Skip to main content

ரயில் பெட்டிக்குள் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 29

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-29

 

தன்னுடைய மனதை உலுக்கிய ஒரு வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

 

சௌமியா என்கிற 23 வயது இளம்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த விஷயம் இது. அந்தப் பெண் அதிகம் படித்தவர் அல்ல. அவருடைய தாய் வீட்டு வேலை செய்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றினார். 6000 ரூபாய் சம்பளத்துக்கு எர்ணாகுளத்தில் சேல்ஸ் கேர்ளாக சௌமியா பணிபுரிந்து வந்தார். அங்கு ஒருவர் சௌமியாவை திருமணத்திற்கு ப்ரபோஸ் செய்தார். இரு வீட்டிலும் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் பிறகு ஒருநாள் சௌமியா ரயிலில் பயணித்தார். 

 

இடையில் ஒரு ஸ்டேஷனில் ஏறிய நபர் ஒருவர் சௌமியாவிடம் தவறாக நடக்க முயன்றார். சௌமியாவை அவன் கொடூரமாகத் தாக்கினான். ஓடும் ரயிலில் இருந்து சௌமியா தூக்கி வீசப்பட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணை வீசிய இடத்துக்குச் சென்ற அவன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டான். அந்தப் பெண்ணின் மொபைலை எடுத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து கிளம்பினான். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த சிலர் ரயில்வே அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.

 

அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது எதையும் கண்டறிய முடியவில்லை. அந்தப் பெண்ணின் உடலைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர். ரத்தம் அதிகமாக வெளியேறியதால் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது. நடந்த விஷயங்கள் எதுவுமே தெரியாத சௌமியாவின் அம்மா, சௌமியாவின் வருகைக்காக வீட்டில் காத்திருந்தார். சௌமியாவின் போன் ஸ்விட்ச் ஆப் மோடில் இருந்தது. சௌமியாவை மருத்துவமனையில் சேர்த்தவர்களுக்கு அவருடைய பெயர் கூடத் தெரியவில்லை. 

 

அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்தச் செய்தி பரவியது. பதறியடித்துக்கொண்டு அவருடைய தாயும் சகோதரரும் மருத்துவமனைக்கு சென்றனர். சௌமியா தான் அந்தப் பெண் என்பதை உறுதி செய்தனர். சௌமியா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். போஸ்ட்மார்ட்டத்தின் மூலம் நடந்த விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

 

கொலையாளி ஒரு கை செயல் இழந்த மாற்றுத்திறனாளி என்கிற தகவலை வைத்து தேடுதல் வேட்டை நடந்தது. ஒருவழியாக அவன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். அவன் யார் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அவன் விருத்தாசலத்தைச் சேர்ந்தவன். கொள்ளையடிப்பது தான் அவனுடைய முக்கியமான தொழிலாக இருந்தது. பல ஊர்களில் அவன் செய்த குற்றங்களுக்காக அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. திருட்டிலும் ஒவ்வொரு படியாக அவன் முன்னேறி வந்தான். இறுதியில் பாலியல் கொடுமை செய்த வழக்கிலும் சிக்கினான்.

 

ஆனாலும் அவன் இந்த வழக்கிலிருந்து தப்பித்தான். அது எப்படி என்றும் யார் இவனுக்காக வாதாடினார்கள் என்றும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

 

- தொடரும்...