Advertisment

கியூபாவின் பாடல்கள்... ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18

“பாரீஸ், ஜீன்-13. இளங்கவிஞன் மனுவேல் மோரெனோ பாரன்கோ பாசிச கொலைவெறியர்களால் கொல்லப்பட்ட கொடூரமான செய்தியை பாரீஸ் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.

Advertisment

pablo neruda

“இந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட மனுவேல், மருத்துவமனையில் பத்து நாட்கள் இருந்த பின்னர் இறந்தார். இந்த மரணத்திற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள், இந்த மரணத்துக்கு விளக்கம் அளிக்க அவருடைய குடும்பத்தினரை அழைத்தார்கள். ஜூலியன் கிரிமாவின் கொலையை முடிமறைக்க அதிகாரிகள் என்ன கதையை சொன்னார்களோ, அதையே மனுவேலின் குடும்பத்தினரிடமும் தெரிவித்தனர். அவர் சிறையின் ஜன்னல் மீது ஏறி, குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். ஆனால், இறந்துபோன தனது மகனின் உடலைப்பார்க்க, அந்த இளங்கவிஞனின் அம்மாவுக்கு கொலையாளிகள் அனுமதி மறுத்தனர். சிறைச் சித்திரவதையால் அந்த கவிஞனின் உடலில் ஏற்பட்ட காயங்களை, அவனது தாயார் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் தடுத்தனர்.”

இந்தச் செய்தி வெளியான 1963 ஜூன் 14 ஆம் தேதி நான் உடல் சுகவீனமான உணர்வுடன் கண் விழித்தேன். இன்றைக்கு கியூபாவைப் பற்றிய ஸ்பானியக் கவிதைத் தொகுப்பிற்கு ஒரு முன்னுரை எழுலாம் என்று முடிவு செய்தேன். எனது படுக்கையிலிருந்தே, வால்பரைசோ துறைமுகத்தில் உலவும் கப்பல்களைப் பார்க்க முடியும். அந்தப் கப்பல்களில் சில, குளிர்கால கடலின் அலைகளை எதிர்த்து நின்றன, அவை ஸ்பெயினில் இருந்து வந்திருக்கக் கூடும் அல்லது மீண்டும் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும். அந்தக் கப்பல்களில் இருந்து எனது எண்ணங்கள், கடல் துறைமுகங்களுக்குத் தாவியது, பின்னர், கியூபாவைப் பற்றிய புதிய கவிதைகளுக்குத் தாவியது. செய்தித்தாள்களை கவனித்தேன், மேலே குறிப்பிட்ட செய்தியைப் படித்தேன்.

Advertisment

pablo neruda

ஆக, அனைத்தும் ஒரே மாதிரியாகவா உள்ளன..?

அப்படித் தெரிகிறது... ஆனால், அது அப்படி இல்லை!

விலங்குகள் மட்டும்தான் பழைய வழியில் செல்லும்,

ஆனால், கவிஞர்களின் பாடல்கள் புதியவை.

இந்த நூல், சிறைக்கொட்டடியின் சுவர்களில் தங்கள் கவிதைகளை மோதவிட்டவர்களுக்காக, பெருங்கடல்களையும் தாண்டி குரல் எழுப்புபவர்களுக்காக. ஸ்பானிய நிலத்தில் எழும் முணுமுணுப்புகள் அல்ல, பெருங்குரலுக்காக எழுதப்பட்டது.

உலகம் முழுவதிலும் இருந்து கவிஞர்கள் நாங்கள், எங்கள் கவிதைகளை ஸ்பெயினுக்கு அர்ப்பணிக்கிறோம். அமெரிக்க கண்டத்தின் மீதான எனது நண்பர்கள் மற்றும் சக தோழர்களின் சிந்தனை, துயரத்தையும், ஸ்பெயினின் சாகசத்தையும் உணர்ந்தது, அதற்கு ஏற்றாற்போல் பிரதிபலித்தது. நாங்கள், மலைத் தொடர்களாலும், எல்லையற்ற சமவெளிகளாலும், பிரிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்தோம், ஆனால், இந்த பெரும் துயரங்கள், எங்களது ஒற்றுமையை குலைத்துவிட முடியாது. நாங்கள் ஒருவரையொருவர் அறிந்தது இல்லை, ஆனால் நாங்கள் ஒரே குரலில் பாடினோம்.

நாங்கள் ஸ்பெயினையும், அதன் மக்களையும் நேசித்தோம். எங்கள் கவிதைகள், அவர்கள் தங்களது எதிரிகளுடனான போராட்டத்தில் வென்று, மீள வேண்டும் என்று வாழ்த்தினோம். அந்த நம்பிக்கை எங்கள் ஒற்றுமையை வலுப்படுத்தியது.

pablo neruda

இப்போது, ஸ்பானியக் கவிஞர்கள் எங்களுக்காக பாடுகிறார்கள். அவர்கள் ஒரு புதிய வாழ்வை, ஒரு புதிய அர்த்தத்தை, ஒரு புதிய இலக்கைச் சுட்டிப்பாடுகிறார்கள்.

வலி மிகுந்ததாக இருந்ததாலும், அவர்களது கவிதை வரிகளை வாசிக்கும் போது, ஒருவரின் அச்சங்கள் காணாமல் போகும். இந்தப்பாடல்கள், உறுதிமிக்க செயல்பாடுகளுடன் மிகுந்த நெருக்கம் கொண்டவை, அத்தகைய செயல்பாடுகளுடன் இணைந்து கொள்பவை. அவை, ஸ்பானிய மக்கள் இயக்கத்தின் அடி ஆழத்தில் இருந்து முளைத்தவை. கியூபாவை மனதில் நிறுத்தி, இந்தக் கவிஞர்கள் தங்கள் சொந்த மக்களின் விடுதலைக்காக போராடினார்கள்.

கவிஞர் கொன்சாலோ அபாட், இப்படி எழுதினார்...

....நான் எனது வாழ்வை புதிதாய்த் துவக்க விரும்புகிறேன்...

ஹவானாவில் ஒளிரும் சூரியனுக்குக் கீழே..!

கவிஞர் ஏஞ்சல் சாண்டியாகோவின் வரிகள்...

ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பெருங்கடலை நான் வற்றச் செய்வேன்...

ஏனெனில் அந்தப் பெருங்கடல் எனது வழியில் குறுக்கிடுகிறது...

நான் அதைக் கடக்க விரும்புகிறேன்... எனது ராணுவ பூட்ஸ்கள் நனையாமல்..!

கவிஞர் சர்லோஸ் ஆல்வாரெஸ்...

...நான் நம்பிக்கையைத் தழுவுவேன்...

கியூபா எனக்கு அதை அளித்திருக்கிறது...

ஸ்பெயினின் காயங்களை ஆற்றுவதற்காக,

நம்பிக்கையை என் இதயத்தில் அழுத்தியிருக்கிறது...

pablo neruda

கவிஞர் ஆண்டானியோ ரோட்ரிக்ஸ்...

...இல்லை, நான் உன்னை கண்டுபிடிக்கவில்லை...

ஓ, கியூபா... நீ இங்கே இருக்கிறாய்...

நான் உனது கரும்புகளை உன்னுடன் சேர்ந்து வெட்டுகிறேன்...

சுவர்களிலும், கதவுகளிலும் உனது போஸ்டர்களை ஓட்டுகிறேன்...

அந்தி நேரத்தில் உனது கடற்கரை மீது நின்று இந்தக் கவிதையை எழுதுகிறேன்...

கவிஞர் ஏஞ்சல் கன்காலஸ்...

ஒரு குருட்டுபுயல் இந்த நிலத்தை விழுங்கட்டும்...

அல்லது, இந்தச் சமவெளியில் சொர்க்கம் சரிந்து விழட்டும்...

எனது கண்களில் கியூபா மின்னுகிறது. ஒரு பெருந்தீயைப் போல...

எப்போதும் அணையாத ஒளியைப் போல!

கவிஞர் ஏஞ்சலா பிகுவேரா…

ஓ, கியூபா... உனது மக்கள் விடுதலை அடைத்து விட்டார்கள்...

அவர்கள், தங்கள் விலங்குகளை உடைத்து எறிந்துவிட்டார்கள்...

நேர்கொண்ட நம்பிக்கையின் வழியில் ஊழிக்காற்றுக்கு எதிராக நடைபோடுகிறார்கள்...

இதனிடையே, ஸ்பானிய மக்கள்,

துரோகிகளால் விற்கப்பட்டு, ஓடுக்கப்பட்டு விட்டார்கள்...

அவர்கள் தங்கள் கண்ணீரை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்...

அவர்களது நூற்றுக் கணக்கான காயங்களில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது..!

இன்னும், தங்களது கவிதைகளை எழுத முடியாத அல்லது கொலை செய்யப்பட்டு விட்ட பிராஸ் டி ஒட்டேரோ, ரபேல் ஆல்பெர்ட்டி மற்றும் பல கவிஞர்கள் - இந்தத் தொகுப்பில் இடம்பெறாத அந்த கவிஞர்களின் பாடல்கள் மட்டுமல்ல, இப்போதுதான் விழிப்புணர்வு பெற்று, ஒரே குரலில் தங்களது கவிதை வரிகளையும் இணைத்துக்கொண்ட கவிஞர்களின் பாடல்களும் ஒலிக்கின்றன. நம்மோடு இணைந்து, ஸ்பானிய கவிஞர்களும், கியூபாவை ஆதரிக்கின்றனர். அவர்களின் ஆதரவுக் குரல், நமக்கு புதிய பலத்தைக் கொடுக்கிறது. நமது வேகத்தைக் கூட்டுகிறது.

ஏபிஎன் இன்டர்ரோனால்

நியூஸ் புல்லட்டின், ஜீலை 5, 1963.

முந்தைய பகுதி:

மரண தருணத்தின் சுவடுகள்! ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 17

pablo neruda paththirikaiyalar pablo neruda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe