Skip to main content

குடும்பத்தையே கொலை செய்த இளம்பெண்; கூடத்தாய் வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 04

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 04

 

கேரளாவையே உலுக்கிய கூடத்தாய் கொலை வழக்கு பற்றிய திடுக்கிடும் தகவல்களை தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

 

ஜாலி கொடுத்த பிரட்டை உண்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரட் தொண்டையில் சிக்கியதால் தான் குழந்தை உயிரிழந்ததாக அனைவரும் நம்பினர். சாஜு என்பவரோடு ஜாலிக்குப் பழக்கம் இருந்தது. அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாள். அந்த இரண்டு வயது குழந்தை பிற்காலத்தில் தனக்குப் பிரச்சனையாக வந்துவிடக்கூடாது என்று அதையும் கொன்று விடுகிறாள் ஜாலி. சாஜுவின் மனைவியிடமும் அவள் அன்பாகப் பழகினாள். 

 

ஒருமுறை மாத்திரை போடத் தண்ணீர் வேண்டும் என்று சாஜுவின் மனைவி கேட்டபோது ஜாலி தன்னுடைய பையில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள். அதைக் குடித்தவுடன் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தார் சாஜூவின் மனைவி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அதன் பிறகு சில மாதங்களில் சாஜுவை ஜாலி திருமணம் செய்துகொண்டாள். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

இந்தக் கொலைகளில் ஜாலி தவிர வேறு யாருக்காவது சம்பந்தம் இருக்குமா என்கிற ரீதியிலும் போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். பல்வேறு முயற்சிகளின் மூலம் சிலரின் உதவியுடன் சைனைட் ஜாலியின் கைக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர். உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் மூலம் குடும்ப சொத்துக்களைத் தன் பெயருக்கு ஜாலி மாற்றி எழுதிக்கொண்டதும் தெரிந்தது. அனைவருமே குற்றவாளிகளாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். ஜாலி சிறையில் அடைக்கப்பட்டாள். 

 

ஜாலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தான் செய்த குற்றங்கள் அனைத்தையும் போலீசாரிடம் ஜாலி ஒப்புக்கொண்டாள். கோழிக்கோடு பகுதியிலிருந்து ஜாலிக்காக வாதாட யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் புனேவிலிருந்து வினு ஆண்டனி என்ற வழக்கறிஞர் வந்தார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர் தான். சமீபத்தில் கேரள நடிகை ஒருவரை நடிகர் ஒருவர் அடியாட்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், குற்றம் செய்த நடிகரின் சார்பில் ஆஜராகி அவர் வெளியே வர உதவியவர் தான் இந்த வினு ஆண்டனி. அவர்தான் ஜாலியின் சார்பில் ஆஜரானார்.

 

இந்த வழக்குக்காக கொல்லப்பட்டவர்களின் கல்லறைகள் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியதாக ஜாலி கூறியதும் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய கல்வி குறித்து ஜாலி அதுவரை சொல்லி வந்தவையும் பொய் என்பது தெரிந்தது. இன்னமும் சிறையில் இருக்கும் ஜாலி, இடையில் ஒருமுறை சிறையிலேயே தற்கொலை செய்யவும் முயன்றிருக்கிறாள். இனி ஜாலியுடன் வாழ்வதற்கு தனக்கு பயமாக இருக்கிறது என்று சாஜுவும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.


 

 

 

Next Story

கள்ளச்சாராய வியாபாரி கொடுத்த வாக்குமூலம்; மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட உடல்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Confession given by liquor dealer; The body was exhumed again


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் கடந்த 18 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் விற்பனை செய்த சாராயத்தை வாங்கி குடித்துள்ளார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனால் மீண்டும் உடலை வீட்டுக்கு எடுத்து வந்த ஜெயமுருகனின் உறவினர்கள் அவரது உடலை மறுநாள் அடக்கம் செய்தனர். ஆனால் ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது அவருடைய வீட்டாருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்த நிலையில் ராமர் என்பவரையு விசாரித்த போது அதே ஊரில் உயிரிழந்த ஜெயராமன், ஜெயமுருகன் உட்பட பலர் தன்னிடம் சாராயம் வாங்கிக் குடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து ஜெயராமன், ஜெயமுருகன் ஆகியோர் வீட்டிற்குச் சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால்தான் உயிரிழந்தார்களா என்பதை உறுதிசெய்ய உடல்கள் தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மதியம் வருவாய் வட்டாட்சியர் கமலக்கண்ணன், காவல் ஆய்வாளர் கந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

போக்சோ வழக்கு; எடியூரப்பாவிடம் விசாரணை!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Former Karnataka CM BS Yediyurappa POCSO case

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவர் மீது கடந்த மார்ச் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். இது குறித்தும் சதாசிவ நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Former Karnataka CM BS Yediyurappa POCSO case

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சிஐடி விசாரிக்கப்பட்டு வரும் புகாரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘அவர் முன்னாள் மாநில முதல்வர். அவர் நாட்டை விட்டா ஓடிவிடுவார்?. பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பி அவரால் என்ன செய்ய முடியும்?. உடல் நலக்குறைவு உள்ள மனுதாரரான முன்னாள் முதல்வரை கைது செய்து காவலில் வைக்கும் முடிவுக்கு நாம் உடனடியாகச் உத்தரவிட முடியாது. அதனால் ஜூன் 17ஆம் தேதி அன்று அடுத்த விசாரணை நடைபெறும். அதுவரை அவரை கைது செய்ய முடியாது’ என்று கூறி, எடியூரப்பா கைதுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிஐடி அதிகாரிகள் முன்பு இன்று (17.06.2024) காலை 10:50 மணிக்கு ஆஜரானர். இதனையடுத்து எடியூரப்பாவிடம் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.