ஐந்து வருடங்கள் அவதிப்பட்ட சிறுமி; நம்ப மறுத்த கூட்டுக் குடும்பம் -  ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :19 

parenting-counselor-asha-bhagyaraj-advice-19

பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்ட குழந்தைக்கு கவுன்சிலிங் கொடுத்ததைப் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே விவரிக்கிறார்.

பதிமூன்று வயது டீன் ஏஜ் சிறுமியுடன் ஒரு பெற்றோர் வந்தனர். தன் மகள் கத்துவது, தட்டை வீசுவதுபோன்றுமுரட்டுத்தனமாக நடந்து கொள்கிறாள் என சொல்லி கவலைப்பட்டனர். அவள் நன்றாகத்தான் இருந்தாள், ஆனால் ஏன் இப்படி மாறிவிட்டாள் என்றே புரியவில்லை என்றனர். அவர்கள் மாமா, தாத்தா, பாட்டி, சித்தப்பா என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருவதாக சொன்னார்கள். பொதுவாக நான் டீன் ஏஜ் குழந்தைகள் என்றால் தனியாகத் தான் கூப்பிட்டு பேசுவோம். ஏனென்றால் பெற்றோர் முன்னிலையில் அவர்கள் மனதில் உள்ளதை உள்ளபடி பகிர மாட்டார்கள்.

நானும் அந்த சிறுமியுடன் தனியாக பேச ஆரம்பித்தேன். பொதுவாக எல்லா குழந்தையும் இப்படி ஒரு புகாருடன் வரும்போது, என்னிடம் நன்றாக சிரித்து தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் அந்த சிறுமி மிகவும் உடைந்து அப்படி ஒரு அழுகை. நான் அவள் என்ன சொன்னாலும் நம்புவேன் என்று உறுதி அளித்த பின்னே, அவளுக்கு நடந்ததை சொன்னாள். அந்த சிறுமி தனது ஐந்து வயதிலிருந்தது பாலியல் தொல்லையை அனுபவித்து வந்திருக்கிறாள். கேட்பதற்கே மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த பாலியல் தொல்லையை அவளுக்கு கொடுத்து வந்தது அவளுடைய மாமா தான். தன் பெற்றோர் வேலை பார்ப்பதால், அந்த நபரே அதிகமாக வீட்டில் தனியாக நேரம் செலவழித்து இருந்திருக்கிறார். குளிக்க வைப்பது, தூங்க வைப்பது என்று எப்போதுமே அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த சிறுமியுடன் தவறாக நடந்திருக்கிறார்.

தனக்கு இதன் பொருள் முதலில் புரியவில்லை என்றாலும்,ஏழு வயது ஆகும்போது மெல்ல மெல்ல புரிந்து இருப்பதாகச் சொன்னாள். இதனை தனது பெற்றோருடன் பகிர்ந்தும் இருக்கிறாள். வேதனையான விஷயம் என்னவென்றால், இவள் கூறியதை பெற்றோர் நம்பி ஆதரவு கொடுக்கவில்லை. அவர் தூங்க வைக்கும் போதோ, குளிக்க வைக்கும்போதோ தவறி அப்படி தொட்டிருப்பார் என்றும்,அவரை இவள்தான் தப்பாக புரிந்து வைத்திருக்கிறாள் என்றே கூறி பொருட்படுத்தவில்லை. அம்மாவிற்கு ஓரளவு புரிந்தாலும், குடும்ப நிலைக்காக ஒன்றும் செய்யவில்லை. தப்பாக இருக்காது, அமைதியாக இரு என்றே சொல்லிவிட்டார்கள் என்றாள். வேறு யாரிடமும் இதைப் பற்றி எப்படி கூறுவது என்று தெரியாமல் இந்த சிறுமி இத்தனை வருடங்களாக என்னை பார்க்க வந்த நாள் வரை அனுபவித்து வந்திருக்கிறாள்.

மேலும் தனக்கு ஏழு வயதிலிருந்து வயிற்றிலும் ஏதோ ஒரு வலி இருப்பதாக வேறு சொன்னாள்.நான் அவளது பெற்றோரை அழைத்து, அந்த குழந்தையிடம் தகாத முறையில் நடந்த அந்த உறவுக்கார நபரையும் அழைத்து வரவேண்டும் என்று கூற, அவரும் வந்தார். அந்த சிறுமி சொல்லியே அவளது பெற்றோர் நம்பவில்லை எனவே நான் சொன்னால், கண்டிப்பாக அவர்கள் நம்பப் போவதில்லை என்று எண்ணியே, அந்த பெற்றோர் மற்றும் அந்த சிறுமி முன்னிலையிலும் அந்த நபரிடம் பேசினேன். நீண்ட நேரம் கழித்து ஒருவழியாக ஒத்துக் கொண்டார். முதலில் தன் மகளாகத்தான் நினைத்தேன்.ஆனால் அதையும் மீறிதவறாக நடந்துகொண்டதாக ஒத்துக்கொண்டார். இறுதியாக நம்பிய பெற்றோர் அந்த ஆளை அடிக்கும் அளவுக்கு போய்விட்டனர். நான் அவர்களை முதலில் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று உடலை பரிசோதிக்குமாறு சொன்னேன்.

அந்த பெண்ணிற்கு வயிற்று வலி மட்டுமல்ல, அவளது அந்தரங்க இடத்திலும் அத்தனை காயங்கள். இந்த சிறுமிக்கு குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். அவள் தனது பெற்றோரிடம் சொல்லியும் இந்த சம்பவத்தை பல வருடங்கள் நம்பாததினால் அதற்கு பிறகு எது நடந்தாலும் அவர்களிடம் சொல்வதற்கு தயங்கினாள். அவளது வீட்டை பார்த்தாலே பயந்தவளாக இருந்தாள். இந்த உலகத்தில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை கொடுத்து, அவளுக்கு பிடித்தவற்றில் நேரம் செலவழித்து கொஞ்சம் கொஞ்சமாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.முதலில் தன் குழந்தை சொல்வதை அந்த பெற்றோர்கள் நம்பவேண்டும். உறவுகளுக்கு முக்கியம் கொடுத்து தன் சொந்த குழந்தையை நிராகரிக்க கூடாது. நமது அரசு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படும் குழந்தைகளுக்காக என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் நிறைய இடத்தில் இதற்கான விழிப்புணர்வு சரியாக இல்லை. பெற்றோரில் யாரேனும் ஒருவரோ அல்லது பெற்றோர் நம்பவில்லை என்றாலும் ஆதரவு கொடுக்கும் ஏதோ ஒரு நபரின் உதவியோடு அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளிக்கலாம் . நிச்சயமாக அரசாங்கம் இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறது.

இதையும் படியுங்கள்
Subscribe