Advertisment

எதிர்பாராத கண்ணீர்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 25.

எனது நூல்கள், கவிதைகள் மற்றும் தொகுப்புகளிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு விமானத்திலும், காரிலும், நடந்தும் சிலி முழுவதையும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தேன். செப்டம்பரில் நாங்கள் ஒரு புதிய ஜனாதிபதியை பெறப் போகிறோம். அத்துடன் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

Advertisment

தெருவில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு மிகப்பெரிய முரசொலி எங்களை அழைக்கிறது. உண்மையில் அங்கே முரசுகள் இல்லை. எனினும் ஒவ்வொருவரும் அதைக் கேட்டோம். ஒருவேளை அது முன்பொரு காலத்தில் அரவ்க்கா இன மக்கள் தங்கள் மீது படையெடுத்து வந்தவர்களுக்கு எதிராக ஒலித்த முரசின் ஓசையாக இருக்கலாம். எங்களை போர்க்களத்திற்கு அழைத்தது அவர்களது குரலாக இருக்கலாம்.

இன்றைக்கு அந்தப் போராட்டமானது நில உடமையாளர்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இதர அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எனது தேசத்தின் அரசியல் வாழ்வை சூறையாடி அடிமைப்படுத்தியிருப்பது இவர்கள்தானே?

paththirikaiyalar pablo neruda part 25

Advertisment

நான் எமது வேட்பாளர் டாக்டர் அலண்டேவுடன், மெகல்லன் ஜலசந்தியை நோக்கி பரந்து கொண்டிருக்கிறேன். விமானத்திற்கு கீழே, மிக வேகமாக ஓடி மறையும் பள்ளத்தாக்குகள், அற்புதமாக வளர்ந்து கிடக்கும் கோதுமை வயல்கள், கொத்து கொத்தாய் காய்த்துத் தொங்கும் திராட்சைத் தோட்டங்கள். நாங்கள் மிகவும் கடினமான சமவெளிப் பகுதியை, தலை சுற்றும் உயரத்தில் அமர்ந்து கொண்டு கடந்து சென்றோம். வழியில் சக்திமிக்க எரிமலைகளான லைமா, வில்லாரிகா, ஷில்லான் ஆகியவை அகன்ற வாயுடன் உயர்ந்து நின்று புன்னகைத்தன. திடீரென்று பனிமூடிய மலைச்சிகரங்களை கண்ணுற்றோம். ஓசோர்னோ, பண்டியாகுடோ மற்றும் கார்கோவடோ ஆகிய பனிச்சிகரங்களையும், கடல் போல விரிந்து கிடக்கும் மலைத்தொடரின் எழிலையும் கண்டோம். தனித்தன்மை வாய்ந்த இந்த இடங்களையெல்லாம் எங்கள் விமானம் கண்மூடித் திறப்பதற்குள் கடந்து சென்றது. கீழே தெரிந்த நூற்றுக்கணக்கான பனிச்சிகரங்கள் வெள்ளி ரிப்பன்களைப் போல காட்சியளித்தன. அமெரிக்கக் கண்டத்தின் தென்கோடி பிரதேசம் மாபெரும் அழகும் வனப்பும் நிறைந்த, அழகின் மர்மங்கள் நிறைந்த பிரதேசமாக காட்சியளிக்கிறது!

புத்தம் புதிய நீல வண்ண மலைகளின் மீது வெள்ளை நிற பதாகையாக பனி போர்த்தியிருக்கிறது. எண்ணற்ற தீவுக் கூட்டத்தின் கரைகளில் படிந்துள்ள கடல் நுரைகளில் பட்டு சூரிய ஒளி மின்னுகிறது. மலைகளின் இதய பகுதிகளில் ஆழமாக வெட்டி விட்டது போன்ற கடற்கால்கள்...

விரைவிலேயே எங்களது கவனம் படகோனியாவின் கடினமான எதார்த்தத்தை நோக்கித் திரும்பியது. மக்கள் எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மாபெரும் மக்கள் கூட்டம் எங்களை வரவேற்ற விமான நிலையத்தில் துவங்கி, எல்லா இடங்களிலும் நாங்கள் பேசினோம். உலகின் தொலைதூர நகரங்களின் இருப்பிடமான மெகல்லன் ஜலசந்தி முழுவதும் வீதிகளில் நடந்தோம். பிறகு நாங்கள் மிகப்பெரும் எஸ்டேட்டுகளுக்கு சென்றோம். இந்த எஸ்ட்டேட்டுகளில் மிகச் சிறியதே சுமார் 3 அல்லது 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு கொண்டது என்றால் மற்றவற்றின் பரப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இங்கு ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக்கணக்கில் கூட செம்மறி ஆடுகள் மேய்கின்றன. அவை எப்போதும் எண்ணப்படுவது இல்லை. ஒரு எஸ்டேட்டில் முழு வீச்சில் ஆடு வெட்டும் பணி நடந்து கொண்டிருந்த போது நாங்கள் அங்கு சென்றோம். 140 ஆயிரம் ஆடுகள் ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்தன. ஆனால் அந்த கம்பெனியின் லாபத்தோடு ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை குறைவானதே.

paththirikaiyalar pablo neruda part 25

இந்த நிறுவனம் மெகல்லன் ஜலசந்தி சுரண்டல் கழகம் என்றே பெயர் கொண்டது. இப்பிராந்தியத்தில் பிரபலமானது. கடந்த 50 ஆண்டுகளாக மெகல்லன் ஜலசந்தி மக்களையும், அவர்களுடைய ஆடுகளையும் ஒட்டச் சுரண்டிய இந்த கம்பெனி, தனது பெயரில் இருக்கும் சுரண்டல் என்ற வார்த்தையை திடீரென்று நீக்கிக் கொண்டது. வார்த்தை மட்டும்தான் நீங்கியது. சுரண்டல் அப்படியே தொடர்கிறது.

பெரும் அளவிலான பேல்கள் ஆட்டுத்தோல் லண்டனில் மார்க்கெட் செய்யப்பட்டது. இறைச்சி பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கப்பலில் ஏற்றப்பட்டது. பன்டா அரினாஸ் பகுதியில் செம்மறி ஆட்டுக் குட்டிகளே இல்லாமல் செய்தது இந்தக் கம்பெனி. உள்ளூர் சந்தையிலிருந்து செம்மறி ஆட்டு இறைச்சி முற்றிலும் மறைந்து விட்டது. அப்படியே கிடைத்தாலும் ஏழைகள் வாங்க முடியாத அளவிற்கு இருந்தது.

அலெண்டே தனது பிரச்சாரத்தில், இந்த அமைப்பு முறையை மாற்றுவது என்று தீர்க்கமாக உறுதியேற்றார்.

நாங்கள் வென்றால் அதன் பின்னர் அமையப் போகும் மக்களின் அரசாங்கம் சிலி தேசத்தின் மக்களுக்கு நிலங்களை விநியோகிக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அங்கே கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களிடையேயும், மேற்படி பிரிட்டிஷ் கம்பெனியின் மேலாளர் முன்பும் வெளியிட்டோம். அப்போது அந்த மக்களின் சோகமான கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்ததை உணர்ந்தோம். சிலியின் இந்த மாபெரும் மாகாணத்தின் மக்கள் (இம்மாகாணம் சில ஐரோப்பிய நாடுகளை விட பெரியது) நீண்ட காலமாக ஒடுக்குமுறையின் கீழ் வாழ்கிறார்கள்.

paththirikaiyalar pablo neruda part 25

எங்களது பயணத்தோடு, பெரும்பான்மை மக்கள் செல்வாக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சோசலி்ஸ்டான பன்டா அரினாஸ் மாநகர மேயரும் வந்தார். சாலைகளில் ஆடு மேய்ப்பர்கள் எங்களை கடந்து சென்றார்கள். ஒவ்வொருவரும் ஒரு குதிரையில் சென்றார்கள். கையில் மற்றொரு குதிரையை கட்டி இழுத்துச் சென்றார்கள். இரண்டாவது சென்ற குதிரையில் அந்தத் தொழிலாளர்களின் கருவிகள், பூட்ஸ் செருப்புகள், சமையல் பொருட்கள் போன்றவற்றை கட்டியிருந்தார்கள்.

இந்த பரந்து விரிந்த பள்ளத்தாக்குகளில் நீண்ட காலமாகவே ஆடு மேய்ப்பர்கள் வாழ்கிறார்கள். அவர்களைச் சுற்றி அவர்கள் வளர்க்கும் செம்மறி ஆடுகள் மட்டுமே தெரிகின்றன.

மிக நீண்ட குளிர்காலத்தின் போது (உலகிலேயே நீண்ட குளிர் காலம் நிலவும் பகுதி இதுதான்) அவர்கள் அடிக்கடி வெளியே சென்று விடுவது உண்டு. தானும் நீண்ட ஆண்டுகளாக ஒரு ஆடு மேய்ப்பராக இருந்ததாக மேயர் கூறினார். அவர் வேலை செய்த இடத்தில் அவரது மேலதிகாரிகள் இவரை எப்போதும் கடுமையான பணிகளுக்கு உட்படுத்த முயற்சித்தார்கள். ஏனென்றால், இவரது கலக குணத்தை பார்த்து அவர்கள் அஞ்சினார்கள். அவர் தனது செம்மறி ஆடுகளோடு வெளிப்பகுதிகளில் படுத்துத் தூங்குவார். வெப்பநிலை மைனஸ் 30 டிகிரிக்கும் கீழே செல்லும்போது கூட இது போன்று நடக்கும். பல தருணங்களில் அவரது கண் இமைகளில் பனி மூடியிருக்கும். மிகக் கடுமையான சூழல்களில் வாழ்ந்த அவர் முடிவற்ற தனிமையிலும் வாடியவர்.

ஆனால் இப்போது ஆடு வெட்டும் காலம் உச்சத்தில் இருக்கிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை சந்திக்க நாங்கள் விரும்பினோம். அமைதியான புரட்சிக்கு ஆதரவு அளிக்கும் வேட்பாளரை அவர்களுக்கு அறிமுகப்படுத்த விழைந்தோம். அலெண்டேவுக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களது வாழ்வில் மாற்றம் வரும் என்பதை விளக்க நாங்கள் முயற்சிப்போம். அதன் பின்னர் நான் எனது கவிதைகளைப் பாடுவேன்.

நாங்கள் அந்தப் பெரிய கூடாரத்திற்குள் நுழைந்தோம். அங்கே நூற்றுக்கணக்கான ஆடு வெட்டும் தொழிலாளர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு செம்மறி ஆட்டை வைத்திருந்தார்கள். புராணங்களில் வரும் கதாநாயகர்களைப் போல அவர்கள் காணப்பட்டார்கள். செம்மறி ஆட்டின் கழுத்தைச் சுற்றி இடது கையை வைத்துக் கொண்டும், வலது கையால் அந்த ஆட்டின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி அதன் பின்னர் உயிரிழந்த ஆட்டின் உடலை கீழே போட்டு தோலை உரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கடைசியில் ஆட்டுக்குட்டி தனது முழுத்தோலையும் இழந்தது. தோல் இல்லாத நிர்வாண உடலாக காட்சியளித்தது.

paththirikaiyalar pablo neruda part 25

இதைப் பார்ப்பது மிகவும் கடினமானது. இந்த வேலை மிக வேகமாகவும் விரைவாகவும் நடக்கும். அந்தத் தொழிலாளரின் வியர்வை துளிகள் தனது கையில் ஏந்தியுள்ள ஆட்டுக்குட்டியின் மீது விழும். என்னுடன் வந்தவர்கள் இமை மூடாமல் அந்தக் காட்சிகளை கண்டார்கள். அவர்களது கண்கள் குளமாயின. முகங்களில் தூசி படிந்தது. ஆடு வெட்டும் அந்தக் கூடத்திற்குள் வீசும் காற்றின் வாடை மிக மோசமானது. ஆட்டுக் குட்டியின் தோலில் இருந்து எழும் நாற்றமும் வியர்வையின் நாற்றமும் அங்கே வியாபித்திருந்தது.

அந்தக் கம்பெனி தொழிலாளர்களுக்கு அவர்களது வியர்வை முழுவதும் ஆவியாகும் வரை வேலைவாங்கிக் கொண்டு மிகச் சிறிய அளவு கூலி கொடுத்தது. கடைசியில் அவர்களுக்கு சற்று ஓய்வு கிடைத்தது. அந்தக் கூடத்தின் நடுவில் எங்களைச் சுற்றி நின்றார்கள். இந்த தருணம் என்னைப் பொறுத்தவரை மிகவும் பொறுப்புமிக்க தருணம். இந்த தொலைதூர இடத்தில், ஆட்டுத் தோலின் நாற்றத்திற்குள்ளும் தூசி படிந்த கூடாரத்திற்குள்ளும் வேலை செய்கிற அந்த மக்களுக்காக எனது கவிதையை வாசிக்கும் தருணம். ஒரு வேளை அவர்கள் காட்டுத்தனமானவர்களாக நாகரீகமற்றவர்களாக இருந்தால் என்ன செய்வது? அமைதியாக கூடியிருந்த அந்தக் கூட்டத்தினிடையே கவிதை வாசிப்பது, அவர்களுக்கு என்னை புரிந்து கொள்ள வைக்குமா? எனது எண்ணங்கள் மோதிக் கொண்டிருந்தன.

கடைசியில் நான் வாசிக்க ஆரம்பித்தேன். கியூபாவைப் பற்றிய, செவ்விந்தியர்களைப் பற்றிய, உண்மையைப் பற்றிய, மகிழ்ச்சியைப் பற்றிய, காற்றைப் பற்றிய, துயரத்தைப் பற்றிய கவிதைகளை நான் வாசித்தேன். கடினமான உழைப்பால் களைத்துப் போயிருந்த அந்த மக்கள் முன்பு இது நடந்தது.

கடைசியில் எனது கவிதைகள் சொந்த தேசத்தைப் பற்றி கூறியது. அப்போது எதிர்பாராத கண்ணீர் துளிகள், ஒட்டிப் போயிருந்த அவர்களது கன்னங்களில் வழிந்ததைக் கண்டேன். படகோனிய பிரதேசத்தின் குளிர் காற்றில் அந்தக் கண்ணீர் பளிச்சென்று தெரிந்தது. சோக கீதங்களோ, கடும் புயலோ கூட இப்படிப்பட்ட கண்ணீரை அந்த மக்களிடமிருந்து வெளிக்கொண்டு வந்திருக்கும் என்று நான் கருதவில்லை. அவர்கள் என்னைப் பாராட்டி கை தட்டினார்கள். என்னை வாரி அணைத்துக் கொண்டார்கள். ஒரு கடினமான தேர்வில் நான் வெற்றி பெற்றதை அப்போதுதான் உணர்ந்தேன்.

மீண்டும் சாலைக்கு வந்தோம். எல்லையற்ற நிலப்பகுதியை பார்த்தோம். உலகின் முடிவில் இருக்கின்ற சமவெளிப் பகுதியை, பனி மூடிய மலைகளை தாண்டி திரும்பினோம். மிக மிக நீண்ட கண்ணுக்குத் தெரியாத கம்பிவேலி இருந்தது. அது என்ன? அது எதைப் பாதுகாக்கிறது? விண்வெளியையா? உலகின் செல்வத்தையா?

paththirikaiyalar pablo neruda part 25

இந்தப் பிராந்தியத்தில் முதன்முதலில் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் வேலி போட்டிருந்தார்கள். படகோனியாவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களே அவர்கள். பல லட்சக்கணக்கான மக்கள் வாழ போதுமான இந்தப் பிரதேசத்திற்கு அவர்களே இந்தப் பெயரை இட்டார்கள். ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் கொடூர மனிதர்களால் ஊடுருவப்பட்ட எந்த இடமும் உருப்பட்டதாக சரித்திரமில்லை. அவர்கள் இங்கே புதிய ரகமான வேட்டையை துவக்கினார்கள். வன்முறையும் கொலை பாதகங்களும் தெரியாத இந்த மக்களிடையே, கெய்ன் என்னும் மனிதன் பிறக்காத இந்த பூமியில் அந்த வேட்டை நடந்தது. படகோனிய இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட வேட்டை மிக விரைவிலேயே அந்த இனத்தை துண்டாடியது.

இந்த வேட்டையில் அவர்கள் தங்களது காதுகளை இழந்தார்கள். பின்னர் அவர்களது தலைகளை குறி வைத்து ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது.

இன்றைய நிலைமையில் எந்தவொரு படகோனியனும் இங்கே உயிரோடு இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. காற்று மட்டும் அதன் துருவப் பாடலை இசைத்துக் கொண்டிருக்கிறது. மரங்களை வளையச் செய்தும் ஒடித்தும் விளையாடுகிறது. செம்மறி ஆட்டு குட்டிகளின் தோலும் இறைச்சியும் வெளிநாடுகளுக்கு கப்பலேற்றப்படுவதை வரலாற்றின் இந்த இருட்டுப் பிரதேசத்திலிருந்து எந்தக் கண்களும் பார்க்க முடியாது.

எவராலும் கவனிக்கப்படாத இந்த மக்களுக்காக ஒரு புதிய உணர்வை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதில் உறுதியாக வெல்வோம்.

-இழ்வெஸ்தியா, பிப்ரவரி 20, 1964.

முந்தைய பகுதி:

இப்போது இங்கே கோடைக்காலம்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.

part 25 pablo neruda journalist athanurchozhan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe