இறந்தவர் உடலை காருக்குள் வைத்து பல கிலோ மீட்டர் பயணம் - ஏசி ராஜாராம் பகிரும் தடயம்: 09

Rtrd AC Rajaram - Thadayam 09

தமிழ்நாட்டையே அதிர வைத்த ஒரு வழக்கு குறித்து ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் விவரிக்கிறார்.

சென்னைக்கு அருகே நடந்த குற்றம் பற்றிய வழக்கு இது. 2007 ஆம் ஆண்டு ரெட் ஹில்ஸ் பகுதியில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்திடம் இரண்டு இளைஞர்கள் வந்து கும்பகோணம் செல்ல கார் வேண்டும் என்று கேட்டார்கள். அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு அவர்களிடம் காரும் டிரைவரும் ஒப்படைக்கப்பட்டனர். டிராவல்ஸ் நிறுவனத்தில் அப்போது பணியிலிருந்த பையன் அவர்களிடம் வேறு எந்த தகவலையும் பெறவில்லை. இரண்டு நாட்களாகியும் கார் திரும்ப வரவில்லை. கணவரை இன்னும் காணவில்லை என்று டிரைவரின் மனைவி டிராவல்ஸ் நிறுவனத்தில் கேட்டார்.

டிரைவரின் நம்பருக்கு கால் செல்லவில்லை. அவருடைய மனைவியை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடைசியாக விழுப்புரம் மாவட்டத்தில் டிரைவர் இருந்ததாக செல்போன் சிக்னல் மூலம் தெரிந்தது. அந்த இடத்திலிருந்த இன்னொரு நம்பரை ஆராய்ந்தபோது ஒரு பெண்ணின் நம்பர் கிடைத்தது. அவர் இன்னொருவரை அடையாளம் காட்டினார். அதன் பிறகு காரை எடுத்துச் சென்ற இருவரும் பிடிபட்டனர். அவர்கள் நான்காவதாக ஒரு நபரை அடையாளம் காட்டினார்கள்.

திருவாரூரைச் சேர்ந்த அந்த நான்காவது நபர் தான் கார் வேண்டும் என்று கேட்டதாகவும், அவரைத் தாங்கள் அழைத்துச் சென்றதாகவும் கூறினர். அந்த திருவாரூர் நபரும் பிடிபட்டார். குறிப்பிட்ட அந்த நாளில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அனைவரும் பீர் அருந்தினர். டிரைவருக்கும் பீர் கொடுத்தனர். போதையில் இருந்த அவரை 4 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். அந்தப்பிணத்தை பல கிலோ மீட்டர் எடுத்துச் சென்றுபாலத்தில் வீசினர். இடையில் வண்டியை ஒரு இடத்தில் விட்டுவிட்டு அவர்கள் ஓடினர். ஆளில்லாமல் நின்ற வண்டி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

டிரைவரின் பிணத்தைக் கண்டறிந்த அந்தப் பகுதி போலீசார், அடையாளம் தெரியவில்லை என்பதால் பிணத்தைப் புதைத்தனர். அப்போது அந்த வழக்கின் விசாரணைக்காக அந்தப் பிணம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. 4 பேரும் ரிமாண்ட் செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு பெயில் கிடைத்தது. போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் மட்டும் கையெழுத்து போட வரவில்லை. அந்த மனிதர் தமிழ்நாட்டையே உலுக்கிய இன்னொரு கொலை வழக்கில் ஈடுபட்டிருந்தார்.

பூண்டி கலைச்செல்வன் என்கிற திமுகவைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கு அது. இந்தக் கொலைக்கு கார் தேவைப்படும் என்பதற்காகத் தான் டிராவல்ஸ் நிறுவனம் அனுப்பிய கார் டிரைவரை அவர்கள் கொலை செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். 4 மாவட்டங்களை இணைத்த வழக்கு இது. இவர்களுக்கு தூக்கு தண்டனை வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

thadayam
இதையும் படியுங்கள்
Subscribe