிர்வாகிகள் நாடு முழுவதும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் நாடு விடுதலை பெற்றது, ஆனால் இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்திடம் இருந்து பெண்கள் விடுதலை பெறவில்லை என்கிறது.  

சுதந்திரத்துக்காக, உரிமைக்காக ஒருக்காலத்தில் பெரும் பேரரசுகளை எதிர்த்து, துப்பாக்கி குண்டுகளுக்கே பயப்படாத வியட்நாம் பெண்கள் இப்போது மக்களுக்காக குரல் கொடுத்துவிட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்து வரும் சக பெண்களுக்கு குரல் கொடுக்ககூட தைரியமுற்று இருப்பதை காண முடிந்தது. 

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11