Skip to main content

சிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள்!! 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்!! பி.டி.உஷா | வென்றோர் சொல் #6

 

pt usha

 

 

"என் முதல் வெளிநாட்டுப் பயணம் பாகிஸ்தானுக்கு சென்றதுதான்... அதுவும் ரயிலில், ரிசர்வேஷன் இல்லாமல். கதவருகே நின்று பயணம் செய்தபோது சிலர் கல்லெறிந்தார்கள், சாணியை எறிந்தார்கள். அது என் முகத்தில் பட்டது, எப்படி இருந்திருக்கும்! ஒரு பதினாறு வயதுப்பெண்ணுக்கு. பழகியவர்கள் யாரும் துணைக்கில்லாமல் ரயிலில் செல்கிறேன். அப்போது இப்படி நடக்கிறது. சின்ன பசங்க, ஏதோ விளையாட்டுக்குதான் எறிந்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அப்போது அது பெரும் வலியாக இருந்தது. இந்த காலத்தில் அப்படி ஒரு அனுபவம் நேர்ந்தால் அதோடு ரன்னிங்கையெல்லாம் விட்டுவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். நான் விடவில்லை..." - சொன்னவர் பி.டி.உஷா.

 

"ஒவ்வொரு முறை வெற்றியைத் தவற விடும்போதும் இந்தியா தனக்கான பதக்கத்தை நம்மால் இழந்து விட்டதே என்று நினைத்துதான் வருந்துவேன். அதுதான் என்னை தொடர்ந்து ஓடச் செய்தது" என்கிறார் ஆசியாவின் தடகள ராணி, இந்தியாவின் தங்கமங்கை, தடகள அரசி, பயோலி எக்ஸ்பிரஸ் என இத்தனை பட்டங்களை சுமந்து கொண்டு ஓடிய பி.டி.உஷா. கேரளாவின் சாதாரண கிராமமான பயோலி எனும் ஊரில் பிறந்து உலக அளவில் தடகளத்தில் இந்தியாவின் அடையாளமாக தன்னை நிலைநிறுத்திய பெண்மங்கை இவர். 9 வயது இருக்கும்போது பள்ளி விளையாட்டு ஆசிரியரால் அடையாளம் கண்டு பட்டை தீட்டப்பட்ட இவரது திறமைதான் பல பெருமைக்குரிய சாதனைகளை இன்று படைத்ததற்கான தொடக்க வித்து. அப்படியென்ன பெரிய சாதனைகளை பி.டி.உஷா படைத்துவிட்டார்? ஒலிம்பிக் போட்டியைத் தவிர ஓட்டத்தடங்களில் அவர் கால்பட்டு, கைகள் பதக்கம் ஏந்தாத மேடைகளே இல்லையென சொல்லலாம். சர்வதேச போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இவை எல்லாவற்றையும் விட பெரிய சாதனை அவர் படைத்த சாதனைகளை இன்று வரை யாராலும் தொட முடியாததே எனலாம். பெண் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தியச்சூழலில் தடைகளை உடைத்து தன் கனவு தேசத்தினை தானே தேடியடைந்த தடகள ராணி என பி.டி.உஷாவை குறிப்பிட்டால் மிகையாகாது.

 

முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பி.டி.உஷாவின் வயது வெறும் 16. மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற உஷாவுக்கு அங்கு சென்றதும் கடும் உடல் உபாதைகளாம். கேரளாவில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்தவருக்கு விமானம், மாஸ்கோ, ஒலிம்பிக் வில்லேஜ் (தங்குமிடம்) எல்லாமே மிரட்சி. பிறருக்கு இருப்பது போல உஷாவுக்கு தனி பயிற்சியாளரோ, மருத்துவரோ கிடையாது. அந்த சின்னப் பெண் உள்ளிருந்து அவரை செலுத்திய ஒரு தைரியத்தில்தான் இயங்கியிருக்கிறார். “அங்கு சென்றவுடன் எப்படியும் நான் வெல்ல முடியாது என்று தெரிந்து விட்டது. பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் வலிமையானவர்களாக இருந்தார்கள். தெரிந்து விட்டதால் கடைசியாக மட்டும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதில் ஆறாவது இடம் பிடித்தது எனக்கு நிறைவைத் தந்தது". 

 

பின் 1984ல் அமெரிக்க லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 0.01 வினாடி நேரத்தில் வெண்கலப் பதக்கத்தை தவற விடுகிறார். தேர்ந்த அனுபவமும், முறைப்படியான பயிற்சியும்தான் அவர்களை வெல்ல வைக்கிறது என்ற உண்மை அவருக்கு புரிகிறது. நீங்கள் வெல்லும்போது அனைவரும் உங்களை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஒரு முறை தோல்வி அடைந்துவிட்டால் உங்கள் கடந்த கால வெற்றியை பற்றியெல்லாம் அவர்கள் நினைக்கமாட்டார்கள். மிகவும் மோசமாக உங்களை விமர்சிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்ற உண்மைதான் பி.டி.உஷாவிற்கு வாழ்க்கை கற்றுத்தந்த பாடமென ஒரு முறை கூறினார். அதற்கடுத்து நடந்த ஆசிய தடகளப்போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடி நான்கு தங்கப்பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார். "நான் ஒலிம்பிக் வெல்ல முடியாவிட்டால் என்ன??? இனி வரும் தலைமுறை வெல்லட்டும், அதற்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்" என்று தடகள வீரர்ளுக்கான பயிற்சி பள்ளியை ஆரம்பித்து ஒலிம்பிக் கனவுகளுடன் இளம் தலைமுறையினருக்கு பயிற்சியும் நம்பிக்கையும் அளித்துவருகிறார்.

 

அவரது முதல் பயணம்... இன்று அவரின் நிலை... இரண்டையும் எண்ணிப் பார்ப்போம். வாழ்க்கை நம் மேல் சாணியடித்தால் துவண்டு போகக் கூடாது, பின்னால் கிரீடம் வைக்கும் என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார் உஷா.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்