Skip to main content

செக்ஸ் கல்வி பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை : 02

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

 parenting counselor Asha Bhagyaraj  advice 02

 

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களுக்குத்தான் நிறைய விசயங்களை கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. செக்ஸ் கல்வி பற்றிய அடிப்படை புரிதலே பல பெற்றோர்களுக்கு இல்லை. அது குறித்து குழந்தைகளுக்கும் அந்த அந்த பெற்றோர்கள் சொல்வதில்லை. தான் கவுன்சிலிங் வழங்கிய ஒரு குழந்தையைப் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

 

கொரோனா காலத்தில் என்னிடம் கவுன்சிலிங் வந்த ஒரு ஆண் குழந்தை, வீடியோ காலில் பல நாட்கள் வீடியோவை ஆன் செய்யவே இல்லை. தனக்கு எந்தப் பெண்ணிடமும் பேசப் பிடிக்கவில்லை என்பதை, அதன் பிறகு அந்த குழந்தை சொன்னது. ஏன் என்பது தொடர்ச்சியாக பேசிய போது தெரிய வந்தது. தவறான பாலியல் வீடியோக்களை அந்தக் குழந்தைகள் இணையம் வழியாக அதிகம் பார்க்க நேர்ந்திருக்கிறது. அதை சில குழுக்களில் சக நண்பர்களே பகிர்ந்திருக்கிறார்கள். அதைப் பார்த்த பின்னர் அது பிடிக்காமல் பெண்கள் மீது ஒரு வெறுப்பு அந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கிறது. பதினாறாவது செஷனில் தான் அந்தக் குழந்தை என்னிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தது. 

 

டீன் ஏஜ் காலத்தில் குழந்தைகளுக்குத் தேவையான புரிதலை நாம் வழங்க வேண்டும். உடல்நிலை மாற்றங்கள் குறித்த விளக்கங்களை அந்தக் குழந்தைக்கு நான் வழங்கினேன். மாதவிடாய், செக்ஸ், உடல் ஈர்ப்பு, ஹார்மோன் பருவ மாற்றம் குறித்தெல்லாம் பேசி புரிய வைத்தேன் அந்தக் குழந்தையின் பெற்றோருக்கும் குழந்தையிடம் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து நான் கவுன்சிலிங் வழங்கினேன். இப்ப அந்த குழந்தை நல்லபடியாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டேன். எனவே செக்ஸ் கல்வி பற்றி பேச வேண்டிய நேரத்தில் மூடி மறைக்காமல் பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தினை பெற்றோர்கள் உணர வேண்டும்.