Skip to main content

வாட்ச் முதல் சொகுசு கார் வரை... இந்தியாவை மாற்றியமைத்த ரத்தன் டாடா - வென்றவர்களின் வார்த்தைகள் #1

 

yu


"என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்" இதைக் கூறியது வேறு யாரும் அல்ல, டாடா ஸ்டீல், டாடா மோட்டார், டாடா கம்யூனிகேஷன், டி.சி.எஸ்., டாடா பவர், டாடா டெலி சர்விஸ், டாடா ஹோட்டல் என்று இத்தனை நிறுவனங்களுக்கு உரிமையாளரான ரத்தன் டாடா கூறிய வார்த்தைகள் தான் இது. உழைக்க முடியாத நாட்களே, பறக்க முடியாத நாட்கள் என்று கூறிவிட்டார் போலும் என்று நாம் நினைக்கும் அளவுக்கு இந்தியாவில் அவர் கால் பதிக்காத துறைகள் என்று எதுவும் இல்லை. கடிகாரம் முதல் சொகுசு கார்கள் வரை அவருடைய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்தியாவில் நூற்றுக்கணக்கான பணக்காரர்கள் இருந்தாலும் ரத்தன் டாடாவுக்கு அதில் மேலும் ஒரு சிறப்பு உண்டு. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியல் எப்போது வந்தாலும் அதில் டாடா பெயர் இடம் பிடித்திருக்காது.
 


இவ்வளவு சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கும் அவருக்குத் திருமணம் ஆகவில்லை. "எனக்கு நான்கு முறை திருமண பந்தம் இறுதிக் கட்டம் வரை சென்றது. ஆனால் சூழ்நிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்தது" என்றார். அதற்காக நான் வருத்தமோ அல்லது வேதனையோ படவில்லை என்றும் அவர் தெரிவித்திருப்பார். சின்ன வயதிலேயே தாய், தந்தையர் விவகாரத்து பெற்று சென்று விட்டதால் பாட்டி பராமரிப்பில் அவர் வளர்ந்தார். தந்தைக்கும் அவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். அதனால் சிறுவயது முதலே பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். அவருக்குப் பாட்டி மட்டுமே உலகமாகத் தெரிந்தார். வெளிநாடுகளில் படிப்பை முடிந்த அவருக்கு முதல் வேலை கிடைத்து மிகவும் சுவராசியமானது. ஐ.பி.எம். நிறுவனத்தில் அவருக்கு முதல் வேலை கிடைத்த போது தன்னிடம் ரெஸ்யூம் கூட இல்லை என்று அவரே பலமுறை தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்று அவர் கம்பெனியில் வேலை செய்ய லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கிடக்கிறார்கள். 

நாட்டுப்பற்று என்பது அவர் குருதியிலேயே கலந்துள்ளது என்றால் அது மிகையில்ல. மும்பை தாக்குதலின் போது அவருக்குச் சொந்தமான தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் அந்த ஹோட்டல் மிகவும் சேதமடைந்தது. இதைச் சீரமைத்து தர அந்நிறுவனம் டெண்டர் கோரியிருந்தது. அதில் பங்கேற்று அந்த டெண்டரை பெறுவதற்காக டாடா அலுவலகத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் தலைவர் வந்துள்ளார். டாடா அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தார். இந்தத் தகவல் டாடாவுக்குச் சென்றது. தான் முன் அனுமதி பெறாமல் யாரையும் சந்திப்பது இல்லை என்று கூறி அவரின் சந்திப்பைத் தவிர்த்தார். அவர் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு தங்களுக்காக சிபாரிசு செய்ய கூறினார்கள். அவரும் டாடாவுக்கு போன் செய்து விபரத்தைக் கூறினார். அப்போது டாடா "எனக்கு வெட்கம் என்ற ஒன்று இருக்கிறது" என்று கூறி தொலைப்பேசியை துண்டித்தார். பணத்தை விட தேசம் பெரிது என்று நினைப்பதே மற்ற தொழில் அதிபர்களிடம் இருந்து அவரை மாறுபட்டு காட்ட காரணமாக இருக்கிறது. உங்கள் மீது வீசப்படும் கற்களைக் கொண்டு கட்டிடம் கட்டுங்கள் என்று நம்மிடம் கூறிவிட்டு, அவர் ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி முடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல!