Skip to main content

முப்பது வருஷங்களுக்கு முன் அவர் செஞ்சதை இப்போது பலர் தைரியமா செய்றாங்க... - வசந்தகுமார் | வென்றோர் சொல் #16

 

vasantha kumar

 

 

"என்னிடம் முதலீடு செய்ய பணம் இல்லை... ஆனால் இனி யாரிடமும் வேலை செய்யக்கூடாது என்ற உறுதி இருந்தது. அது கூடவே நம்பிக்கையும், நாணயமும் இருந்தது. சரி அதையே முதலீடு செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அந்த சிறு முதலீடுதான், மக்கள் நம்பிக்கைக்குரிய வசந்த் அன்ட் கோ சாம்ராஜ்யமாக இன்று வேறு வடிவம் கண்டுள்ளது... " என்கிறார் வசந்த் அன்ட் கோ நிறுவனரும், எழுத்தாளர், இலக்கிய ஆளுமை, பேச்சாளர், அரசியல்வாதி எனப் பன்முக ஆளுமைகொண்ட வசந்தகுமார்.

 

1978ல் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 42 ஆண்டுகாலம் தொழில் உலகில் கொடிகட்டிப்பறந்த ஒரு தமிழ் மகன். வசந்த் அன்ட் கோ என்ற பெயரைச் சொன்னதும் அவர் நிறுவனத்தை விட அவரது முகம்தான் அநேகமாக ஞாபகம் வரும். தன்னுடைய முகத்தையே ஒரு 'பிராண்ட்'-டாக கட்டியெழுப்புவதெல்லாம் சாதாரண காரியமில்லை. தென்மாவட்டத்து மக்களுக்கே உண்டான முகச்சாயல், அதில் சிறிது புன்னகை என சுழலும் நாற்காலியில் அமர்ந்து அவர் தோன்றும் விளம்பரக் காட்சிகள் பலருக்கும் பிடித்தமானது. இன்று, அவரது மறைவின்போது தமிழக மக்கள் வெளிப்படுத்தும் அன்பு பல தொழிலதிபர்களுக்கு கிடைக்காதது. சமீபமாக தொழிலதிபர்கள் பலரும் தங்கள் தயாரிப்புகளின் விளம்பரத் தூதராக தாங்களே செயல்படும் போக்கை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பே நம்பிக்கையுடனும் தைரியத்துடனும்  தொடங்கிவைத்தவர் அவர்.  

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் வசந்தகுமார். பின்னாட்களில் சென்னையில் விஜிபி நிறுவனத்தில் 70 ரூபாய் மாதச்சம்பளத்தில் முதல் வேலை. அங்கிருந்து தொழில்நுணுக்கங்களைக் கற்று, ஒரு கட்டத்தில் வெளியேறி, தனது புதுப்புது யுக்திகளைச் செயல்படுத்தி, படிப்படியாக முன்னேறி இன்று 80க்கும் மேற்பட்ட கிளைகளுடன் வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பணம் புழங்கக்கூடிய நிறுவனத்தின் நிறுவனராக உயர்ந்துள்ளார். நம்பிக்கை, நாணயம், உழைப்பு இந்த மூன்று வார்த்தைகள் தான் வசந்தகுமாரின் உதடுகள் அடிக்கடி உச்சரித்தவை. வசந்த் அன்ட் கோ சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு செங்கலையும் ஆராய்ந்து பார்த்தால் அந்த வார்த்தைகள் எவ்வளவு பெரிய வேதவாக்கு என்று புரியும். 

 

"1978ல் நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை. என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய பழைய கடையை எனக்கு கொடுத்தார். அதற்கான பணத்தை ஒரு ஆறு மாதத்தில் கொடுத்து விடுகிறேன் என்று அவருக்கு உத்தரவாதம் அளித்தேன். அங்கே ஒரு பலகை கிடந்தது, அதில் என் கடையின் பெயரை நானே எழுதி வெளியே தொங்கவிட்டேன். இப்படித்தான் என் பயணம் தொடங்கியது. கடை தயார், நான் தயார்... ஆனால் விற்பனைக்கு பொருட்கள் இல்லை. நாற்காலி மொத்த விற்பனை செய்யும் என் நண்பர் ஒருவரிடம் பேசி அவரிடம் இருந்து ஒரு ஐந்து நாற்காலி வாங்கினேன். அவர் எனக்கு 25 ரூபாய்க்கு அதை கொடுப்பார். நான் முப்பது ரூபாய்க்கு அதை விற்பனை செய்வேன். தினமும் இதேபோல 15 முதல் 20 ரூபாய் வரை எனக்கு லாபம் கிடைத்தது. அங்கிருந்து படிப்படியாக முன்னேறியது தான்...." என்கிறார் தன்னுடைய ஆரம்பகாலத் தொழிலதிபர் கனவு வாழ்கையைப் பற்றி!!!!

 

அவர் கடையை ஆரம்பித்த போது பலர் இந்த இடம் ராசியில்லாத இடம் எனச் சொல்ல, அந்த ராசியை விட்டுத்தள்ளுங்கள், என்னிடம் முகராசி இருக்கிறது நான் நிச்சயம் வெல்வேன் என்றிருக்கிறார். இந்த நம்பிக்கைதான் பின்னாட்களில் அவர் கடை 'லோகோ'-வை அவர் புகைப்படம் போட்டுப் பதித்ததற்கே உத்வேகம் அளித்திருக்கலாம்.

 

"நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் மக்கள் மற்றும் நான் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், நான் அவர்களிடம் காட்டும் நாணயமும்தான். ஆரம்ப கால கட்டங்களில் கடையை கொஞ்சம் விரிவுபடுத்திய பின்  நிறைய கொள்முதல் செய்தேன். அதற்கான பணத்தை ஒரு தேதியிட்டு காசோலையாக அவர்களிடம் கொடுப்பேன். அந்த தேதிக்குள் வங்கியில் என்னால் பணம் செலுத்த முடியாது. நானே அவர்களிடம் நேரடியாக சென்று விஷயத்தை கூறுவேன். பலருடைய காசோலை பணமில்லாமல் திரும்பி வந்த அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கும். நானே நேரடியாக சென்று கூறும்போது பரவாயில்லை... நேர்மையாக வந்து சொல்கிறானே என நினைத்து அவர்கள் கூடுதல் அவகாசம் கொடுப்பார்கள். ஆரம்பக்கட்டங்களில் கடைக்கு வாடிக்கையாளர் பிடித்த கதையே மிகவும் சுவாரசியமானது. என் கடைக்கு பக்கத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மக்கள் நின்று கொண்டிருப்பார்கள். அங்கே யாரவது வயதானவர்கள் இருந்தால் பேருந்து வரும் வரை அவர்களை என் கடையில் உட்கார வைத்து அவர்களை உபசரிப்பேன். இதை அவர்கள் நெருங்கிய உறவினர்களிடம் சொல்லும்போது அதன்மூலம் அவர்கள் என் கடைக்கு வாடிக்கையாளரானார்கள். தொடக்க கால என் வாடிக்கையாளர்கள் பலர் இப்படி வந்தவர்கள் தான்....."

 

எவ்வளவு ஒரு புத்திசாலித்தனமான யுக்தி  என்று பாருங்கள். ஆங்கிலத்தில் இதை வேர்ட் ஆப் மவுத் (word of mouth) என்பார்கள். ஒரு ரூபாய் முதலீடு இல்லாமல் விளம்பரப்படுத்தும் முறைகளில் இம்முறை முக்கியமானது. வசந்த குமார் அவர்களின் இது போன்ற தனித்துவமான செயல்கள் தான் மற்ற கடைகளில் இருந்து அவரை இன்று வரை தனித்துக்காட்டுகிறது. ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தபோது, கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அவர்கள் செய்த விளம்பரம், பல உள்ளூர் நிறுவனங்களின் தலையில் துண்டுவிழச் செய்தது. இதில் எதிலும் சிக்காமல் இன்று வரை அவர் கொடிகட்டிப் பறந்திருக்கிறார் என்றால் அவரது நம்பிக்கையும், நாணயமும், உழைப்பும், தனித்துவமான செயல்பாடுகளும் தான் காரணம்...! 

 

வாழ்க்கை என்பது ஒரு நதி போல... ஓயாது ஓடிக்கொண்டிருக்க வேண்டும், இடர்பாடுகள் வந்தால் பாதையை மாற்றி பாய வேண்டுமேயொழிய பயணத்தை நிறுத்தக்கூடாது என்பதை தொழில் மந்திரமாக கொண்டிருந்த வசந்த குமார், தான் வாழ்ந்த காலம் வரை வியாபார உலகில் பெரும் பாய்ச்சலாகத்தான் பாய்ந்திருக்கிறார்......!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்