Advertisment

விண்வெளியை வென்றவர்கள்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி-7

pablo neruda

Advertisment

எல்லையற்ற விண்வெளியில் பயணித்த இரண்டு விண்வெளி வீரர்களின் சாதனையைப் பற்றி பேசும்போது, அவர்களுடைய சாதனையை முழுமையாக விவரிப்பதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் திணறுகிறோம். (வோஸ்டாக்-3, வோஸ்டாக்-4) என்ற இரண்டு விண்கலங்களில் 1962 ஆகஸ்ட் மாதம் அடுத்தடுத்த நாட்களில் ஆண்ட்ரியன் நிகோலோயேவ், பாவெல் போபோவிச் என்ற இரண்டு சோவியத் ரஷ்யா விண்வெளிவீரர்கள் பூமியைச் சுற்றி விண்வெளியில் பறந்தனர்.

இருவரும் தனித்தனி விண்கலங்களில் பறந்தாலும் ஒருவருக்கொருவர் ரேடியோ தொடர்பு மூலம் பேசினார்கள். அண்ட்ரியன் நான்கு நாட்கள் விண்வெளியில் சுற்றித் திரும்பினார். பூமியில் இருக்கும் விஞ்ஞானிகளோடு தொலைக்காட்சி வழியாக முதன்முதலில் பேசி சாதனை நிகழ்த்தினார். இருவரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பி உலகை வியக்க வைத்தனர். அவர்களுடைய சாதனையை அற்புதமானது என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தி விவரிக்க முடியாது. அது, பெருங்கடல் நீரை டீ-ஸ்பூனில் இறைக்க முயற்சிப்பதாகும். விண்வெளியை அளவிடும் முயற்சியாகும்.

Andrian-Nikolayev

Advertisment

நமது இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளியில் சுழன்றார்கள், நீந்தினார்கள். நமது விண்வெளி வீரர்கள் என்று சொல்வதற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் சோவியத் ரஷ்யாவுக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல. உலகம் முழுமைக்கும், அறிவியலுக்கும், மனிதகுல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல கவிதைக்கும்கூட சொந்தமானவர்கள்.

அந்த அற்புத நிகழ்வை விவரிக்க புதிய வார்த்தைகளை கவிதை தேடுகிறது. இன்றைய சோசலிஸ உலகத்தில் நிகழும் புதிய சாதனைகளை கவிதைகளின் வார்த்தைகள்தான் முன்கூட்டியே உலகிற்கு அறிவித்தன என்பதை மறந்துவிடக்கூடாது.

Pavel-Popovich

மாபெரும் தூதரும் காதலருமான ஜூலெஸ் வெர்னே எதிர்கால உலகம் குறித்த அற்புதமான கற்பனைக் கதைகளை எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளில் வானத்தையும், பூமிக்கு அடியிலான பகுதிகளையும் அழகான தெவிட்டாத வார்த்தைகளால் வர்ணித்திருப்பார்.

சமீபத்தில் நான் மாஸ்கோ சென்றிருந்தேன். அங்கு, முதன்முறையாக அணு இயற்பியல் தொடர்பான அகராதியை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அணு, உலை மற்றும் சில வார்த்தைகளை மட்டுமே நான் அறிந்திருந்தேன். எனவே, அந்த அற்புதமான அகராதி புத்தகத்தின் பக்கங்களில் இருந்த ஆயிரக்கணக்கான புதிய வார்த்தைகள் எனக்கு வியப்பை அளித்தன. அந்த வார்த்தைகளுக்கு எனக்கு முற்றிலும் அர்த்தம் தெரியவில்லை. எனினும், அந்த வார்த்தைகள் கவித்துவம் மிக்கவையாக, புதிய பாடல்கள், கவிதைகள் இயற்றுவதற்கானவையாக இருந்தன.

அதுமட்டுமின்றி, தற்கால மனிதனுக்கும் மர்மம் மிகுந்த பிரபஞ்சத்திற்கும் இடையிலான உறவை பலமாக கட்டுவதற்கு பயன்படுபவையாக இருந்தன. அந்த புத்தகத்தின் வார்த்தைகளை பார்த்த தருணத்தில், காலங்களின் பின்னால் கவிதை இருப்பதை உணர்ந்தேன்.

அறிவியலை கருவாகக் கொண்ட நாவல்கள், அவற்றைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்றாலும், மனிதனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. அவை, புவிச்சூழல் மற்றும் எதிர்காலத்தின் ஜாலங்களை உள்ளடக்கியவையாக இருக்கின்றன என்பதை அறிந்தேன். இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது!

இரண்டு சோவியத் விண்வெளிவீரர்கள் புவிக்கோளத்தில் இருந்து வெகு தொலைவில் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனையின்கீழ் இருந்தனர். ஆனாலும், தங்களுக்குள் ரேடியோ தொடர்பை ஏற்படுத்தி பேசிக்கொண்டனர். மர்மங்கள் நிறைந்த விண்வெளியில், சாப்பிட்டு, படுத்துறங்கிய அந்த வீரர்களை நமக்கான கவிதைநாயகர்களாக நான் கருதினேன். அவர்கள், ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடித்த பெருங்கவிஞர்கள்.

அந்தக் கவிஞர்கள் ஒரு புதிய உண்மையை - பிரபஞ்சம் எல்லையற்றது - என்ற உண்மையை வெளிப்படுத்தினார்கள். விண்வெளி வீரர்களாகவதற்கு முன்பே இதை அவர்கள் அறிந்துவிட்டார்கள்.

புவிக்கோளத்திற்கு மேல் மிக உயரத்தில் பறந்து சென்ற அந்த வீரர்கள்தான், உலகத்திலேயே மிகவும் தகவலறிந்த மனிதர்கள். அவர்கள்தான், இந்தப் பூமியின் உண்மையான வடிவத்தை நேரில் பார்த்தவர்கள். அதற்கு முன்பு நாம் புவியின் வடிவங்களை உணர்ந்தது இல்லை. தற்போது, இந்த புவி நமது விண்வெளி வீரர்களின் கண்களுக்கு, மேசை மீது இருக்கிற ஒரு ஆப்பிளைப் போன்று தோன்றுகிறது.

நான் இன்றும் சொல்வேன், இந்த விண்வெளி வீரர்கள்தான் புவிக்கோளத்தில் தேசபக்தியின் புதிய வடிவத்தை நிறுவியவர்கள்.

எனது சொந்தபந்தங்கள் மற்றும் மூதாதையர்கள் தங்களது கிராமம், நாடு, கண்டம் அல்லது புரட்சிகளைப் பற்றி - அவை பெரிதோ - சிறிதோ - பேசிப் பெருமை கொள்வார்கள்.

தற்போது, நாம் வாழ்கிற கோளைப் பற்றியே பெருமை கொள்கிற சகாப்தத்திற்குள் நுழைந்திருக்கிறோம். விரைவில், செவ்வாய்க் கோளின் அழகையும் ரசிக்கும் நாள் வரும், வெள்ளிக் கோளின் அழகு மிளிரும் மலைத்தொடர்களைக் காணும் நாள் வரும், சனிக் கோளையும் அந்தக் கோளைச் சுற்றியுள்ள அற்புதமான வளையங்களையும் காணும் நாள் வரும், அப்போது நாம் அந்தக் கோளில் வாழ்பவர்களோடு, எங்கள் மலைகளின் அழகும், ஏரிகளும், எங்கள் மனிதர்களும் எத்தனை அழகு என்று பெருமிதத்துடன் வாதிடலாம்! (வெள்ளி, செவ்வாய், சனி கோள்களைப் பற்றி முழுமையாக அறியாத நாட்களில் பாப்லோ நெருடா இதை எழுதியிருக்கிறார் என்பதை நினைவூட்டிக் கொள்ளவும்)

பிறகு, நாம் நமது புவி மீதான உண்மையான தேசபக்தியுடன் ஒன்றுபடுவோம் “வெப்ப”ப் போரும் சரி, “பனி”ப்போரும் சரி மறைந்து நன்மை மலரும், நாம் நமது கோளை உண்மையுடன் நேசிப்போம், அதைப் பாதுகாப்போம்.

புதிய விண்வெளி அறிவியலுக்கு வாழ்த்துக்கள்!

சோவியத் விண்வெளி வீரர்கள் நீடுழி வாழ்க!

புவிக்கோளம் நீடுழி வாழ்க!

இழ்வெஸ்தியா,

ஆகஸ்ட் 18, 1962

முந்தைய பகுதி:

ஏகாதிபத்தியம் தோற்றோடும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி-6

அடுத்த பகுதி:

ஒரு உண்மையான கூட்டுச் சாதனை...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி-8

journalist pablo neruda. pablo neruda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe