Skip to main content

என்னை உறங்கவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்த ஒரு கேள்வி... திருப்பி அடி #3  

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

நான்காம் வகுப்பு படிக்கும் யாழினி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்த மாணவி என்னிடம் ஒரு சிறிய புத்தகத்தை நீட்டி அதன் முதல் பக்கத்தை திருப்பி “சார், ஆட்டோகிராஃப் ப்ளீஸ்” என்றார்.


 

inspiring ilango interview



10ஆம் வகுப்பு வரை ப்ரைல் முறையிலேயே எழுதிப்  பழகியிருந்த நான், அதன் பிறகு ஒலி நாடாவில் வகுப்புகளைப் பதிவு செய்து கேட்டுப் படிக்கும் முறைக்குத்தான் மாறினேனே தவிர, பெரும்பான்மையான மக்கள் எழுதக்கூடிய எழுத்து முறையை நான் கற்றுக்கொள்ளவே இல்லை. சில முறைகள் முயன்று, எனக்கு வராது என கைவிட்டுவிட்டேன். எனவே, அந்த சிறுமியிடம் “பரவாயில்லை, இட்ஸ் ஆல் ரைட்” என்று சொன்னேன். ஆனால் அந்த சிறுமி, “இல்லை சார், நீங்கள் வருவதை முன்பே எங்கள் பள்ளியில் அறிவித்துவிட்டதால் என் பெற்றோரிடம் சொல்லி ஒரு ஆட்டோகிராஃப் புத்தகத்தை உங்களுக்காக வாங்கியிருக்கிறேன். இதில் நீங்கள்தான் முதல் கையொப்பம் போட இருக்கிறீர்கள்” என்றான். மீண்டும் நான் “இல்லையம்மா, எனக்கு ஆட்டோகிராஃப் போட்டுப் பழக்கம் இல்லை" என்றேன். அதற்கு அவர் ஆங்கிலத்தில் கூறியதை நான் உங்களுக்குத் தமிழில் கூறுகிறேன்... “எவ்வளவோ சாதிக்கிறீர்கள், ஆட்டோகிராஃப் போடத்  தெரியாதா?” என்று கேட்டார். உடனே அவரிடம் பேனாவை வாங்கி, எப்போதோ எழுத்துக்களை கற்கும் முயற்சியில் ஈடுபட்டபோது எனக்கிருந்த நினைவுகளை வைத்து மேலும் கீழும் கோடுகளைப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணையே என் பெயரையும், 'மகிழ் மகிழ்வி' என்ற எனது வாக்கியத்தையும் எழுதச் சொல்லி, "வைத்துக்கொள்ளம்மா, அடுத்தமுறை வரும்போது நிச்சயமாக, இன்னும் தெளிவான எனது ஆட்டோகிராஃப் உனக்குக் கிடைக்கும் என்று சொன்னேன்.

யூனிஃபார்மில் இருந்த அந்தச் சிறுமி அதை வாங்கிக்கொண்டு வகுப்பை நோக்கிப் பறந்ததைப் போலவே, ஆட்டோவும் என் வீட்டை நோக்கி மின்னலாகப் பறந்தது. வழியில் ஓட்டுனர் என்னிடம் எவ்வளவோ பேச முயற்சி செய்தார். அந்தப் பள்ளியில் மாணவர்களெல்லாம் எப்படி உற்சாகமாக இருந்தார்கள், அரங்கின் பின்னாலே இருந்து அவர் என்னவெல்லாம் பார்த்தார், இடைவிடாத கைத்தட்டல்கள் எப்படியெல்லாம் எனது கலந்துரையாடலின்போது வந்தது, மாணவிகள் எப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் கேட்டார்கள் என்பதையெல்லாம் பேசிக்கொண்டே இருந்தார் அவர். ஆனால், என்னால் சரியாக அவரின் உற்சாகத்தை உள்வாங்க முடியவில்லை, என்னுடைய மகிழ்ச்சியையும் என்னால் பகிர முடியவில்லை. அதற்குக் காரணம், யாழினியின் “எவ்வளவோ சாதிக்குறீங்க, ஆட்டோ கிராஃப் போடத்தெரியாதா?” என்ற கேள்விதான். அதுவரை எனது காசோலைகளிலும், மற்ற ஆவணங்களிலும் இடது கை பெருவிரல் ரேகையைத் தான் என்னுடைய கையெழுத்தாக இட்டுக்கொண்டிருந்தேன்.  கையெழுத்தைக் கூட அசல் அச்சு மாறாமல் போலிக்கையெழுத்திட்டு ஏமாற்றிவிடலாம். ஆனால், கைரேகையை ஏமாற்ற முடியாது இல்லையா? இருக்கட்டும். அந்த பெண் கேட்ட கேள்வி “என்னவோ சாதனையெல்லாம் செய்யுறனு சொல்றாங்க, உன்னால ஒரு கையெழுத்துக்கூட போட முடியாதா?” என்பது போல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

 

inspiring ilango singing



வீட்டிற்கு வந்தவுடன் வேறு எதிலும் நாட்டம் இல்லாத நான், அப்போது நட்பு வட்டத்திலிருந்த சிலருக்கு தொலைபேசி செய்து எனது ஆற்றாமையை தெரிவித்தபோது, அவர்கள் “உங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை, நீங்க எவ்வளவோ செஞ்சுக்கிட்டு இருக்கீங்க... இதை செய்யணும்னு அவசியம் இல்லை” என்று சொன்னார்கள். என் மனம் சமாதானம் அடையவில்லை. அந்த சிறுமியின் குரலே அசரிரீயாகக் கேட்டுக்கொண்டே இருந்தது. பல எண்ணங்களை நான் அசைப்போட்டுக்கொண்டே இருந்தேன். மாலையில் எனது அண்டை வீட்டு நண்பரை அழைத்து கையெழுத்துப் போடக் கற்றுக்கொடுங்கள் என்று சொன்னேன். அவர் சிரித்தார், நான் சிரிக்கவில்லை. பேனாவையும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் அவர் கையில் கொடுத்து, எனது வலது கையைப் பிடித்து சொல்லிக்கொடுங்கள் என்று சொன்னேன். நிலைமையின் தீவிரத்தை எடுத்து விலக்கிய பிறகு அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். ஏறத்தாழ 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நீங்கள் எழுதுகிற எழுத்துமுறை எனக்கு பிடிபட்டது. குறிப்பாக எனது பெயரை எழுதுவதற்கு தன்னம்பிக்கையை பெற்றேன் என்றே சொல்லலாம். ஆனால், என்னுடைய கையெழுத்து சீராகவும் ஒரே நேர்க்கோட்டிலும் இல்லை. கோனலாக இருந்தது. அதை சரி செய்வதற்காக அவர் சென்ற பிறகு நான் மீண்டும் மீண்டும் எழுதுகிறேனா, கிறுக்குகிறேனா என்று தெரியாமல் கிறுக்கிக்கொண்டே இருந்தேன்.

அடுத்தநாள் காலை 9 மணிக்கு அவரை வரச்சொல்லி எழுதிக்காட்டினேன். அவர் “இப்போது சரியாக இருக்கிறது, பெருவாரியான எங்களாலேயே எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி கையெழுத்து போட முடியாது. வங்கிகளில் அந்த சிக்கல் வருவதுண்டு. எனவே நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்றார். "அப்படியல்ல, நான் கையெழுத்து போடவேண்டும், ஆட்டோகிராஃப் கொடுக்கவேண்டும். இனிமேல் நான் பங்கேற்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வோருக்கு நான் ஆட்டோகிராஃப் கொடுக்கவேண்டும்" என்று சொன்னேன்.  எனவே, என் பெயரையும், என் பெயரின் சுருக்கத்தையும் இரண்டு எழுத்துகளாக எழுதப்பழகிக்கொண்டேன். நான் செல்லும் நிகழ்ச்சிகளில் அவர்களாக வந்து ஆட்டோகிராஃப் கேட்பார்கள், நானும் மகிழ்ச்சியோடு ஆட்டோகிராஃப் கொடுப்பேன். ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று ஆட்டோகிராஃப் வாங்கும்போது அந்த ஆட்டோகிராஃப் செக்‌ஷன் மட்டும் மணிக்கணக்கில் செல்வதுண்டு. எனவே, அதை இன்னும் எளிமைப்படுத்துவதற்காக 'மகிழ் மகிழ்வி' என்ற வாக்கியமும் அன்புடன் என்றும் அதற்கு கீழாக என் கையெழுத்தும் பதிந்த சீல் வைத்துக் கொடுக்கிறேன். ஆனால், இப்போது மிக தன்னம்பிக்கையுடன் என் பெயரை என்னால் நன்றாக எழுத முடியும் என்பது தான் நான் யாழினியிடமிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் விளைவு.

நம் ஐம்புலன்களையும், குறிப்பாக கண்களையும், காதுகளையும், அறிவையும் திறந்து வைத்திருக்கும் போது பாடங்கள் நமக்கு பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு கோணங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்ற பாடத்தையே மீண்டும் மீண்டும் கற்பதுதான் பிழையே தவிர, பாடங்கள் கற்பது பிழையில்லை. எந்த வயதிலும், இறுதி மூச்சு இருக்கும் வரையிலும் பாடங்கள் கற்கலாம். பாடம் சொல்லிக்கொடுப்பவர் கூட நம்மைவிட வயதில் குறைந்தவராகவும் இருக்கலாம், ஒத்த அல்லது மூத்த வயதினராகவும் இருக்கலாம். இதனுடைய மொத்த விளைவு என்னவென்றால், என்னுடைய அந்த கிறுக்கல்கள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடம் ஆட்டோகிராஃபாக இருக்கிறது. அவர்கள் அதைப் பார்க்கும்போதெல்லாம் தனக்கு தன்னம்பிக்கைத் துளிர்கிறது என்றும் இழந்த சக்தி அறிவில் முளைக்கிறது என்றும் கூறுகிறார்கள். 

என்னுடன் பேச...  inspiringilango@gmail.com

முந்தைய பகுதிகள் :

நடுராத்திரியில் வந்து மகனையும் மகளையும் கடத்த முயன்ற அப்பா! -  இன்ஸ்பையரிங் இளங்கோ எழுதும் திருப்பி அடி #1 

'கை'விட்ட தந்தை... நம்பிக்'கை' வைத்த தாய்... ஓங்கியது யார் கை? திருப்பி அடி #2  


 

 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.