Skip to main content

கடலைக் குறிக்கும் சொற்கள் இத்தனையா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 32

Published on 08/02/2019 | Edited on 20/02/2019

 

soller uzhavu

 

மொழிச்சொற்கள் யாவும் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், இடைச்சொற்கள், உரிச்சொற்கள் ஆகியன அந்தப் பிரிவுகள். இவற்றில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் தலைமையிடத்தை வகிக்கின்றன. இடைச்சொற்களும் உரிச்சொற்களும் முதலிரண்டு பகுப்புகளான பெயரையும் வினையையும் அண்டியே தம் இருப்பினைக் காட்டிக்கொள்கின்றன. பெயர்ச்சொற்களைப் பற்றியும் வினைச்சொற்களைப் பற்றியும் நாம் தேர்ந்த அறிவினைப் பெற்றுவிட்டால் போதும். சொல்லாற்றலில் நாம் பல படிகள் கடந்தவர்கள் ஆகிவிடுவோம்.
 

பெயர்ச்சொல் என்பது ஒரு பொருளைக் குறிக்கும். பெயர்ச்சொற்கள் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. வினைச்சொல்லாவது ஒரு செயலைக் குறிப்பது.
 

பெயர் என்பது ஒரு பொருளாக இருக்கும். பொருள் என்றால் கண்ணுக்குத் தெரியத்தக்க, கையால் தொடத்தக்க பருப்பொருளைக் குறிப்பது மட்டுமேயில்லை. கண்ணுக்குத் தெரியாத காலத்தைக் குறிப்பதும் பெயர்ச்சொல்தான். ஆடு, மாடு என்னும் கண்ணுக்குத் தெரியும் பொருளும் பெயர்ச்சொல்தான். மார்கழி, தை என்னும் கண்ணுக்குத் தெரியாத காலமும் பெயர்ச்சொல்தான்.
 

நடக்கின்ற, நடந்த, நடக்கும் ஒரு செயலைப் பெயர்ச்சொல்லாக்கிவிட முடியும். தேர்தல், பாடல், அழுத்தம், பேறு, கூட்டம் என்று ஒரு வினைச்சொல் விளைவையும் பெயர்ச்சொல்லாக்கிவிட முடியும்.
 

ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்களின் இன்றியமையாமையை நாள்முழுக்க விளக்கலாம். பள்ளியில் சேர்ந்ததும் நமக்கு அணில், ஆடு, இலை, ஈ என்று பெயர்ச்சொற்களைத்தான் கற்பித்தார்கள்.
 

soller uzhavu


 

நமது மொழிக்கல்வி ஒரு பெயரை அறிவதிலிருந்து தொடங்குகிறது. ஒரு குழந்தையிடம் மொழியை எப்படிக் கற்பிக்கிறோம் ? “அங்கே பாரு… அப்பா… அது யாரு ? மாமா… இது என்ன… பொம்மை..” என்று ஒவ்வொரு பொருளாகக் காண்பித்து அதன் பெயரைக்கூறி அறிவூட்டுகிறோம்.   
 

பெயர்ச்சொற்களின் அறிவினை வைத்தே ஒருவரின் மொழியறிவைக் கணக்கிடுவார்கள். ஆங்கிலத்தில் ஒருவரின் சொல்லாட்சித் திறத்தினை வளர்த்துக்கொள்ள ஆயிரக்கணக்கான நூல்கள் கிடைக்கின்றன. ஆனால், தமிழில் சொல்லாட்சித் திறத்தினை மேம்படுத்த உதவும் நூல்கள் இல்லை என்றே கூறலாம். அகராதிகட்கு அப்பால் நம் சொல்லறிவினை விரிவாக்கிக் கொள்வதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன ? வெறுமனே மொழியிலக்கியங்களைப் படித்துத் தேர்வதுதான் ஒரே வழி.
 

கடல் என்று ஒரு சொல் இருக்கிறது. இப்புவிப்பரப்பின் மிகப்பெரிய பொருள் அது. நம் தமிழகம்  கடல் சூழ்ந்த நிலம். பேரளவில் பரந்து விரிந்த ஒரு பொருளுக்கு எத்தனையோ சொற்கள் இருக்க வேண்டுமே. கடலுக்கு வழங்கப்படும் வேறு சொற்கள் என்னென்ன ? நமக்குத் தெரிந்திருக்கிறதா ? ஒருவரை வழிமறித்துக் கேட்டால் அவர் என்ன சொல்லக் கூடும் ? “கடல்னா கடல்தான். அதுக்கு வேற என்ன பேரு இருக்கும் ? தெரியலயே…” என்றுதான் கூறுவார். நன்கு கற்றவர்களை இடைமறித்துக் கேட்டாலும் இதுதான் நிலை. பண்டு தொட்டே கடலைக் கலங்கட்டி ஆண்டவர்கள் நாம். ஆனால் நமக்குக் கடலைக் குறிக்கும் வேறு சொற்கள் தெரியவில்லை.   
 

கடல் என்றால் எனக்குச் சில சொற்கள் நினைவுக்கு வருகின்றன. ஆழி என்ற சொல் ஒன்று. ஆழிசூழ் உலகு என்கிறார்கள். சில மீனவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர்கள் “கரையருகே உள்ள கடலை ஆழி என்று கூறக்கூடாது” என்றனர். கடற்கரையிலிருந்து உள்ளே சென்று அதன் ஆழ்பரப்பு தொடங்குமிடம்தான் ஆழி எனப்படுமாம். ஆழம் தொடங்குமிடம் ஆழி. கடலின் பரந்து விரிந்த தன்மையால் வழங்கப்படும் இன்னொரு பெயர் ‘பரவை’ என்பது. பறவை என்றால் புள். பரவை என்றால் கடல். முந்நீர் என்று அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. மூன்று வகையான நீர் சேர்ந்த இடம். கடல் என்பது மூவகை நீரின் சேர்திடல்தான். ஆற்று நீர் கடலில் சேர்கிறது. கடற்பரப்பில் பெய்யும் மழைநீர் கடலில் சேர்கிறது. கடலடி நிலத்தின் ஊற்றுநீரும் அங்கே சேர்ந்திருக்கிறது. அதனால் கடலுக்கு வழங்கப்படும் முந்நீர் என்ற பெயர் பெரும்பொருள் மிக்கதாகிறது. கடலைக் கண்டு வியக்க வேண்டியிருப்பதால் அதற்கு வியன்நீர் என்ற பெயரும் உண்டு. ‘கம்பவாரிதி’ இலங்கை ஜெயராஜ் என்று புகழ்பெற்ற பேச்சாளர் இருக்கிறார். அவர் பட்டத்தில் உள்ள வாரிதி என்பதும் கடல்தான். அறிவுக்கடல் என்பதைப்போல கம்பரைப் பற்றிய அறிவுக்கடல் அவர். சமுத்திரம் என்ற சொல் கடலைக் குறிக்கும் வடசொல்.
 

கடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களை வீரமாமுனிவரின் சதுரகராதி கூறுகிறது. அத்தி, அப்பு, அம்பரம், அம்புராசி, அம்போதி, அரி, அருணவம், அலை, அளக்கர், ஆர்கலி, ஆழி, உத்தி, உந்தி, உப்பு, உவரி, உவர், ஓதம், கலி, கார்கோள், குரவை, சக்கரம், சமுத்திரம், சல்தி, சலநதி, சலராதி, சாகரம், சிந்து, தெண்டிரை, நதிபதி, நரலை, நீராழி, நேமி, யயோத்தி, பரப்பு, பரவை, பாராவாரம், புணரி, பெருநீர், பௌவம், மகராலயம், மகோத்தி, முந்நீர், வாரம் வாரணம், வாரி, வாரிதி, வாருணம், வீரை, வெள்ளம், வேலாவலயம், வேலை.
 

கடல் என்னும் ஒரு பொருளுக்கு நம் மொழியில் வழங்கப்பட்ட சொற்கள் இவை. இவற்றுள் சில பிறமொழிச் சொற்களாகவும் இருக்கலாம். ஆனாலும் கடல் என்றதும் இச்சொற்களில் பல நமக்கு நினைவுக்கு வரவில்லை என்றால் நமக்குச் சொல்லறிவு போதவில்லை என்பதே பொருள். முந்தைய பகுதி:


வழுவழுப்பா, வழவழப்பா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 31
 

 

அடுத்த பகுதி:

தோல்வி எப்படி வந்தது? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 33