Skip to main content

"நீ இனிமே பக்கத்துல வராத. உன்னாலதான் என் மேலயும் நாறுது" - இந்தப் படத்தின் கதை #2

நான் அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்திருந்தேன். கேமராவைப் பழகிக்கொண்டு சில மாதங்களே ஆகியிருந்தது. தினமும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டிற்குள்ளோ அல்லது சுவாமிமலை கோவில் கடைத்தெருக்கள், வயல்வெளிகள் என சுற்றி ஃபோட்டோ எடுக்கலாம் என்பதே எனது அப்போதைய திட்டமாக இருந்தது. பலநாட்கள் என் வீட்டின் மொட்டைமாடியில் நின்று சூரிய உதயத்தைப் பார்க்கும்போது நிலத்தையும் வானத்தையும் பிரிக்கிற கோட்டின்மேல் சில குடிசைகளின் குவியல் தென்படும். அவற்றின் பின்புறம் படுத்துறங்கிய கதிரவன் சோம்பல் முறித்து எட்டிப்பார்க்கும்போது பரவும் செந்நிறம், அந்த குடிசைகள் பழுக்கவைக்கப்படுகின்றன, உலகை செதுக்கக்கூடிய ஆயுதங்கள் அவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றன என்பதுவாய் உணர்த்தும். நேற்று தாராசுரம் சந்தையின் காய்கறி கடலில் நீந்தி தீர்த்தாகிவிட்டது. இன்று அந்த குடிசை பகுதிக்கு சென்றுவரலாமென அம்மாவிடம் கேட்டேன். முதலில் தயங்கியவள்  “சீக்கிரம் வந்துடனும்” என நிபந்தனையுடன் வழிச்சொன்னாள். 
 

 

Photo story

 

மாட்டுவண்டிகளாலும் மனித தடங்களாலும் மட்டுமே உருவான பாதை கருவேல மரங்களுக்கிடையில் சென்று மறைந்தது. ஏதோ திடலில் அமைந்திருக்கும் நான்கைந்து வீடுகளாக இருக்கலாம் என கற்பனைகள் சுருங்கிப்போக எதிர்ப்பார்ப்பு ஏதுமின்றியே முன்னேறி சென்றேன். ஒத்தையடிப் பாதைதான் எனினும் குறுகியும் அகன்றும் சென்ற பாதையில் சில மீட்டர்கள் கடந்தபின் திடீரென முளைத்து நின்றது அந்த விசாலமான வீதி. பெரும்பாலும் குடிசைகளும் குண்டும் குழியுமான சிமெண்ட் ரோடுமாய் விரிந்திருந்தது. அதுவரை கழுத்தில் அமைதியாக தொங்கிய கேமரா கைகளில் ஏறி தயாராக நின்றது. பள்ளி முடிந்து சிறுவர்களெல்லாம் அப்போதுதான் வந்திருக்க வேண்டும். ஒருவர்கூட சீருடையை மாற்றியிருக்கவில்லை. வாசலில் நின்றபடியே சிலேட்டுப்பையை வீட்டிற்குள் வீசிவிட்டு நடுவீதியில் உடைந்த ஓடுகளை அடுக்கி செவன் சார்ட் விளையாடுவதில் மும்முரமாய் இருந்தனர். வறண்ட செம்மண்காட்டில் அரளிப் பூக்களை வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகளாய்... என என் கேமரா காட்சிகளை கவிதையாக்க துவங்கியிருந்தது. கனநேரத்தில் அந்த வண்ணத்துப்பூச்சிகள் தேனீக்களாய் மாறி என்னை சூழ்ந்துகொண்டனர். “எங்களயா ஃபோட்டா எடுக்குறீங்க? எதுக்கு? புக்குல போடுவீங்களா? என்னைய புடிங்கக்கா. இருக்கா, நா வேற சட்ட போட்டுட்டு வறேன்.” உயிங்...உயிங்...உயிங்..எதைக்கேட்பது எதற்கு பதில் சொல்வது... திகைத்துப்போனேன். அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட தெருவில் இருந்த அனைவருமே என்னை கவனித்தனர்.
 

அருகிலிருந்த வீட்டிலிருந்து நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் “அடேய் அந்த அக்காவ வேலபாக்க வுடுங்கடா” என அதட்டியவாறே வெளியே வந்தார். அந்த சிறுவர்களை விலக்கிவிட்டு “கவர்மெண்ட் கக்கூஸ் ஃபோட்டா எடுக்க வந்துருக்கிங்களா? எங்க வூட்ல இன்னும் பேரெழுதலையே...” அவருக்கு பதில் சொல்வதையும் மறந்து எனக்குள் சிரித்துக்கொண்டிருந்தேன். ஒருவழியாக “அதெல்லாம் இல்லங்க. சும்மா காலேஜ் ப்ராஜெக்டுக்காக ஃபோட்டோ எடுக்குற” என்பதாக சொல்லிப் புரிய வைத்தேன். ஒவ்வோரு பத்தடிக்கும் ஒருவர் வெவ்வேறு விதங்களில் இதே கேள்வியைக் கேட்டனர். நான் ஒவ்வொருவருக்கும் ஒரு வார்த்தையைக் குறைத்து கடைசியாக “சும்மா” எனும் பதிலை உறுதிசெய்துகொண்டேன். அதுவே போதுமானதாக இருந்தது. அதற்குமேல் எந்த விசாரணையும் இல்லை. புன்சிரிப்பு, வெட்கம், ஆச்சர்யம், முறைப்பு, பரிவு என வெவ்வேறு விதங்களில் இருந்தாலும் அனைவரிடமும் ஒத்துழைப்புக் கிடைத்தது. சிறுவர்கள் தவிர. ஆரம்பத்தில் என்னை சூழ்ந்துகொண்டவர்கள் இப்போது என்னை வேடிக்கைப் பார்த்தவாறே பின்தொடர்ந்தனர். நானும் சளைக்காமல் அவ்வப்போது அவர்களையும் விதவிதமாக ஃபோட்டோ எடுத்தபடி சுற்றினேன். கட்சி சின்னங்கள் வரையப்பட்ட மண்சுவற்றில் சாய்ந்தபடி கால்களை சுறுக்கி உட்காந்திருந்த பாட்டிகள், தான் சிரிப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மீசையை முறுக்கிய தாத்தா, இடுப்பின் ஒரு பக்கம் குடத்தையும் மறுப்பக்கம் குழந்தையையும் வைத்துக்கொண்டு வெள்ளந்தியாய் சிரித்த அக்காள் என பல காட்சிகள் கேமராவில் பதிவாவதும் பின் கடந்து செல்வதுமாய் இருக்க அந்த தெருவின் பிற்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் என் கவனம் நிலைகொண்டது. 
 

சுற்றித்திரிந்த கலைப்பில் சூரியன் எல்லையின்றி விரிந்திருந்த பச்சைப் போர்வைக்குள் புகுந்துகொண்டான். அவன் தூங்கினானா இல்லையா என இருள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த நேரம். கிட்டத்தட்ட அங்கிருந்த எல்லோரது பார்வையும் அவ்வப்போது என் பக்கம் வந்து சென்றது. அதுபோக அங்கிருந்த சிறுவர்களுக்கு நானே பொழுதுபோக்காய் மாறியிருந்தேன். வெளிச்சம் குறைவதால் என் கேமரா தவிப்பதும், அதனால் நான் சோர்ந்துபோவதும் என் முகத்தில் தெரிந்தது. ஃபோட்டோ எடுப்பதை நிறுத்துவதுபோல் கேமராவை விட்டுவிட்டு ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தேன். என்னுடன் வந்த சிறுவர்கள் ஒருவர் இருவராய் கலைந்து சென்றுவிட்டனர். அந்த தெருவின் கடைசிவீடு இதுதான் என நினைக்கிறேன். சிதிலடைந்த கூரையில் ஒட்டு போட்டாற்போல் உரச்சாக்குகளால் மூடப்பட்டிருக்கும் வீடு. அதன் திண்ணையில் அமர்ந்து குனிந்த தலை நிமிராமல் ஒரு சிறுவன் எழுதிக்கொண்டிருந்தான். நான் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையோ, ஃபோட்டோ எடுப்பதையோ அவன் கண்டுகொள்ளவில்லை. நின்றுகொண்டும் உட்கார்ந்தும் பல கோணங்களில் ஃபோட்டோ எடுத்தபோதும் அவன் நிமிந்து பார்க்கவே இல்லை. அவனது கவனம் முழுவதும் அந்த நோட்டில் க,ங,ச எழுதுவதிலேயே இருந்தது. எழுதி முடித்தபின் பார்ப்பான் என காத்திருந்தேன். அடுத்தப் பக்கத்திலும் அதையே திரும்ப எழுதினான். போக போக வெறிபிடித்தவன் போல் வேகமாக எழுத பென்சிலின் முனை உடைந்தது. அப்போதும் நிமிராமல் சிலை போல் இருந்தான். அவன் யார்மீதோ கோபத்தில் இருப்பதை புரிந்துகொண்டு பேசாமல் நின்றேன். 
 

ஊராட்சி குப்பை வண்டியை தள்ளிக்கொண்டு அவனது அம்மா வந்தாள். வண்டியை வீட்டின் பக்கவாட்டு சுவற்றையொட்டி நிறுத்திவிட்டு நேராக தெருவின் மூலையிலுள்ள அடிபம்பிற்குச் சென்று சாம்பலையும் சவுக்காரத்தையும் குழைத்தெடுத்து கை கால்களில் தேய்த்து கழுவினாள். மார்பை மறைக்கவே போதாமல் நைந்திருந்த அவள் புடவையின் முந்தானையில் கையை துடைத்தவாறே வந்து குப்பை வண்டியில் மாட்டியிருந்த ஜவுதால் பையை பிரித்தாள். “ராசு, இந்தாடா... பக்கடா வாங்கியாந்தன்...” எதுவும் கேட்காததுபோல் அந்த சிறுவன் அமைதியாக இருக்க, அம்மா அவன் அருகில் சென்று தலையைக் கோதியவாறே “என்னாச்சு ராசு” எனக் கேட்டாள். அவன் கூறப்போகும் பதில் அவளுக்கு முன்பே தெரிந்திருக்கவேண்டும். வலியும் பயமும் கலந்தே அந்த வார்த்தைகள் வந்திருந்தன. அதுவரை குனிந்தே இருந்தவன் அவள் கையை வெடுக்கென தட்டிவிட்டு “தொடாதம்மா, நாறுது” என சிணுங்கியபடியே உள்ளே சென்று குப்புறப் படுத்துக்கொண்டான். “நீ இனிமே பக்கத்துல வராத. உன்னாலதான் என் மேலயும் நாறுது. பள்ளியோடத்துல என்னைய தனியாவே உட்கார சொல்றானுவோ” சிறுவனின் புலம்பலை தவிர்த்துவிட்டு அவள் என்னிடம் “யாரு ஆயி?”என்றாள். அவள் கண்களில் கண்ணீர் கட்டியிருந்தும் உதட்டில் புன்சிரிப்பு மாறாமல் இருந்தது. “கணபதி நகர் அக்கா. சும்மா காலேஜ்க்காக ஃபோட்டோ எடுக்க வந்த” என்னும்போதே என் பார்வை சிறுவன் மீது சென்றது. அதை கவனித்த அவள் “அவன் கெடக்குறா ஆயி. இப்டிதான் மொரண்டு புடிப்பான். பசிச்சா என்டதானே வரணும்” என சிரிப்பை கொஞ்சம் கூட்டினாள். குரலில் தழுதழுப்பும், கண்ணில் கண்ணீரும் கூடவே கூடியிருந்தது. “நீ யேன் என்ன பெத்த. வுட்ருந்தா நா ஆகாஷ் அம்மாவுக்கோ பிரவின் அம்மாவுக்கோ பொறந்துருப்பன்ல” அவன் நினைத்து நினைத்து முனங்கும் சத்தம் கேட்க அவளுக்கு கண்ணில் கட்டியிருந்த நீர், கனம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்து அவளின் சிரித்த உதட்டை நனைத்தது. கண்ணீரைத் துடைக்கவும் அவள் மனத்திலோ கையிலோ பலமின்றி உறைந்துபோய் நின்றாள். நான் எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டேன். அவர்களை நசுக்குகிற பாறைமீது நானும் நிற்பதாய் தோன்றியது. அந்த பாறையிலிருந்து குதிப்பதெப்படி என யோசித்தவாறே வந்தபாதையில் திரும்பி வீடு வந்து சேர்ந்தேன். 
 

முந்தைய பகுதி
 

Photographer: Alar 
E-mail: alarmelvalliarunagiri@gmail.com

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...