Rajkumar -  Solla Marantha Kathai :04

இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட கொலை குறித்து நம்மோடு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்துகொள்கிறார்.

Advertisment

ஏமாற்றுதல் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறது. இவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் இன்சூரன்ஸ் குறித்த புரிதல் இந்தியாவில் இன்னும் முழுமையாக இல்லை. இழப்பு ஏற்பட்ட பிறகுதான் இன்சூரன்ஸ் குறித்து சிந்திக்கிறார்கள். தெலங்கானாவில் தலைமைச் செயலகத்தில் நல்ல பொறுப்பில் இருந்த ஒருவர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவது என்று பணத்தை இழக்கும் பல்வேறு வேலைகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.

Advertisment

நிறைய கடன் வாங்கியதால் கடன்காரர்களின் தொல்லை அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவர் பல கம்பெனிகளில் ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் எடுத்தார். தன்னைப் போன்ற ஆள் ஒருவரைக் கண்டுபிடித்து, அவர் இறந்துவிட்டார் என்று கூறி இன்சூரன்ஸ் பணத்தைப் பெறலாம் என்பது அவருடைய திட்டம். சிறிது காலம் தலைமறைவாக இருந்துவிட்டு மீண்டும் வரலாம் என்றும் அவர் நினைத்திருந்தார். ரயில்வே ஸ்டேஷனில் கூலியாக இருந்த கோபால் என்கிற நபர் தன்னைப் போலவே இருப்பதை அறிந்து, அவரைத் தன்னிடம் வேலைக்குச் சேருமாறு அவர் கூறினார்.

கோபாலும் இவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். இவர் புதிதாகக் கார் ஒன்றை வாங்கினார். ஒருநாள் கோபாலை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கூலிப்படையினரையும் தன்னோடு அழைத்து வந்த அவர், கோபாலைக் கொலை செய்தார். கோபால் அமர்ந்திருந்த காருக்குத்தீ வைக்கப்பட்டது. அவர்தான் இறந்துவிட்டார் என்று அனைவரும் நினைத்தனர். அவருடைய மனைவி உடனடியாக இன்சூரன்ஸ் கம்பெனியை அணுகினார். உடலைப் பார்த்ததும் இன்சூரன்ஸ் அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரே மனிதர் ஏன் இவ்வளவு பாலிசிக்களை எடுத்து வைத்திருக்கிறார் என்ற சந்தேகமும் அவருக்கு ஏற்பட்டது.

ஸ்பெஷல் டீமுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் உண்மையான குற்றவாளி கண்டறியப்பட்டு, குற்றவாளிக்கும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இன்சூரன்ஸ் அதிகாரிகளை ஏமாற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதுபோன்ற குற்றங்கள் பல காலமாக நடந்து வருகின்றன. குற்றங்களைக் கண்டுபிடிக்காவிட்டால் அதிகாரியின் மீதே அது திரும்பிவிடும். சில நேரங்களில் அதிகாரிகளுக்கு மிரட்டல் கூட வரும்.