Skip to main content

அந்த இசக்கி கேரக்டரு எனக்கு பெரிய வாழ்க்கய தந்துச்சு' - இம்சை அரசன் டாக்ஸ் #2

Published on 09/09/2019 | Edited on 23/10/2019

கடந்த 80 ஆண்டுகளில் தமிழ் சினிமா எத்தனையோ காமெடி நடிகர்களை கடந்திருக்கிறது. ஆனால், உடல் மொழியால் சிறு குழந்தை முதல் பல் போன கிழவர்களை வரை ஒருவரால் சிரிக்க வைக்க முடியும் என்றால் அது இவர் ஒருவரை தவிர யாராலும் முடியாது. தன்னுடைய ஒவ்வொரு அசைவினாலும் ஆயிரக்கணக்கான மக்களின் மன அழுத்தத்தை போக்கும் மகா நடிகன் இவன். 'வடிவேலு' இந்த ஒற்றை பெயர்தான் சில ஆண்டுகளுக்கு முன்புவரை படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக இருந்தது என்றால் அதற்கு மாற்றுக் கருத்து யாரிடமும் எழப்போவதில்லை. அவரின் திரைப்பயணத்தை நம்முடன் தொடர்ந்து பகிந்து வரும் நிலையில், இரண்டாவது பகுதியான இன்று தேவர் மகன் படத்தின் கதை சொல்லியிருக்கிறார் அவருடைய மதுரை நடையில்....

 

k



பிரார்த்தனா ட்ரைவ்-இன் தியேட்டர்ல "சிங்காரவேலன்' படத்தோட ஷூட்டிங் நடக்குது. கமலோட பிரெண்டுகள்ல ஒருத்தனா அதுல நானும் நடிச்சுக்கிட்டி ருக்கேன். ஷூட்டிங் பிரேக்ல நாம்பாட்டுக்கு. ஒரு ஓரமா போய் நிக்கிறேன். கமல் சார் என்னயவே பாக்குறாரு. கிட்ட வர்றாரு. அப்புடியே ஏந்தோளுமேல கையப்போட்டுக் கிட்டு "கொஞ்சம் நடந்துகுடுத்துட்டு வரலாம்'ங்கிறாரு. "ஆத்தாடீ... எம்புட்டு பெரிய நடிகரு. நம்ம தோள்ல கையப் போட்டு பேசுறாரே'னு மனசு பரபரக்குது. அவரு கூட போறேன். யூனிட்டு இருக்க எடத்த விட்டு கடேசிக்கு வந்துட்டம். ‘"வடிவேலு ஒங்களுக்கு எந்த ஊரு?'னு கேக்குறார். ‘"மதுரதேங்க சார்.' ‘"மதுரயேவா.?' “"ஆமாங்க சார். அம்மா ஊரு செவகங்க பக்கம். எங்க கொலசாமி கோயிலு பரமக்குடிக்கிட்டத்தான் இருக்கு.'தலய ஆட்டிக்கிட்டாரு கமல். "ஒங்களுக்கு என்னென்ன தெரியும்?' ‘"எதுங்க சார்?' ‘"ஒங்களுக்கு சினிமா சம்பந்தமா என்னென்னா தெரியும்?' ‘"ஆடுவேன்... நல்லா பாடுவேன்.' ‘"கத்துக்கிட்டீங்களா?' ‘"மொறயா கத்துக்கல. ஆனா கேள்வி ஞானம்பாங்களே... அப்புடித்தான் தெரியும்.' அடுத்த நிமிஷமே அங்ஙனக்குள்ளயே பாடூங்கிறாரு.

 

xdfh



நானும் யோசிக்கல. டி.எம்.எஸ். பாட்டு... அதுவும் எம்.ஜி.ஆரு பாட்டுன்னா எனக்கு உசுராச்சே... எடுத்துவிட்டேன் சவுண்டா ஒரு பாட்ட. சிரிச்சாரு. "என்னோட ஆபீஸ் போங்க. அங்க டி.என்.எஸ். இருப்பாரு. அவரப் போயி பாருங்க... நாளைக்கி காலைல போய் பாருங்க'ன்னாரு. மறுபடி ஷூட்டிங் தொடங்குது. எனக்குன்னா இருப்பு கொள்ளல. ஷூட்டிங் முடிஞ்சதுமே "கௌம்புடா வடிவேலு'னு கௌம்பீட்டேன் எல்டாம்ஸ் ரோட்டுக்கு. டி.என்.எஸ். சாரைப் பாத்தேன். ஒரு கவர குடுத்தாரு. சஸ்பென்ஸ்ல மண்ட வெடுச்சிரும் போல இருந்துச்சு. வெளிய வந்து பிருச்சுப் பாத்தேன். "டக்குடு டக்குடு டக்குடு டக்குடு'னு உள்ளுக்குள்ள சந்தோஷத்துல குருத ஓடுது. ஆனந்தத்துல கண்ணீரும் பொங்குது. "தேவர் மகன்' படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பும் அஞ்சாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கும். மிஞ்சிப்போனா ரெண்டாயிரத்துக்கு மேல ஸிங்கிள் பேமண்டு வாங்கினதில்ல. மொத மொதல்ல... அஞ்சாயிரம். அதுலயும் நான் வாங்குன மொதல் செக்கு. நைட்டெல்லாம் எங்க தூக்கம் வந்திச்சு?! காலேல திரும்பவும் ‘"சிங்காரவேலன்' ஷூட்டிங் ஸ்பாட்டு. "நேத்தே போயிட்டிங்க போலருக்கு?' கேட்டாரு கமல். "காலேல வரைக்கும் தாங்காது சார். அதான்...'னு இழுத்தேன். கமல் சிரிச்சார்."

"தேவர் மகன்'ல வர்ற அந்த இசக்கி கேரக்டரு எனக்கு பெரிய வாழ்க்கய தந்துச்சு.படத்தோட பிரிவியூ ஷோ போட்ருக்காங்க. ஆஸ்பத்திரியில கைவெட்டுப்பட்டு கடப்பேன். கமல் சார் பாக்க வருவாரு. அப்ப சொல்லுவேன்... ‘"என்னா எழவு... திங்கிற கைலயே கழுவணும், கழுவுற கைலயே திங்கணும்'னு சொல்லுவேன். நான் வர்ற ஸீனப் பாத்திட்டு சிவாஜி அய்யா கமல் சார்கிட்ட சொல்றாரு... ‘"யார்ரா இவேன். பெரிய்ய ஆளா வருவாண்டா'ங்கிறாரு. நடிகர்திலகம் நம்மளப் பத்தி எதாச்சும் சொல்லாதான்னு ஏங்கிப் போயித்தான ஒக்காந்திருந்தேன். "சடக்'குன்னு அவரு கால்ல விழுகுறேன்.‘"இவேன் யாருடா?'ங்கிறாரு.‘"நாந்தேய்யா வடிவேலுங்கய்யா'ங்கிறேன் கம்முன குரல்ல.‘"டேய்ய்... நீதாண்டா ஒரிஜினல் மதுர பாஷ பேசீருக்க'னு என்னய தட்டிக்குடுக்குறாரு. ஒடம்பே சிலுத்துப் போகுது எனக்கு. இப்புடி ஒரு வாய்ப்ப தந்த கமல் சார் அப்பவும், இப்பவும் என் கண்ணுக்கு கடவுளா தெரியுறாரு. இசக்கி மாதிரி ஒரு அழுத்தமான கேரக்டர்ல கமல் சாரோட திரும்பவும் ஒரு படம் பண்ணனும்னு ஆசஆசயா காத்துக்கெடக்கேன்.

 

அடுத்த பகுதி - 3
 

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

''டக்குனு நீங்களும் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க'' - நடிகர் வடிவேலு பேட்டி 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
vadivelu

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்ற வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் திதிக்கு இங்கு மோட்ச விளக்கு போடுவதற்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய தெய்வம் அவர்கள். அவர் இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை. அம்மா இறந்த ஆறு மாசத்தில் தம்பி இறந்துட்டாரு. அந்த இரண்டு துக்கமும் இன்னும் குடும்பத்தை போட்டு வாட்டுது. இன்னும் அதில் இருந்து நாங்கள் மீளவில்லை. இப்பதான் அம்மாவிற்கு முடிந்திருக்கிறது. இன்னும் ஆறு மாதம் கழித்து தம்பிக்காக இங்க வந்து மோட்ச தீபம் ஏத்தணும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''எல்லாருமே வரலாமே (செய்தியாளர்களை நோக்கி) நீங்களும் கூட வரலாம். வீடியோ கேமரா எடுத்துக் கொண்டிருக்காமல் நீங்களும் வரலாம். வேலை இருக்கிறதா? வர வேண்டியதுதானே. இப்படியே கேமராவை பிடித்துக் கொண்டு எத்தனை நாள் வேலை பார்ப்பீர்கள். டக்குனு நீங்கள் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க. வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்வதற்கு யாராக இருந்தாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வந்தார்கள். டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு எல்லாரும் நல்லது செய்யத்தான் வந்தாங்க. அது மாதிரி நல்லது செய்ய வருகிறார்கள். வருபவர்களை வரவேற்கிறோம். வரட்டும் வந்து மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லையே வரட்டும்'' என்றார்.