Skip to main content

150 மரணங்கள்; கவர்னர் - முதல்வர் சேர்ந்து செய்த 2000 கோடி ஊழல்  - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 20

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-20

 

வியாபம் ஊழல் குறித்த பல்வேறு தகவல்களைத் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நமக்கு வழங்குகிறார்.

 

வேலைக்காக பணம் தரவில்லை என்ற காரணத்தால் அந்தப் பெண்ணை அவர்கள் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதன்பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது. பல பெரிய மனிதர்களுக்கு இதில் தொடர்பிருப்பது அதன் பிறகு தான் தெரிந்தது. முதல்வர் அலுவலகம், முதல்வரின் மனைவி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்று பலருக்கும் இதில் தொடர்பிருப்பது தெரிந்தது. கோச்சிங் சென்டர்களும் சந்தேக வளையத்திற்குள் வந்தன. 150க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊழலால் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமான ஜெகதீஷ் சாகர் பம்பாயில் கைது செய்யப்பட்டார். தவறு செய்தவர்கள் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

தவறு செய்து மாட்டிக்கொண்ட மாணவர்கள், தங்களுடைய டிகிரியை மட்டும் தாங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்கள் தங்களுடைய தவறுகளை உணர்ந்தனர். இந்த முறையீட்டை ஏற்றுக்கொள்வதில் இரு நீதிபதிகளுக்கும் இருவேறு கருத்துக்கள் இருந்தன. இதனால் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. அங்கு மூன்று நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். இதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் முடிவு செய்தனர். டாக்டர். ஆனந்த் ராய் தன்னுடைய பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டார். முதல்வர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை சட்டசபையில் எழுந்தது.

 

தனக்கு முந்தைய ஆட்சியிலேயே இந்த ஊழல் நடந்தது என்றும், தான் தான் இதை சிறப்பு காவல் படை மூலம் வெளியே கொண்டுவந்தது என்றும் முதல்வர் வாதிட்டார். வியாபம் என்பதன் பெயரையே அதற்குப் பிறகு மாற்றினர். இப்போது அங்கு தேர்வுகள் ஒழுங்காக நடத்தப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. இப்போது அனைத்து தேர்வுகளிலும் பயோமெட்ரிக் பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஏமாற்றுவது கடினம்.