Skip to main content

வாழ்க வளமுடன் என்பது பிழையா ? சொல்லேர் உழவு - பகுதி 30

Published on 11/01/2019 | Edited on 24/01/2019

 

 

ss

 

பேச்சு வழக்கினை நன்றாக ஊன்றிக் கவனிப்பது என் தலையாய பொழுதுபோக்கு. மொழி நுட்பங்கள் மக்கள் நாவினில் தொடர்ந்து வாழ்கின்ற தன்மையால்தான் தமிழ் வாழ்கிறது. அதனைப் பொய்ப்பிக்கும் எவ்வொரு சான்றினையும் நான் இதுகாறும் காணவில்லை. 


 

“காலைல சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் ?” என்று தாய்மார்கள் தம் பிள்ளைகளைக் கடிந்து கொள்கிறார்கள். “என்னத்துக்கு ஆகும் ?” என்ற தொடர் என்னை ஈர்த்தது. “எதற்கு ஆகும் ?” என்று வினவாமல் “என்னத்துக்கு ஆகும் ?” என்கிறார்கள்.


 

 

என்ன என்பது வினாச்சொல். அவ்வினாச்சொல் தனித்து நிற்பது. ஆனால், அவ்வினாச்சொல்லோடு கு என்னும் நான்காம் வேற்றுமை உருபினைச் சேர்க்க முயல்கிறார்கள். ஆழ்மனத்தில் பதிந்துவிட்ட மொழியியற்கையானது பேச்சுத்தமிழில் இவ்வாறு  வெளிப்படும்.

 

 

என்ன + கு என்று சேர்க்கும்போது “என்னக்கு” என்று சேர்க்க முடிவதில்லை. இடையில் ‘அத்துச் சாரியை’யையும் போடுகிறார்கள். “என்ன அத்து கு” என்பதனைத்தான் “என்னத்துக்கு” என்கிறார்கள். அடேங்கப்பா… மிகவும் எளிமையான பேச்சுச்சொல் ஒன்றில் எவ்வளவு ஆழ்ந்த மொழித்தன்மை பொதிந்திருக்கிறது, பாருங்கள் !

 

 

இலக்கணத்தில் சாரியை என்பது உண்டு. ஒரு சொல்லின் பகுதியையும் விகுதியையும் இணைக்கத் தோன்றுவது அது. ம் என்ற மெய்யெழுத்தில் முடியும் பெயர்ச்சொல் வேற்றுமை உருபினை ஏற்க வேண்டுமென்றால் அப்பெயருக்கும் வேற்றுமை உருபுக்கும் இடையில் ஒரு சாரியை தோன்றும்.

 

 

அத்து என்பது சாரியைகளில் புகழ்பெற்றது. மரம் என்ற பெயரோடு ஐ என்ற வேற்றுமை உருபினைச் சேர்க்க வேண்டுமென்றால் இடையில் அத்துச் சாரியை தோன்ற வேண்டும்.

 

 

மரம் + ஐ = மரம் + அத்து + ஐ = மரத்தை என்று வரும்.
 

 

மரம் + ஐ = மரமை என்று நாம் எழுதுவதில்லை. பேச்சிலும் அவ்வாறு கூறுவதில்லை.
 

 

மரத்தை, மரத்தால், மரத்துக்கு. மரத்தின், மரத்தினது, மரத்தின்கண் என்று அத்துச் சாரியை தோன்ற வேண்டும். அப்போதுதான் ம் என்ற மெய்யில் முடியும் பெயர்ச்சொல் வேற்றுமை உருபினை ஏற்கும்.

 

 

மேற்சொன்ன இயல்பின் காரணமாகத்தான் “வாழ்க வளமுடன்” என்னும் புகழ்பெற்ற வாழ்த்துத் தொடரில் பிழையிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

 

 

வளம் என்பது ம் என்ற மெய்யில் முடியும் மகர மெய்யீற்றுப் பெயர்ச்சொல். உடன் என்பது சேர்க்கைப் பொருள் தோன்றுமிடத்தில் வருகின்ற மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. வளம் என்ற சொல் உடன் என்ற சொல்லுருபை ஏற்க வேண்டுமெனில் இடையே அத்துச் சாரியை தோன்ற வேண்டும். வளமுடன் என்பது பிழை, வளத்துடன் என்பதே சரியென்பர். வாழ்க வளத்துடன் என்றிருக்க வேண்டும் என்பது ஒரு தரப்பினரின் வழக்கு.

 

 

அவர்கள் கூறுவதில் உண்மை இல்லாமலில்லை. அதனை மறுப்பவர்கள் “அத்துச் சாரியை என்பது பிற்கால வழக்கு… தொல்காப்பியக் காலத்தில் அத்துச் சாரியைத் தோற்றம் அரிது”  என்கின்றனர். மரத்துக்கு என்பதனை மரக்கு என்று கூறும் வழக்கம் இருந்தது என்று நிறுவவும் முனைகின்றனர். அத்துச் சாரியை தோன்றாமல் ஒரு வேற்றுமை உருபு தோன்றினால் அதனை இடைக்குறை விகாரமாகவும் கொள்ளலாம் என்பது அவர்கள் தரப்பு. வாழ்க வளத்துடன் என்பதே இலக்கணப்படி சரியாகும் என்பது தமிழறிஞர் பலரின் முடிவு.  

 

 

அத்துச் சாரியையானது உருபேற்கும்போது மட்டுமில்லாமல் சொற்சேர்க்கையின்போதும் தெளிவாகவும் வலிமையாகவும் தோன்றுவதை நாம் மறுக்க இயலாது. அடிமரத்து வேர்கள், ஒருமரத்துப் பறவைகள், குளத்து மீன்கள், தோட்டத்துக் காய்கள் போன்ற தொடர்கள் அதற்குச் சான்றாகும்.

 

 

அத்துச் சாரியையானது ஒரு சொல்லினை வேறுபடுத்திக் காட்டுவதோடு, அச்சொல் உருபுகளுடனோ பிற சொற்களுடனோ சேர்கையில் உரிய அழுத்தத்தோடும் இசையோடும் ஒலிப்பதற்கு உதவுகிறது. அதனால்தான் பேச்சுத் தமிழில் தனித்துத் தோன்றும் இயல்பாகவும் மாறிவிட்டது. என்ன என்பது அத்துச் சாரியை பெறும் என்பதற்கு இலக்கணம் துணை வாராது. ஆனால், பேச்சுத் தமிழியற்கைக்கு அத்துச் சாரியை தேவைப்படுகிறது.

 

 

“அவன் கிடக்கறான்… ஒன்னத்துக்கும் உதவமாட்டான்…” என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். “ஒன்னத்துக்கும்” என்ற சொல்லைப் பாருங்கள். அச்சொல் “ஒன்றுக்கும்” என்பதன் பேச்சு வழக்கு. “ஒன்றுக்கும் உதவமாட்டான்” என்பதனை “ஒன்னத்துக்கும் உதவமாட்டான்” என்று பேச்சில் வழங்குவது எப்படி ? ஒன்று என்பதன் பேச்சு வடிவம் ‘ஒன்னு’ என்பது. அது கு என்ற வேற்றுமை உருபினை ஏற்கையில் இடையில் தானாக அத்துச் சாரியை தோன்றுகிறது. ஒன்னு + அத்து + கு = ஒன்னத்துக்கு என்று ஆகிறது.

 

 

ஒன்றுக்கு மட்டுமில்லை, இரண்டுக்கும் பேச்சு வழக்கில் அத்துச் சாரியை தோன்றுவதைக் காணலாம். “இரண்டுத்துக்கும் வெச்சுக்கலாம்…” என்று பேசுவதைக் கேட்டிருக்கிறோம்.

 

 

அத்துச் சாரியையானது அத்துணை வலிமைமிக்கது. எழுத்திலும் பேச்சிலும் சொற்களுக்கிடையே ஓர் உயவுத்தன்மையை ஏற்படுத்தி மொழியைக் காக்கிறது.    

 

 

 

முந்தைய பகுதி:


கர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29

 

அடுத்த பகுதி:

 

வழுவழுப்பா, வழவழப்பா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 31

 

 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.