Advertisment

"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா..." -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு! |வென்றோர் சொல் #24

Sridhar Vembu

சில நேரங்களில் விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாய் லட்சியக்கனவின் மீது கொண்டுள்ள பிடி விலகும். அந்நேரங்களில் சாவின் விளிம்பிற்கு சென்ற கனவினை மீட்டு, மீண்டும் உயிர்ப்பிக்க அவ்வப்போது ஏதாவது சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி வாசிப்பது உண்டு. அந்தவகையில், அன்று ஒரு மனிதனின் சாதனை வரலாற்றை வாசிக்க நேர்ந்தது. 'உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?'என்பது அந்த மனிதரிடம் முன் வைக்கப்பட்ட கேள்வி. 'கூகுளின் எதிர்காலத்திட்டம் என்ன? தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்வதுதானே... அதுதான் எனக்கும், என் நிறுவனத்திற்கும்' - இது அம்மனிதர் கூறிய பதில். பின் அந்த மனிதர் குறித்து இணையத்தில் தேடுகையில், பார்ப்பதற்கு எளிமையாக வேஷ்டி சட்டையுடன் தமிழ் மண்ணிற்கு சொந்தக்காரராக இருந்தார். இத்தனை எளிமையான மனிதரிடமிருந்தா இவ்வளவு வலிமையான பதிலும், கனவுகளும் வெளிப்பட்டன என்ற பிரமிப்பு அடங்குவதற்குள் அவரைப் பற்றியும், அந்நிறுவனத்தைப் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள முடிந்தது. ஆம், அவர் சோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு.

Advertisment

தஞ்சை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீதர் வேம்பு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ்வழியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர், கல்லூரிப் படிப்பை ஐஐடி மெட்ராஸில் படிக்கிறார். பின் அமெரிக்கா சென்று முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணிக்கு சேர்கிறார். இளம் வயதிலேயே அரசியல் மீது சிறு ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீதர் வேம்புவிற்கு அமெரிக்காவில் இருக்கும்போது, ஜப்பான், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாட்டு சந்தைகள் பற்றியும், அரசியல் சூழல் பற்றியும் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வலுவாகக் காலூன்ற, இந்தியா திரும்புகிறார். 1996-ல் 'அட்வென்ட் நெட்' எனும் பெயரில் தொடங்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் 12 கிளைகளுடன், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையாட்களுடன் வருடம் ஒன்றிற்கு 3 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டும் நிறுவனமாக சோஹோ கொடிகட்டிப் பறக்கிறது.

Advertisment

"சிங்கப்பூர், ஜப்பான் பற்றி படிக்கும்போது நாம் ஏன் அவர்கள் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்ற கேள்வியெழுந்தது. நிறைய பயணம் செய்ய ஆரம்பித்த பின் அந்தக்கேள்வி இன்னும் அதிகமானது. இந்தியாவில் நிறைய திறமைகள் உள்ளது. அதை சரியாக பயன்படுத்தினால் நாமும் இவ்வாறு செய்யமுடியும் என்று எனக்குத் தோன்றியது. அப்படித்தான் என் பயணம் தொடங்கியது"

இன்று உலகம் முழுவதுமுள்ள பல நிறுவனங்களின் இதயமாக சோஹோ நிறுவனத்தின் 40-க்கும் மேற்பட்ட மென்பொருட்கள் செயல்பட்டு வருகின்றன. தகவல் பரிமாற்றத்தில் தொடங்கி வருகைப்பதிவேடு உட்பட கணினிமயமாக்கப்பட்ட அனைத்திலும் இன்று சோஹோ நிறுவனத்தின் பங்களிப்பு நிறைந்துள்ளது. உலகம் முழுவதும் இன்று சோஹோ சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனுக்கும் மேலாகும்.

சோஹோ போன்று இன்று உலக அளவில் பல நிறுவனங்கள் இருந்தாலும், இவையனைத்தில் இருந்தும் சோஹோ தனித்தே நிற்கிறது. பிற நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கும்போது சோஹோ நிறுவனம் திறமையாளர்களுக்கு வேலை கொடுக்கிறது. கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அந்நிறுவனத்தின் துணை அமைப்பாக உள்ள சோஹோ பல்கலைக்கழத்தில் இலவசமாகப் பயிற்றுவித்து அவர்களை வேலைக்கும் அமர்த்திக் கொள்கிறது.

"எங்களுக்கு டிகிரி முக்கியம் இல்லை. ஆர்வம் அதிகம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துதான் பயிற்சியளித்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் அப்துல் அலீம் என்று ஒரு காவலாளி வேலை பார்த்தார். அவருக்கு கணினி பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் இருப்பதை பார்த்தோம். பின் சோஹோ பல்கலைக்கழத்தில் சேர்ந்து, 18 மாதம் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். அவர் தற்போது எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்".

இனி வரும் காலங்களில் கல்லூரி டிகிரி என்ற ஒன்று தேவையா என பெரிய விவாதமே இன்று நடந்து வரும் வேளையில், 2004-ம் ஆண்டு முதலே இத்தகைய முறை சோஹோ நிறுவனத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது எவ்வளவு தொலைநோக்குடன் ஸ்ரீதர் வேம்பு செயல்பட்டு வருகிறார் என்பதைக் காட்டுகிறது. மேலும், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றாலே சென்னை, பெங்களூரு மாதிரியான மாநகரங்களில் மட்டும்தான் நடத்த முடியும் என்ற நடைமுறையிலும் ஸ்ரீதர் வேம்பு மாற்றங்கள் செய்துள்ளார். தற்போது தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையிலும், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிலும் இவரது நிறுவனம் பல ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. இப்படி ஐடிதுறையில் இவரதுஇயக்கத்தை பார்க்கும்போது 'சூரரைப்போற்று' படம்தான் நினைவுக்கு வருகிறது. வழக்கங்களை உடைத்து வென்றிருக்கிறார்.

கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்கள், சோஹோ நிறுவனத்தை தங்களது போட்டியாளராகவே கருதுகின்றன. இவ்வளவு உயரங்களைத் தொட்டாலும், தொடர்ந்து ஓட வேண்டும் என்ற வேட்கை மட்டும் அவருக்குள் தணியவில்லை என்பதைத்தான் அவரது சமீபத்திய பேட்டி வெளிப்படுத்துகிறது.

"இன்று உலகில் எங்கு பார்த்தாலும் சாம்சங், ஹோண்டா நிறுவனத்தயாரிப்பை பார்க்க முடிகிறது. சோஹோ நிறுவனம் இன்றைய நிலையில் இருந்து கூடுதலாக ஒரு 10 சதவிகிதம் வளர்ச்சியடைந்தால் எங்கு பார்த்தாலும் சோஹோ நிறுவன ஃபிராண்டை பார்க்க முடியும். விரைவில் அதை எட்டுவோம்" என்கிறார் நம்பிக்கையுடன்.

எந்தப்பின்புலமும் இல்லாத ஒருவராயினும், தன்னுடைய உழைப்பையும் நம்பிக்கையும் முதலீடு செய்து உழைத்தால் எத்தகைய உயரத்தையும் தொடலாம் என்பதே ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம். கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

vendror sol motivational story
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe