Thilagavathi Ips Rtd Thadayam 59

போதைக்கு அடிமையான சப்பானி தொடர்ச்சியாக 8 கொலை செய்த சம்பவத்தை பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

Advertisment

தங்கதுரையின் சாவுக்கு பின்னால் சப்பானி இருப்பதை கண்டறிந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில், மனைவியை தன் நண்பர்களுக்கு விருந்தாக்கிய பின்பு நடந்த சம்பவத்தால் கடந்த 2009ஆம் ஆண்டு பெரியசாமி என்ற பெரியவரை முதல் முதலில் சப்பானி கொலை செய்த சம்பவத்தை முந்தைய தொடரில் விரிவாக பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக பின்வருமாறு...

Advertisment

அதற்கு அடுத்து 2012ஆம் ஆண்டில் குமரேசபுரம் ஊரில் தொடர்பே இல்லாத கோகிலா எனும் 70 வயது மூதாட்டியை சப்பானி கொலை செய்துவிட்டு மூதாட்டியின் நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறார். அதற்கு அடுத்து சில மாதங்களிலேயே பாப்பாகுறிச்சி எனும் ஊரில் அற்புதசாமி என்ற பெரியவரை கொலை செய்து விட்டு நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் வனம் போன்ற பகுதியில் துண்டு துண்டாக வெட்டி போடுகிறார். 2015ல் விஜய் விக்டர் என்ற 27 வயது இளைஞரை கொலை செய்து அந்த உடலை கிளிக்கால்வாய் என்ற பகுதியில் போடுகிறார். அதன் பின்பு, 50 வயதான அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரை கொலை செய்கிறார். இவர் செய்த கொலைகளிலே வியப்பான கொலை என்னவென்றால், இவரது சொந்த தந்தையான 75 வயதான தெக்கண்ணனை கொலை செய்ததுதான். குடிப்பதற்காக தந்தையிடம் பணம் கேட்கும்போது, தன்னிடம் பணமே இல்லை என்று கூறியதுடன் சப்பானியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சப்பானி, தந்தையை கொலை செய்துவிட்டு தந்தை கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து ஊருக்கு பக்கத்தில் உள்ள மாந்தோப்பில் புதைத்துள்ளார்.

அதே போல், கூத்தாப்பர் பகுதியில் எலெக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் சத்தியநாதனை கொலை செய்கிறார். இப்படியாக சப்பானி மொத்தம் 8 கொலைகளை செய்கிறார். கொலை செய்து புதைத்த இடத்தையெல்லாம் சப்பானி காட்ட அதன்படி சில உடல்களை எடுக்கின்றனர். சில உடல்கள் அடையாளம் இல்லாமல் இல்லாமலே போகிறது. இத்தனை கொலைகளை இவர் தனி ஆளாகத்தான் செய்துள்ளார் என போலீசுக்கு தெரியவருகிறது. ஒருவரிடம் நன்றாக பேசி, பழகி அவர்களிடம் பழக்கத்தை சப்பானி உண்டு செய்து தங்கப்புதையல் கிடைத்துள்ளதாகவும், அதை சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம் எனவும் பேசுகிறார். அதன்படி, அவர்களும் சப்பானியின் பேச்சை நம்புகின்றனர். அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பூஜை செய்தால் தான் புதையலை எடுக்க முடியும் என்று பொய்யாக ஒரு பூஜையை நடத்தி அந்த நபரின் கண்ணை கட்டி கீழே விழுந்து நமஸ்காரம் செய்ய சொல்கிறான். அதன்படி, அவர்கள் கீழே விழுந்து நமஸ்காரம் செய்த போது தயார் நிலையில் வைத்திருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அந்த நபரை கொலை செய்து அவர்கள் தலை, கை கால் ஆகியவற்றை வெட்டி புதைத்தோ அல்லது துண்டு துண்டாக வெட்டியோ பல்வேறு இடங்களில் போடுகிறான். பூஜை மீது நம்பிக்கை உள்ளவர்களை இதன்படி கொலை செய்கிறான். நம்பிக்கையில்லாதவர்களுக்கு அதிகப்படியான மதுபானம் கொடுத்து அவர்களை சுயநினைவில்லாதவனாக மாற்றி அவர்களின் கண்ணை கட்டிவிட்டு கொலை செய்கிறான். இது அனைத்தையும் ஒப்புதல் வாக்குமூலமாக சப்பானி கொடுக்கிறான்.

Advertisment

இது சம்மந்தமான வழக்குகள் 7 ஆண்டுகள் நடக்கிறது. 30 சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்கிறது. குற்றவாளிகள் போலீஸ் அதிகாரிக்கு கொடுக்கும் வாக்குமூலங்களின் தொடர்ச்சியாக ஏதோ ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது என்ற உண்மைத்தன்மை இருக்கும்பட்சத்தில் அந்த வாக்குமூலங்கள் செல்லுபடியாகும் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்படும். அதன்படி, சப்பானி காட்டிய உடல்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 2023ஆம் ஆண்டில் தான், சப்பானிக்கு ஒரு ஆயுட்காலம் சிறையில் இருக்கும்படியான தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. குடி குடியை கெடுக்கும் என்று சொல்வது மாதிரி குடிப்பவர்களின் குடியை மட்டும் கெடுக்காது, குடி மற்றவர்களின் குடியையும் கெடுக்கிறது.