ADVERTISEMENT

முத்தக்காட்சி வந்தால் சேனலை மாத்தாதீங்க - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :11

05:38 PM Nov 21, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில முறைகளையும், பிள்ளைகள் செய்கிற தவறுகளின் தன்மைகளை உணரும் விதங்களையும், அதை சரி செய்வதற்காக எடுக்கிற முயற்சிகளைப் பற்றியும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை நிபுணர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே விவரிக்கிறார்.

14 வயது பெண் குழந்தை, தன் அம்மாவிடம் வந்து நான் பார்ன் படங்கள் பார்த்ததாக சொல்கிறாள். மேலும் பார்க்க ஆவலாக உள்ளதாகவும் சொல்கிறாள். அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாகவும், மகள் எதோ பெரிய தவறு செய்து விட்டது போலவும் நினைத்துக் கொண்டு இதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை என்றார். முதலில் அந்த அம்மாவிடம் பார்ன் படங்கள் குறித்த புரிதல் இருக்கிறதா என்று கேட்டால் திருமணத்திற்கு முன்பு வரை எதுவுமே தெரியாது, திருமணத்திற்கு பிறகு தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை என்றிருக்கிறார்.

அதோடு மகள் தன்னிடம் வந்து பார்ன் படங்கள் பார்த்ததாக சொல்லும் அளவிற்கு அவளுக்கு அம்மாவிடம் மரியாதையும், சுதந்திரமும் இருந்திருக்கிறதே அதை முதலில் பாராட்டினீர்களா? இதை எப்படி கையாள்வது என்று யோசிப்போம் என்று அவளுக்கு தைரியம் சொன்னீர்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருந்தது. இந்த கவுன்சிலிங்கிலும் குழந்தைக்கு முன்பு அம்மாவிடம் தான் நிறைய பேச வேண்டி இருந்தது.

பெண் உடலில் ஏற்படுகிற மாற்றம் குறித்த கேள்விகளை இளம் வயதில் நீங்கள் யாரிடம் கேட்டு தெரிந்து கொண்டீர்கள் என்றதற்கு யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. கேட்பதற்கு தயக்கமாக இருந்தது என்றார். ஆனால், உங்களுடைய மகளுக்கு அந்த தயக்கம் இல்லை அல்லவா? அதற்கு நீங்கள் முதலாவது பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். அப்போது தான் அம்மாவிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற தைரியம் குழந்தைகளுக்கு வரும் என்றேன்.

மேலும் தொலைக்காட்சிகளில் முத்தக்காட்சிகள் வந்தால் உடனடியாக டிவியை அமர்த்துவது, சேனல் மாற்றுவது போன்று எதுவும் செய்யாமல் வெளிப்படையாக அது போன்ற சமயங்களில் பேசுங்கள் என்றேன். அதற்கு அந்தம்மாவோ “ஒரு அம்மாவாக நான் எப்படி இதை பேச முடியும்”? என்றார். குழந்தைகள் தைரியமாக பேச ஆரம்பிக்கும் போது பெற்றோரும் பேசத்தான் வேண்டும் என்று இருவரையும் நேரில் வர வைத்து பேச வைத்தோம்.

அந்த குழந்தை முதலாவதாக தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டது. நான் அது போன்ற படங்களை பார்த்திருக்க கூடாது தான். ஆனால் அதை பார்த்து விட்டேன். இப்பொழுதெல்லாம் அதைப் பார்க்க தோன்றுகிறது என்றது. அந்த அம்மாவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. பிறகு நான் விளக்கினேன். எல்லாவற்றையும் செய்வதற்கும் பார்ப்பதற்கும் ஒரு வயது இருக்கிறது. இந்த வயதில் ஹார்மோன் மாற்றத்தால் விரும்புகிற விசயத்தை பார்க்கிற, அதே சமயத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றேன். மூன்று மணி நேரம் பேசியதில் அந்த குழந்தைக்கு ஒரு புரிதல் வந்தது.

பிறகு பிரண்ட்ஸ் யாரு என்பதிலும், டேஞ்சரானவர்கள் யார் என்பதிலும் நமக்கு ஒரு புரிதல் இருக்கிறது. இதற்கிடையில் டிரிக்கர் பெர்சன் என்று ஒருவர் இருக்கிறார் அவரையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தான் நம்மை பெற்றோருக்கு தெரியாமல் ஒரு விசயத்தை செய் என்று தூண்டுபவராக இருக்கிறார். அது போன்ற ஒருவர் தான் முதன் முதலாக இந்த குழந்தைக்கு பார்ன் படங்களை காட்டியிருக்கிறார். இனிமேல் அவரோடு பார்த்து பழக வேண்டும் என்று அறிவுறுத்தினோம்.

அத்தோடு ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகும் உணர்ச்சிகளைத் தெரிந்து கொள்வதற்கும் ஒரு வயது இருக்கிறது. இல்லையென்றால் சிறிய வயதில் கர்ப்பமடைந்து தாயாகும் வாய்ப்பு வந்து விடும் என்று சொல்லி புரிய வைத்ததும், அந்த குழந்தைக்கு பிரச்சனையின் தன்மை புரிந்தது. தன்னை சரி செய்து கொள்வதாகவும் இனிமேல் டிரிக்கர் பெர்சன்களிடம் கவனமாக நடந்து கொள்வதாக சொன்னாள். சிறிய குழந்தைகளுக்கு அதிகபட்சமாக கற்பிப்பதாக திணிக்கவும் கூடாது. நம்மை மீறி இணையத்தில் பல விசயங்களை தெரிந்து கொள்கிறார்கள். அதை நாம் முதலில் புரிந்து கொண்டு, நாம் பலவற்றை தெரிந்து கொண்டு குழந்தைகளை புரிதலுக்கு உட்படுத்த வேண்டும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT