Skip to main content

வள்ளலார் ஏன் சென்னையை விட்டு வெளியேறினார்?

Published on 05/10/2019 | Edited on 30/10/2019

அதிசயப்பிறவி 
வள்ளலார் இராமலிங்க அடிகளார் -1

 

v


வள்ளலார் ஏன் சென்னையை விட்டு வெளியேறினார்?
 

ன்மீகவாதி என்று ஒரு வட்டத்திற்குள் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை அடக்கிவிட முடியாது. இலக்கியவாதி,  சொற்பொழிவாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், சமூக சீர்திருத்தவாதி, புரட்சியாளர், சித்த மருத்துவர், ஜீவகாருண்யர், தீர்க்கதரிசி, ரசவாத வித்தகர் என்று இன்னபிற முகங்களும் உண்டு வள்ளலாருக்கு.

அன்பையும், இரக்கத்தையும் வாழ்வின் அடிப்படையாக கருத வேண்டும்.  கோபம், சோம்பல், பொறாமை, பொய், கடுஞ்சொல் முதலானவற்றை அறவே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார்.  பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலம் சமூகத்தின் மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் எழுப்பி,  ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் நீங்கி சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடு பட்டார். சாதி, மத,சாஸ்திரங்களால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதையும், ரத்தம் சிந்துவதையும் கண்டு கண்டித்து, இந்தியாவிலேயே முதன்முதலாக சமரச சன்மார்க்கம் பேசிய வள்ளலார், எல்லோரும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தனி இயக்கத்தையும் தனிக்கொடியையும் கொண்டு வந்தார்.

’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..’ என்று மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்காகவும் மனம் உருகினார்.  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்  என்பதை கொள்கையாக கொண்டவர்.  பசியால் வாடுவோரின் பசி தீர்க்க அன்று அவர் மூட்டிய தீ இன்றும் அணையாஅடுப்பாக எரிந்துகொண்டிருக்கிறது வடலூரில்.   அவரின் கொள்கையை பின்பற்றி உலகம் முழுவதும் பலரும் அன்னதானம் செய்து வருகிறார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்த அதிசயப்பிறவி வள்ளலார் இராமலிங்க அடிகளார் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சென்னையில் கழித்தார்.  தனது 51 வருட வாழ்க்கையில் முப்பத்து மூன்று ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தவர் ஏன் திடீரென்று இப்பட்டணத்தை விட்டு வெளியேறினார்?

வள்ளலாரின் தந்தை ராமையாப்பிள்ளை.  தாயார் சின்னம்மை.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மருதூர் கிராமத்தில் கணக்குப்பிள்ளை வேலை பார்த்து வந்த ராமையாப்பிள்ளை, தனது ஊரிலிருக்கும் சிறுவர்களுக்கு  கல்வி கற்பித்தும் வந்தார்.  ராமையாப்பிள்ளை திருமணம் செய்துகொண்ட ஐந்து மனைவிகளும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து, ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டார்கள்.  இதன் பின்னர்,  ஆறாவது மனைவியாக சின்னம்மையை திருமணம் செய்துகொண்டார்.  சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்காவணம் கிராமத்தைச்சேர்ந்தவர்  சின்னம்மை.

சின்னம்மைக்கு சபாபதிப்பிள்ளை, பரசுராமப்பிள்ளை,சுந்தரம்மாள், உண்ணாமுலை அம்மாள் என்ற நால்வருக்கு பின் ஐந்தாவதாக 5.10.1823ல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.54 மணிக்கு பிறந்தார் வள்ளலார்.  பெற்றோர் இவருக்கு ராமலிங்கம் என பெயர் வைத்தனர்.

வள்ளலார் எட்டு மாத குழந்தையாக இருந்தபோது ராமையாப்பிள்ளை காலமானார். இதனால் செய்வதறியாது தவித்தார் சின்னம்மையார். இந்த ஊரில் எப்படி பிழைப்பது என்று தவித்த அவர், தாய்வீட்டிற்கே போய்விடலாம் என்று நினைத்து 1824ம் ஆண்டில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சின்னக்காவணம் சென்றுவிட்டார்.  அக்கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், சென்னைக்கு சென்றால் பிழைக்க வழி கிடைக்கும் என்று சின்னம்மையிடம் கூறினார் மூத்த மகன் சபாபதிப்பிள்ளை.  இதையடுத்து,  1826ல் சென்னை ஏழுகிணறு வீராச்சாமிப்பிள்ளை தெருவில்  குடியேறினர்.

 

வள்ளலார் சென்னையில் வாழ்ந்த வீடு

c

 

வள்ளலாரின் அண்ணன் சபாபதிப்பிள்ளை, காஞ்சிபுரம் வித்வான் சபாபதி முதலியாரிடம் புராணக்கல்வி கற்றுக்கொண்டு புராண சொற்பொழிகள் செய்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பரசுராமப்பிள்ளை அவருக்கு உதவியாக இருந்தார்.

வள்ளலாருக்கு 4 வயதிருக்கும்போது ஆரம்பக்கல்வியை கற்றுக்கொடுத்தார் அண்ணன் சபாபதி. அதன்பின்னர் வள்ளலாருக்கு எட்டு வயதிருக்கும்போது புராணக்கல்வி கற்று, தன்னைப்போல் சம்பாதித்து குடும்பத்தை வழிநடத்தவேண்டும் என்று நினைத்து, தன் ஆசிரியர் காஞ்சிபுரம் சபாபதியிடம் சேர்த்துவிட்டார்.  ஆனால், வள்ளலார் கல்வி கற்காமல் கந்தக்கோட்டம் சென்று பாடல் பாடுவதையும், தியானம் செய்வதையுமே வழக்கமாக கொண்டிருந்ததை அறிந்து, அடித்தும், சாப்பாடு போடாமலும் தண்டித்தார் அண்ணன்.

எல்லோரையும் போல கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் வள்ளலார் இல்லை.  அவர் ஓதாது உணர்ந்தவர்.  அப்போது அதை உணராவிட்டாலும், அதன்பின்னர் தனது தம்பி சாதாரண பிறப்பு கிடையாது.  இப்பூமிக்கு வந்த அதிசய பிறவி என்பதை அண்ணனும், குடும்பத்தினரும் உணர்ந்துகொண்டனர்.
மற்றவர்களுக்கு கற்றுத்தரும் ஞானம் உள்ளவர் என்பதை ஆசிரியரே உணர்ந்து, சபாபதியிடம் கூறினார்.
குடும்பத்தினரின் புரிதலுக்கு பின்னர் முழுமையாக 12வயது முதல் அருள் வாழ்க்கையை தொடங்கினார் வள்ளலார். திருவொற்றியூர், பாடி, திருமுல்லைவாயல், திருவள்ளூர், திருத்தணி என்று பல தலங்களுக்கும் சென்று பாடினார். அவர் பாடிய 6 ஆயிரம் பாடல்கள் 6 திருமுறைகளாக தொகுக்கப்பட்டு வந்திருக்கும் ‘திருவருட்பா’ நூல் தமிழுக்கு கிடைத்த பொக்கிசம்.

தமிழ் வித்வான், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், நூல் ஆசிரியர், நூல் பதிப்பாளர் என்று சென்னையில் பல பரிமாணங்களை காட்டியவர் 1858ல் சென்னையை விட்டு புறப்பட்டு, போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில்  மயிலாப்பூர், அச்சிறுபாக்கம், புதுச்சேரி வழியாக நடந்து சென்று சிதம்பரத்தை அடைந்தார்.

மனைவியும், தாயாரும் இறந்த பின்னர் இங்கிருக்க பிடிக்காமல், சகோதரர்களை அழைத்துக்கொண்டு வள்ளலார் சென்னையை விட்டு வெளியேறினார் என்று சிலர் கூறுகிறார்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்த தனது சகோதரருக்கு சிதம்பர தரிசனம் காட்டவே புறப்பட்டார். துரதிர்ஷ்ட வசமாக போகும்வழியிலேயே சகோதரர் இறந்துவிட்டார். ஆனாலும் திரும்பி வராமல் சிதம்பரம் சென்று அங்கேயே தங்கிவிட்டார் என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல கோவில்களை தரிசிக்க புனித யாத்திரையாக அவர் சென்னையை விட்டு புறப்பட்டார் என்றும் தகவல்.

ஏரி, குளம், நதி, சோலைகள், கோயில்கள், வயல்வெளி, விவசாயம் என்று இருந்த சென்னையும், அதன் சுற்றுவட்டாரமும் கொஞ்சம் கொஞ்சமாக நகரம் ஆகிக்கொண்டிருந்ததால் அந்த ஆரவாரமும், இரைச்சலும் பிடிக்காமல் அமைதியைத்தேடி பிறந்த மண்ணுக்கே சென்றார் என்றும் கூறுகிறார்கள்.   


இப்போதிருக்கும் சென்னையின் ஆரவாரம் என்பது வேறு.  அந்தக்காலத்தில் இருந்த சென்னையின் பரபரப்பே பிடிக்காமல், அமைதியை தேடி அடிக்கடி சென்னையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தங்கியுள்ளார் வள்ளலார்.    

அந்த அனுபவத்தை,

’’தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்
சிறுகுறும் என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன்
ஊர்ப் புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்
களத்திலே திரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை
நீ அறிந்தது தானே’’

-என்று பாடலாகவே அவர் வடித்துள்ளார்.
 

தொடரும்...

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சத்திய ஞான சபைக்கு  20 ஆண்டுகளாக 10 டன்னுக்கு குறையாமல் உதவி; நெகிழ வைக்கும் இஸ்லாமியர் 

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Aid not less than 10 tons for 20 years to Sathya Gnana Sabha; A resilient Muslim

கடலூர் மாவட்டம்  வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையின் தர்மசாலைக்கு 10 டன் காய்கறி மற்றும் அரிசி, குடிநீர் பாட்டில் என இஸ்லாமியர் ஒருவர் வழங்கி வரும் சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாக வாழ்ந்த வள்ளலார், பசித்திரு தனித்திரு விழித்திரு என்ற கொள்கையின்படி இருந்தவர். அவர் வடலூரில் அமைத்த சத்திய ஞான சபை தர்ம சாலையில், 3 வேலையும் பல்லாயிரக்கணக்கானோர் உணவருந்தி வருகின்றனர்.

இந்நிலையில், 153-வது தைப்பூச ஜோதி தரிசன விழா ஜன 25ம் தேதி நடைபெறுவதையொட்டி, கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், வள்ளலார் தர்மசாலைக்கு 10 டன் காய்கறிகள் மற்றும் 25 கிலோ  கொண்ட 50 அரிசி மூட்டைகளையும், 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும், சரக்கு வாகனம் மூலம் தர்மசாலைக்கு அனுப்பி வைத்துள்ளது கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் அல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vck ad

இது குறித்து  கூறிய பக்கிரான், வடலூர் தைப்பூசத்தையொட்டி வள்ளலார் சபைக்கு கடந்த 20 ஆண்டுகளாக 10 டன்களுக்கு குறைவில்லாமல் காய்கறி,அரிசி மூட்டைகள் அனுப்பி வருவதாகவும், மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கொள்கையையொட்டி வருடாவருடம் இந்த பொருட்களை அனுப்பி வருவதாக தெரிவித்தார்.

இஸ்லாமியரான பக்கிரான், மதங்களை கடந்து உணவுப் பொருட்களை இந்து சமய நெறி வழிபாட்டை கடைப்பிடிக்கும் வள்ளலார் சபைக்கு வழங்கி வருவது மதங்களை கடந்த மனிதம் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.