Advertisment

ஏகாதிபத்தியம் தோற்றோடும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி-6

pablo neruda

Advertisment

கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த மிகப்பெரிய மனிதர்கள், யுத்தத்திற்கும், கொடுமைகளுக்கும், புரிதல் இன்மைக்கும் எதிராக, தங்களுடைய அனுபவங்களையும், இறவாப் புகழ்பெற்ற புத்தகங்களையும் நமக்கு வழங்கிச் சென்றிருக்கிறார்கள். லியோ டால்ஸ்டாய், எமிலி ஜோலா அவருக்கு பிறகு, ரோமைன் ரோல்லாண்டு, ஹென்றி பார்பஸ்ஸே, ஜாக் லண்டன், தாமஸ் மான் உள்ளிட்டோர் யுத்தத்திற்கு எதிராக போராடினார்கள். ஆனால், யுத்தத்தை தடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர்.

இன்றைய எழுத்தாளர்களாகிய நாங்களும் அதைச் செய்யும் தகுதி பெற்றிருக்கிறோம். யுத்தத்தை தடுக்கும் தகுதியையும் பெற்றிருக்கிறோம். இந்த உலகம் இப்போது நிறைய மாறியிருக்கிறது. இந்த மாற்றங்கள் நம்மையும் பாதித்திருக்கிறது. இன்றைக்கு ஒவ்வொரு எழுத்தாளரும் மக்களோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள்.

சோவியத்தின் நிகோலாய் டிகோனவ் மாதிரியான கவிஞர்கள் அமைதிக்கான போராட்டத்தில் பங்கெடுத்தது மட்டுமின்றி, கோடிக்கணக்கான சோவியத் மக்களின் உணர்வுகளை கவிதைகளாக வடித்தார். சோவியத்தை காட்டிலும் யுத்தத்தின் வலியை வேறு எந்த நாடு அறிந்திருக்க முடியும்.

Advertisment

பாப்லோ பிகாஸோ மிகப்பெரிய ஓவியர் மட்டுமல்ல. அவருடைய அமைதிப் புறா ஓவியமும், செய்தித்தாள்களுக்காக அவர் சிறப்பாக வரைந்த சிறு சிறு ஓவியப் போஸ்டர்களும் பிரான்சின் தெற்குப் பகுதியில் வினியோகிக்கப்பட்டன. அந்த ஓவியங்கள் பூமியின் அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களையும் வென்றன.

pablo neruda

இந்த நேரத்தில் எனது செயல்பாடுகளையும் சிறிதளவு குறிப்பிட விரும்புகிறேன். அமைதியை வலியுறுத்தியும், தேசிய சுதந்திரத்தை ஆதரித்தும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பல்வேறு தலைநகர்களில் நான் கவிதைகளை வாசித்திருக்கிறேன். எனது கவிதைகளை நூற்றுக்கணக்கான நகர மைதானங்களிலும், சந்தைகளிலும், பள்ளிகளிலும், அரங்கங்களிலும், தெருக்களிலும் வாசித்திருக்கிறேன். அமைதிக்கான கவிதைகளை கூடியிருந்த மக்கள் அதீத குரலெடுத்து ஆதரித்ததை நான் பார்த்திருக்கிறேன். எனவேதான், நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிற யுத்தம் அலுவலகச் சுவர்களைத் தாண்டி, உலகம் முழுவதும் பரவியிருப்பதாக என்னை எண்ணச் செய்கிறது. இன்றைக்கு உலகம் முழுமையும் எங்கள் போர்க்களமாக மாறியிருக்கிறது. அமைதியை விரும்பும் போர்வீரர்களாக மக்களே மாறியிருக்கிறார்கள்.

எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் அனைத்தும் வேறுபடுகிறது. எங்களுடைய கோட்பாடுகள், ஓவியம், கவிதை, இசை ஆகிய எங்கள் கலை அதிகப்படியான சக்திவாய்ந்தவையாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஏனெனில், அவை உறுதிவாய்ந்த தேசங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

அமைதிக்கான போர்க்களத்தில் போராடிய ஏராளமான கதாபாத்திரங்களில் ஆங்கில விஞ்ஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் முக்கியமானவர். அவருடைய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் போல அவரும் அணு சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராடினார். அணுகுண்டு சோதனைக்கு எதிராக கண்டனங்களையும், எதிர்ப்பையும் முன்வைத்து போராடும் மக்களில் ரஸ்ஸல் மிகச்சிறந்தவர் என்று நான் எழுதியிருக்கிறேன். அவர் போராடும் மக்களின் ஒரு அங்கமாக இருந்தார். யுத்தத்திற்கு எதிராக அவர் நிச்சயமாக பங்களித்திருக்கிறார். அந்த வெற்றி விரைவாகவோ, தாமதமாகவோ மக்களால் வென்றெடுக்கப்படும்.

அமைதிக்கு எதிரான யுத்தம் நிச்சயமாக முறியடிக்கப்படும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த யுத்தம் விரட்டியடிக்கப்பட வேண்டும். அறிவை உள்வாங்கிய மனச்சாட்சியுள்ள படைப்புத்திறன் மிக்க கோடிக்கணக்கானவர்கள் அந்த கொடூர யுத்தத்தை விரட்டி அடிப்பார்கள்.

ப்ராவ்தா, ஜூலை5, 1962

முந்தைய பகுதி:

கியூபர்களின் உறுதிமிக்க போராட்டம்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி #5

அடுத்த பகுதி:

விண்வெளியை வென்றவர்கள்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி-7

journalist pablo neruda. pablo neruda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe