Advertisment

வேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ...! சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30

Sundar Pichai

Advertisment

இணைய வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. எதிர்வரவிருக்கும் காலங்களில் இணையமே உலகின் இயங்கியலைத் தீர்மானிக்கக்கூடிய காரணியாக இருக்கும் என்பதை உணர்ந்த பல நிறுவனங்கள் இத்துறைக்குள் கால் பதிக்கத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருந்தன. ஏற்கனவே இருந்த இத்துறைசார் நிறுவனங்கள், தங்களது வேர்களை ஆழப்பதிப்பதற்கான முயற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தன.

லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரால் தொடங்கப்பட்டு ஆறு வயதே எட்டிய 'கூகிள்' என்ற நிறுவனத்தில், அந்தக் காலகட்டத்தில் நம் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழர் பணிக்குச் சேர்கிறார். நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்குபவர்களில், தொழில்நுட்ப அறிவு நிரம்பிய அந்த நபர் வழங்கும் ஆலோசனைகள் கவனிக்கத்தக்கவை. அந்த வகையில், ஒரு முறை, 'நம் நிறுவனத்திற்கென்று தனியாக ஒரு தேடுபொறி (BROWSER) வேண்டும்' என ஒரு ஆலோசனையை முன்வைக்கிறார். அதே காலகட்டத்தில் இணைய உலகில் முன்னணி நிறுவனமாக இருந்த 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்திடம் 'இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' எனத் தனியாக ஒரு தேடுபொறி இருந்தது. கூகுள் நிறுவனம் சிறிய அளவிலான நிறுவனமாக இருந்ததால் அந்த நபர் முன்வைத்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு சிறிய 'டூல்பார்' உருவாக்கலாம் என முடிவெடுக்கப்படுகிறது.

நீண்ட ஆராய்ச்சி மற்றும் கடின உழைப்பிற்குப் பிறகு அறிமுகமாகிய 'கூகுள் டூல்பார்'-க்கு கிடைத்த வரவேற்பைக் கண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், 'இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' தேடுபொறியைத் தனது தயாரிப்பு பொருட்களில் கட்டாயமாகக் (DEFAULT ) கிடைக்கும்படி மாற்றியமைக்கிறது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத கூகுள் நிறுவனத் தலைவர் லேரி பேஜ், அடுத்த கட்ட நகர்வாக அந்த நபர் முன்வைத்த 'தனியாக ஒரு தேடுபொறி வேண்டும்' என்ற கோரிக்கையை ஏற்கிறார். அந்த நபரின் தலைமையிலேயே அதற்கான வேலைகள் தொடங்குகின்றன. 'கூகுள் தமிழன்', 'தொழில்நுட்ப உலகை ஆளும் தமிழன்' என இன்று நாம் பெருமைப் பட்டுக்கொள்ளும் சுந்தர் பிச்சையின் விஸ்வரூப வளர்ச்சி மற்றும் கூகுள் நிறுவனத்தின் அசுர எழுச்சிக்கான விதை இவ்வாறுதான் போடப்பட்டது.

Advertisment

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் ரகுனந்த பிச்சை-லட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை. ரகுனந்த பிச்சை பணி நிமித்தம் காரணமாக, குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்கிறது. இடப்பெயர்வு அடைந்து சென்னைக்கு வரும் சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கென்று சென்னை நகரம் பிரத்தியேகமாக வரையறுத்து வைத்திருக்கும் வாழ்க்கை முறையே சுந்தர் பிச்சை குடும்பத்திற்கும் அமைகிறது. தொழில்நுட்பம் சார்ந்த எந்தப் பொருட்களையும் காண முடியாத இரு அறைகள் கொண்ட வீட்டில்தான் அவரது ஆரம்பக்கால வாழ்க்கை. சுந்தர் பிச்சைக்கு 12 வயதாக இருக்கும் போது அவரது வீட்டிற்குள் முதல்முறையாக தொலைப்பேசி வடிவில் நுழைகிறது தொழில்நுட்பம்.

அதைப் பயன்படுத்தி தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஃபோன் செய்து பேசும் அனுபவம் அவருக்குள் பரவசத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் சுந்தர் பிச்சைக்கு ஏற்பட்ட ஆர்வத்திற்கான தொடக்கப்புள்ளி அவரது வீட்டில் இருந்த தொலைப்பேசியைப் பயன்படுத்திய அனுபவமே. அதன்பிறகான, பள்ளிப்படிப்பு, ஐஐடி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் படிப்பு, ஆரம்பக்கட்ட பணி, கூகுள் பணி, கூகுள் சி.இ.ஓ-வாக பதவி உயர்வு, அல்பபெட் சி.இ.ஓ பொறுப்புக் கிடைத்தது என அனைத்தும் நாமறிந்ததே.

"எந்தத் தொழில்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழலில்தான் நான் வளர்ந்தேன். எனக்கு 12 வயது இருக்கும்வரை தொலைப்பேசியைப் பயன்படுத்தியதில்லை. நான் அமெரிக்கா செல்லும் வரை கணினி பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அமைந்ததில்லை. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய விமானப் பயணத்திற்கான செலவு, என் அப்பாவின் ஒரு வருட வருமானத்தைவிட அதிகம். நான் அமெரிக்காவில் இறங்கியபோது நான் நினைத்ததை விட அனைத்தும் வேறாக இருந்தது. என் பெற்றோரிடம் நான் ஃபோன் பேச வேண்டுமென்றால் ஒரு நிமிடத்திற்கு இரு டாலருக்கும் மேல் செலவாகும். கல்லூரி செல்வதற்காகப் பை வாங்கச் சென்ற போது அது என் தந்தையின் ஒரு மாத வருமானத்தைவிட அதிகமாக இருந்தது. என் பெற்றோர், நண்பர்கள், காதலி என அனைவரையும் நான் அதிகம் தவறவிட்டேன். நான் நினைத்த நேரத்தில் கணினி பயன்படுத்த முடியும் என்பதே அங்கு எனக்கு இருந்த ஒரு ஆறுதலான விஷயம். தொழில்நுட்பம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அந்தச் சமயத்தில் இணைய வளர்ச்சி ஏற்பட்டது. நான் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அதே வருடத்தில்தான் 'மொசைக்' தேடுபொறி வெளியானது. இணையம் ஒன்றே தொழில்நுட்பத்தை அதிகப்படியான மக்களிடம் கொண்டுசேர்க்க எளிமையான வழி என்பதை உணர்ந்து, என்னுடைய வேலையை விட்டுவிட்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன்".

Sundar Pichai

இன்று, தேடலை எளிமைப்படுத்தியுள்ள 'கூகுள் க்ரோம்', பயணத்தை எளிமைப்படுத்தியுள்ள 'கூகுள் மேப்ஸ்' ஆகிய செயலிகள் சுந்தர் பிச்சையின் மேற்பார்வையில் உருவானவையே. கூகுள் நிறுவனத்தில் சாதாரண ஊழியராக சுந்தர் பிச்சை பணிக்குச் சேர்ந்தது 2004-ஆம் ஆண்டு. சி.இ.ஓ-வாக பதவி உயர்வு பெற்றது 2015-ஆம் ஆண்டு. பணிக்குச் சேர்ந்து 11 ஆண்டுகளிலேயே ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார் என்றால் அவரது திறமை மற்றும் கடின உழைப்பைத் தாண்டி, அந்நிறுவனத்தின் மீது அவர் காட்டிய விஸ்வாசமே. வேலைபார்க்கும் நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு விஸ்வாசமாக இருக்கிறேன் என்ற பெயரில் பிற ஊழியர்கள் பற்றிக் குறை கூறுவது, புறம் பேசுவது என இல்லாமல் தன் பணியில் விஸ்வாசத்தை வெளிப்படுத்தினார். ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளம், பெரிய பதவி என வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்தவர், சுந்தர் பிச்சை.

cnc

ஒரு மேடையில் வெற்றிக்கான வழிகள் குறித்துப் பேசிய சுந்தர் பிச்சை, "உங்களை விடத் திறமையான நபர்களோடு இணைந்து பணியாற்றுங்கள். நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டுவிட்டால் உங்களுக்கு வசதியான வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என அர்த்தம். நான் திறமையாக வேலை செய்கிறேனா?என்னை விட அவர்கள் சிறப்பாகச் செய்கிறார்களோ? என்ற எண்ணங்களே தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வழிவகுக்கும். அமெரிக்கா வரும்வரை எந்தத் தொழில்நுட்பமும் சரிவரக் கிடைக்கப்பெறாதநான், உங்கள் முன் இன்று நிற்கிறேன் என்றால் தொழில்நுட்பம் மேல் எனக்கு இருந்த காதலும் அதைத் திறந்த மனதுடன் நான் அணுகியதுமே. உங்கள் நண்பர்கள் என்ன செய்கிறார்கள், சமூகம் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறது, உங்கள் பெற்றோர்கள் விருப்பம் என்ன என்பதை விடுத்து உங்களை உற்சாகப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்" என்றார்.

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

அன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம்! 'மரங்களின் தாய்' திம்மக்கா! | வென்றோர் சொல் #29

vendror sol motivational story
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe