Advertisment

முடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31

usain bolt

Advertisment

இரவு 7 மணியைத் தாண்டிவிட்டால் கடிகார முள்ளின் ஓசை கேட்கக்கூடிய அளவிற்கு அமைதி குடிகொள்ளும் அழகிய கிராமம், ஷெர்வூட் கான்டென்ட். பசுமையான காடுகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கிராமத்தில் மளிகைக்கடை நடத்தி வருபவர் வெல்லஸ்லீ போல்ட். 1986-ஆம் ஆண்டு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

பிறந்தது ஆண்குழந்தை என்பதால் வெல்லஸ்லீ போல்ட்டிற்கு கூடுதல் மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட வருடம் நிலைக்கவில்லை. குழந்தை வளர வளர அவனுக்குள் சுட்டித்தனமும் வளர ஆரம்பிக்கிறது. வசிப்பிடத்தைச் சுற்றி இருந்த காடுகளுக்குள் திரிவது, பள்ளத்தாக்குகளுக்குள் ஏறி இறங்குவது, உயரமான இடங்களில் இருந்து கீழே குதிப்பது உள்ளிட்ட பல அபாயகரமான செயல்கள் அவனுக்குப் பொழுதுபோக்குகளாக மாறின. வயதிற்கு மிஞ்சிய உயரம், எப்போதும் துருதுருவென இருக்கும் செயல்பாடுகளால் குழம்பிப்போன வெல்லஸ்லீ போல்ட், மருத்துவரிடம் தன் குழந்தையை அழைத்துச் செல்கிறார். அக்குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், "உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லை... பையன் பிற குழந்தைகளை விட உத்வேகமாக இருக்கிறான். சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் பெரிய ஆளாக வருவான்" எனக் கூறி அனுப்புகிறார். பின்னாட்களில், அந்த மருத்துவர் வாக்கு தெய்வ வாக்காகப் பலித்தது. ஆம், 'மின்னல் வேக மனிதன்' என உலகம் கொண்டாடும் தடகள ஆளுமை உசைன் போல்ட்டே அந்தக் குழந்தை.

1986-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜமைக்கா நாட்டில் வெல்லெஸ்லீ போல்ட் மற்றும் ஜெனிஃபர் போல்ட் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர், உசைன் போல்ட். குடும்பத்தில் மொத்தம் 3 குழந்தைகள். மளிகைக் கடையில் இருந்து கிடைக்கும் வருமானம் மூலமாக உணவிற்கு கஷ்டமில்லாத நடுத்தர வாழ்க்கையைத் தனது குடும்பத்தினருக்கு உறுதிப்படுத்தியிருந்தார், வெல்லஸ்லீ போல்ட். சிறுவயதில் துருதுருவென காணப்பட்ட உசைன் போல்ட்டிற்கு முழுக்கவனமும் விளையாட்டு மீதே இருந்தது. கால்பந்து, கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தாலும் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே அவரது இளமைக்கால ஆசை. அதற்கான திறமையும் அவருக்குள் இருந்ததால், தெருவில் உடன் விளையாடியவர்கள் பலரும் உசைன் போல்ட் வேகப்பந்து வீச்சாளர் ஆவார் என்றே எதிர்பார்த்துள்ளனர். உசைன் போல்ட்டின் திறமை மற்றும் உடல்வேகத்தைக் கண்ட பள்ளி விளையாட்டு ஆசிரியர், கிரிக்கெட்டை விடுத்து தடகளப் போட்டிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்துகிறார். கிரிக்கெட் கனவைக் கைவிட அவருக்கு விருப்பமில்லாததால் முதலில் மறுக்க, பின் தந்தையும் கேட்டுக்கொண்டதால் கவனத்தை தடகளத்தின் பக்கம் திருப்புகிறார் உசைன் போல்ட். அதன்பிறகு, தடகள வரலாற்றின் பக்கங்களில் வண்ணமயமாக எழுதப்பட்ட பக்கங்கள் உலகறிந்ததே.

Advertisment

usain bolt

"நல்ல அமைதியான சூழல் கொண்டஎங்கள் ஊரில், அதிகாலை எழுவது என்பது புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய உணர்வாக இருக்கும். சிறு வயதில் மழையில் நனைந்தது, அங்கு கிடந்த நீரில் வெறுங்காலுடன் நடந்தது இன்றும் நினைவில் உள்ளது. என்மீது அதீத அன்பு கொண்டவராக என் அம்மா இருந்ததால், நான் செய்கிற தவறுகளை என் அப்பாவிடம் கூறமாட்டார். ஊரில் கிடைக்கிற தென்னைமட்டையை 'பேட்'-டாக மாற்றி கிரிக்கெட் விளையாடுவோம். கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்தது. பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் போது, என் விளையாட்டு ஆசிரியர் தடகளப் போட்டியில் கவனம் செலுத்துமாறு கூறினார். அவரைத் தொடர்ந்து, என் அப்பாவும் கேட்டுக்கொண்டதால் வேகமாக ஓடுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.

என்னுடைய 14 வயதில் ஹங்கேரியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டதே என்னுடைய முதல் சர்வதேசப் போட்டியாகும். அதில், அரை இறுதியில் தோற்று வெளியேறினேன். அடுத்த வருடம் கிங்ஸ்டனில் நடைபெற்ற உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் என்னை விட மூன்று வயது அதிகமானவர்களோடு இணைந்து ஓடினேன். அவர்களை வீழ்த்தி வெற்றிபெற முடியுமென நம்பிக்கை இல்லாததால் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லையென என் அம்மாவிடம் கூறினேன். முடிவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறி அம்மாதான் என்னை அனுப்பி வைத்தார். அதில் பெற்ற வெற்றிதான் என்னுடைய முதல் சர்வதேச வெற்றி. நான் இன்று 'உலகின் மின்னல் வேக மனிதனாகிவிட்டேன்'. இருப்பினும், அந்தத் தருணத்தையே என் வாழ்வின் சிறந்த தருணமாகக் கருதுகிறேன்".

ஜூனியர் போட்டிகள், சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்று வந்த உசைன் போல்ட், முதல்முறையாக 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீ, 200மீ, 400மீ தொடர் ஓட்டம் என மூன்றிலும் தங்கம் வென்று அசத்தி, முத்திரைப் பதித்தார். 100 மீ ஓட்டத்தில் 9.69 வினாடியில் இலக்கை எட்டிய உசைன் போல்ட், உலகின் வேகமான மனிதன் என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார். நான்கு வருடம் கழித்து நடந்த அடுத்த ஒலிம்பிக் போட்டியில், 100மீ தூரத்தை 9.63 வினாடியில் எட்டி தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்தார். அந்த ஒலிம்பிக் தொடரிலும் மூன்று வடிவ ஓட்டங்களிலும் வெற்றித் தொடர்ந்தது. 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் இவ்வெற்றி தொடர, மூன்று ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மூன்று வடிவ ஓட்டங்களிலும் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனை, உசைன் போல்ட் வசமானது.

cnc

தன்னுடைய வெற்றியின் ரகசியம் குறித்துப் பகிர்ந்த உசைன் போல்ட், "ஓட்டத்தில் என்னை விடச் சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்துபவர்கள் இருக்கலாம். ஆனால், போட்டியை முடிப்பதில் நானே சிறந்தவன். உங்கள் கனவின் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த உலகில் அனைத்தும் சாத்தியமானதே" என்கிறார்.

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

வேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ...! சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30

vendror sol motivational story
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe